ரனில் விக்கிரமசிங்கேயா?, ராஜபக்சேயா?

கடந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகு சிறிசேனா அதிபராகவும், ரனில் விக்கிரமசிங்கே பிரதமராகவும் பொறுப்பேற்றனர்.

Update: 2018-11-02 22:30 GMT
லங்கையில் பிரதமர் யார்? நான்தான் பிரதமர் என்று சொல்லும் ரனில் விக்கிரமசிங்கேயா, இல்லை... இல்லை... ஜனாதிபதியாலேயே அங்கீகாரம் பெற்றவன் நான், எனவே ‘நான்தான் பிரதமர்’ என்று கூறும் ராஜபக்சேயா? என்பதற்கான விடை வருகிற 7–ந்தேதி தெரிந்துவிடும். யார் பிரதமர்? என்பது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு என்பதில்தான் இருக்கிறது. கடந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகு சிறிசேனா அதிபராகவும், ரனில் விக்கிரமசிங்கே பிரதமராகவும் பொறுப்பேற்றனர். இலங்கை தமிழர்கள் ராஜபக்சே அதிபராகக்கூடாது என்றுதான் சிறிசேனாவுக்கு வாக்களித்தனர். ஆனால், சமீபகாலமாக சிறிசேனாவுக்கும், ரனில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. 

சிறிசேனா தன்னை கொல்ல இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ சதிசெய்தது என்று முதலில் கூறிவிட்டு, பிறகு இல்லை என்று மறுத்துவிட்டார். ஆனால் இதுகுறித்து வெளியிட்ட விளக்கத்தில், என்னை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது. இதில் அமைச்சர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்பதுபோல கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மந்திரிசபை கூட்டத்திலேயே சிறிசேனாவுக்கும், ரனில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில், யாரை எதிர்த்து சிறிசேனா தனிக்கட்சி அமைத்தாரோ?, அந்த ராஜபக்சேவுடனேயே கைகோர்த்து, ராஜபக்சேதான் பிரதமர் என்று அதிரடியாக அறிவித்தார். நியாயப்படி நாடாளுமன்றத்தை கூட்டி ரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு இல்லை. ராஜபக்சேவுக்குதான் ஆதரவு என்று நிரூபித்த பிறகுதான் பிரதமரை மாற்றியிருக்கவேண்டும். சபாநாயகர் ஜெயசூர்யா, ராஜபக்சே நியமனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாக நாடாளு மன்றத்தைக்கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கு பிரதமர் பதவியை கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டார். ஏற்கனவே 16–ந்தேதிவரை நாடாளு மன்றத்தை முடக்கிவைத்திருந்த சிறிசேனா, இப்போது வேறு வழியில்லாமல் 7–ந்தேதி கூட்ட ஒப்புக் கொண்டுள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், யார் 113 உறுப்பினர் களின் ஆதரவை வைத்திருக்கிறார்கள் என்பதை நிரூபித்தாக வேண்டும். 

ரனில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு 93 உறுப்பினர்கள் ஆதரவும், ராஜபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு 96 உறுப்பினர்கள் ஆதரவும் இருக்கிறது. இதுதவிர, தமிழ் தேசிய கட்சி கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரசுக்கு 7 உறுப்பினர்களும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு 6 உறுப்பினர்களும், ஜே.வி.பி.கட்சிக்கு 6 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி. கட்சிக்கு 1 உறுப்பினரும் உள்ளனர். 7 உறுப்பினர்களைக்கொண்ட இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் 6 உறுப்பினர்களை கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி ரனில் விக்கிரம சிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ரனில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள் ராஜபக்சே முகாமுக்கு தாவிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில், தமிழ் தேசிய கட்சி கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன், தன் கட்சியின் 16 உறுப்பினர் களை யார் பக்கம் ஓட்டளிக்க கை நீட்டுகிறாரோ, அவர்தான் வெற்றி பெறமுடியும். ஆக, ராஜபக்சேதான் பிரதமர் என்று சிறிசேனா கூறினாலும், தமிழர்களின் ஆதரவு இல்லாமல் நிச்சயமாக அவர்களால் வெற்றி பெற முடியாது. எனவே, ராஜபக்சேயா?, ரனில் விக்கிரமசிங்கேயா? என்பது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அளிக்கப்போகும் ஓட்டில்தான் இருக்கிறது. 

மேலும் செய்திகள்