அரசு பள்ளிக்கூடங்களை தேடி வரவேண்டும்

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளிக்கூடங்களும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களும் ஏராளமாக தொடங்கப்பட்டன.

Update: 2018-09-19 22:30 GMT
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளிக்கூடங்களும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களும் ஏராளமாக தொடங்கப்பட்டன. பின்பு ஆட்சி நடத்திய முதல்–அமைச்சர்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும், நிதிஒதுக்கியும், தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துவருவது மிகவும் கவலையளிக்கத்தக்க வகையில் உள்ளது. பல பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால், 1,053 பள்ளிக்கூடங்களை மற்ற பள்ளிக்கூடங்களோடு இணைத்துவிடவும், 1,950 பள்ளிக்கூடங்களுக்கு நிதியை நிறுத்துவதற்கும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் முதல்வகுப்பில் 3 லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளநிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையைவிட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்ந்திருப்பது நிச்சயமாக கவலை தரத்தக்கவகையில் இருக்கிறது. ஏறத்தாழ 10 சதவீத மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது. 

இதுபோல, 6–வது வகுப்பு மாணவர் சேர்க்கையிலும் அரசு பள்ளிக்கூடங்களில் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அரசு பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும் முதல்வகுப்பில் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு 9 சதவீத மாணவர்கள் குறைவாக சேர்ந்துள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அரசு பள்ளிக்கூடங்களிலும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கும்நிலையில், அந்த மாணவர்களெல்லாம் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் தெள்ளத்தெளிவான உண்மையாகும். இப்போதெல்லாம் அரசு பள்ளிக்கூடங்களையும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களையும் விட்டுவிட்டு, தனியார் பள்ளிக்கூடங்களில் சேரும் மோகம் சமுதாயத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக்காரணம், 2010–ம் ஆண்டு மத்திய அரசாங்கம் நிறைவேற்றி, 2011–ம் ஆண்டு தமிழக அரசிதழிலும் வெளியிட்ட கல்வி உரிமை சட்டத்துக்கான விதிகள்தான். இந்த சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிக்கூடங்களில் 25 சதவீத இடங்களை பொருளாதாரத்தில் நலிந்த குடும்ப குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு ஏழை வீட்டுபிள்ளை என்றாலும் சரி, பெரும் செல்வந்தர்கள் அதிககட்டணம் செலுத்தும் பள்ளிக்கூடங்களில் இலவசமாக படிக்கச்செய்யும் சட்டம் இது. அந்த பிள்ளைகளுக்கான கல்வி கட்டணத்தை மத்திய–மாநில அரசுகள் அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு வழங்கியது. இந்த சட்டம் வந்தநேரத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இல்லை. எனவே, ஏழை குடும்ப மாணவர்கள் எல்.கே.ஜி. வகுப்பில்சேர தனியார் பள்ளிக்கூடங்களுக்கு போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எல்.கே.ஜி. வகுப்பிலிருந்து தொடர்ந்த கல்வி 12–ம் வகுப்புவரை அந்த பள்ளிக்கூடத்திலேயே தொடர வகைசெய்கிறது. எல்.கே.ஜி., யு.கே.ஜி. தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு, 1–ம் வகுப்பு, 6–ம் வகுப்புக்கோ யாரும் அரசு பள்ளிக்கூடங்களை நாடுவதில்லை. மேலும் பெரும்பாலான குடும்பங்களில் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி படிக்கவேண்டிய ஆசை மேலோங்கி இருக்கிறது. தமிழ், ஆங்கிலம் தவிர, இன்னொரு மொழியை கற்கவேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்களின் விருப்பமாக இருக்கிறது. தமிழக அரசு இதையெல்லாம் புரிந்துகொண்டு, அனைத்து அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை உடனடியாக தொடங்கவேண்டும். மாணவர்கள் விரும்பும் கல்வியை அவர்கள் கற்றுக்கொள்வதற்கு தேவையான வசதிகள் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் செய்யப்படவேண்டும்.

மேலும் செய்திகள்