பிரதிநிதித்துவம் இல்லாத 20 தொகுதிகள்

டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லுமா?, செல்லாதா? என்ற வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகி விட்டது.

Update: 2018-10-25 23:00 GMT
அ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கி வருகிறது. டி.டி.வி.தினகரன் தலைமையில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ இயங்கி வருகிறது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்டு 22–ந்தேதி ஜக்கையன் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். முதல்–அமைச்சருக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்தது பற்றி சபாநாயகர் விளக்கம் கேட்டார். ஜக்கையன் மட்டும் திரும்ப வந்து விளக்கம் கொடுத்து விட்டார். மீதி 18 பேரும் விளக்கம் தராததால் பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். 

இந்த நீக்கத்தை எதிர்த்து 18 பேரும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அப்போது தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்றும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த 3–வது நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கம் செய்தது செல்லும் என்று நேற்று தீர்ப்பு அளித்தார். ஆக, இன்றைய நிலையில் இந்த 18 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை இழந்துள்ளனர். அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. 

தற்போதைய சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இப்போதுள்ள கணக்குப்படி, சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 108 உறுப்பினர்கள் தேவை. ஆனால் அ.தி.மு.க.விடம் 110 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இதுதவிர, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் இன்னும் எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. இவர்களும், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்தால் எண்ணிக்கை 116 ஆக உயரும். இப்போது, ஒன்று 18 பேரும் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீலுக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால், அப்பீலுக்கு செல்லாமல் தேர்தல் கமி‌ஷன் 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த வழிவிட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவம் இந்த 18 தொகுதிகளிலும் இல்லாமல் ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் பல அடிப்படை பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தகுதிநீக்கம் செய்த 18 பேரும் என்ன முடிவு எடுத்தாலும் அதன் தொடர் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு சென்றால் உடனடியாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு இறுதி தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும். இல்லையென்றால், தேர்தல் கமி‌ஷன் இன்னும் தாமதிக்காமல் இந்த 18 தொகுதிகளோடு, ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றத்தையும் சேர்த்து விரைவில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இரு கட்சிகளுக்கும் இடையேயுள்ள அரசியல் போரினால் இந்த 18 தொகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிப்பு அடையக்கூடாது. அதுதான் முக்கியம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மேலும் செய்திகள்