இலங்கை நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி

‘அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை’ என்று தமிழ்நாட்டில் கூறுவது, இலங்கையில் நடந்துள்ளது.

Update: 2018-10-29 22:26 GMT
கடந்த செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் சுப்பிரமணியசுவாமி ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திரமோடியையும், ராகுல்காந்தியையும் சந்தித்து பேசினார். அந்த சமயத்தில் ‘தந்தி’ டி.வி. செய்தியாளர் சலீம் அவரை சிறப்பு பேட்டி எடுத்தார். அந்த பேட்டியின்போது ராஜபக்சே, ‘இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தின்படி பிரதமர்தான், அதிபரைவிட அதிக அதிகாரமிக்கவர். எனவே, பிரதமராகத்தான் விரும்புகிறேன்’ என்று கூறினார். அப்போது இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ரனில் விக்ரமசிங்கேயை, அதிபர் சிறிசேனா தூக்கி எறிந்துவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக்கியதை பார்த்தால், ‘தந்தி’ டி.வி.யில் அவர் அன்று சொன்னது, இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் என்று எண்ண வைக்கிறது. ‘அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை’ என்று தமிழ்நாட்டில் கூறுவது, இலங்கையில் நடந்துள்ளது. நேற்றுவரை எதிரும் புதிருமாக இருந்த சிறிசேனாவும், ராஜபக்சேவும், இப்போது புதிதாக நண்பர்களாக ஆகிவிட்டார்கள்.

2015-ம் ஆண்டு தேர்தலில் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும், ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இப்போது சர்க்கஸ் பார் விளையாட்டுபோல, ராஜபக்சே கட்சியும், சிறிசேனா கட்சியும் கைகோர்த்துக்கொண்டது. 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் போர் முடிந்தநேரத்தில், ராஜபக்சே பகிரங்கமாகவே கூறினார். ‘விடுதலைப்புலிகளை ஒழிக்க எங்களுக்கு சீனாவும், பாகிஸ்தானும் கொடுத்த நவீன ஆயுதங்கள்தான் பெரிதும் உதவியது’ என்றார். இதுமட்டுமல்லாமல், ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு கொடுத்தார். கொழும்பு துறைமுகத்தில் புதிய கட்டமைப்புக்கு அனுமதி கொடுத்தார். இலங்கை கடற்கரையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்த வைத்தார். இப்போதும் ராஜபக்சேவுக்கு வேறு எந்தநாடும் வாழ்த்து சொல்லாத நிலையில் சீன அதிபர் வாழ்த்து சொல்லிவிட்டார்.

சிறிசேனா, ரனில் விக்ரமசிங்கேயை பதவிநீக்கம் செய்து, ராஜபக்சேயை பிரதமராக்கியதாக அறிவித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தாலும், ரனில் விக்ரமசிங்கே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல் சட்டத்தை மீறி ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளார். நான்தான் பிரதமர், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும். பெரும்பான்மை எனக்கு இருப்பதை நிரூபித்து காட்டுவேன் என்று கருத்து தெரிவித்தார். ஆனால், இதை ஏற்காத சிறிசேனா நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ந்தேதி வரை முடக்கி வைத்துள்ளார். நாடாளுமன்ற சபாநாயகர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் யார் பெரும்பான்மையை நிரூபிக்கிறாரோ அவர்தான் பிரதமர். தற்போதைய சூழ்நிலையில், ரனில் விக்ரமசிங்கே தான் பிரதமராக நீடிக்கிறார் என்று அறிவித்துள்ளார். 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேக்குத்தான், ராஜபக்சேயைவிட அதிக உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இனி குதிரைபேரம் தொடங்கி விடும். ஆக, இலங்கையில் ஒரு குழப்பமான நிலை நிலவுகிறது. இந்தியா கருத்து தெரிவிக்கும்போது, ஜனநாயக நலன்களும், அரசியல் சட்ட நடைமுறைகளும் மதிக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரின் கருத்தாக இருக்கிறது. இதற்கு சிறந்த தீர்வு, நாடாளுமன்றத்தை முடக்கியதை திரும்பப்பெற்று, உடனடியாக நாடாளுமன்றத்தில் யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்று உலகுக்கு காட்டுவதுதான்.

மேலும் செய்திகள்