மரபுகளை மீறக்கூடாது

இந்து சமயம் காலம்காலமாக நீண்ட பல மரபுகளை பின்பற்றுகிறது.

Update: 2018-11-12 22:00 GMT
ஒவ்வொரு கோவிலுக்கென்றும் தனித்தனியாக தல புராணம், தல விருட்சம், வழிபாட்டு முறைகள் என இருக்கிறது. இது ஆதிகாலத்தில் இருந்தே இருக்கிறது. இன்றும் நாடு முழுவதும் உள்ள பல கோவில்களில் ஆண்கள் வழிபடசெல்லமுடியாது. பெண்கள் மட்டுமே வழிபடமுடியும். இதுபோல கேரளாவில் உள்ள சபரிமலையில் குடிகொண்டு இருக்கும் சுவாமி அய்யப்பனை தரிசிக்க ஆண்கள் செல்லலாம். ஆனால் பெண்களைப் பொறுத்தமட்டில், 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே செல்லலாமேதவிர, இதற்கு இடைப்பட்ட வயதுள்ள பெண்கள் அங்கு செல்லமுடியாது. இது சரித்திர காலம்தொட்டு நடக்கும் நடைமுறையாகும்.

இந்தநிலையில், சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம்கோர்ட்டு அனைத்து வயதுபெண்களும் சபரிமலையில் வழிபட தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியது. அவ்வாறு வழிபடச்செல்லும் பெண்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு 2 முறை நடைதிறக்கப் பட்டது. குடும்ப பெண்கள் யாரும் விரதமிருந்து அங்கு வழிபடச்செல்லவில்லை. சமூக ஆர்வலர்களும், மாற்று மதங்களைச் சேர்ந்தவர்களும், பெண் பத்திரிகை யாளர்களும் என சிலர் மட்டுமே அங்கு சென்றனர். ஆனால் அங்கு போலீஸ் பாதுகாப்பையும் மீறி அய்யப்ப பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்களால் சன்னதிக்கு செல்லமுடியவில்லை. திரும்பி வந்துவிட்டனர். இந்தநிலையில், வருகிற 17-ந்தேதி 41 நாள் மண்டலம்- மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நடைதிறக்க இருக்கிறது. இந்த நேரம் சபரிமலைக்கு வரவிரும்பு கிறவர்கள் இணையதளத்தில் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரையில் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆண்களும், 560 பெண்களும் பதிவு செய்துள்ளனர். பெண்கள் அனைவரும் 50 வயதுக்கு குறைவான வயதுடையவர்கள். இவர்கள் அய்யப்ப பக்தர்களின் எதிர்ப்பை சந்திக்கக்கூடும் என்பதால் அவர்களை திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்ல கேரள அரசாங்கம் பரிசீலித்துவருகிறது. இதற்காக ‘ஹெலிப்பேட்’ அமைக்க நிச்சயமாக வனத் துறையின் ஒப்புதல் தேவை. ஆனால் ஹெலிகாப்டர் இறங்கும் இடத்திலிருந்து அந்த பெண்களை சன்னிதானம் வரையில் அழைத்து செல்வதிலும் அய்யப்ப பக்தர்களின் எதிர்ப்புகளால் போலீசாருக்கு பெரிய சிரமம் ஏற்படும்.

சபரிமலைக்கு செல்வதற்கு பக்தர்கள் 48 நாட்கள் கடும் விரதம் இருக்கவேண்டும். காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் குளிர்ந்த நீரில் குளித்து பூஜை செய்யவேண்டும். 48 நாட்கள் விரதத்துக்கு பிறகு, தலையில் இருமுடி சுமந்துகொண்டு பெரியபாதையில் செல்லவேண்டும் என்றால் 61 கி.மீ. தூரமும், சின்னப்பாதையில் செல்லவேண்டும் என்றால் 8 கி.மீ. தூரமும் நடந்துசெல்லவேண்டும். ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என்ற அடிப்படையில் நடந்து செல்லவேண்டும். வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் என்றால்கூட டோலியில் அந்த பாதைகள் வழியாகத்தான் செல்லவேண்டும். இதுதான் ஐதீகம், வழிவழியாக கடைப்பிடிக்கப்படும் மரபு. ஏற்கனவே பெண்கள் வழிபட தடை என்ற மரபு மீறப்படும் நிலையில், தலையில் இருமுடி சுமந்து கொண்டு பெரிய பாதை அல்லது சின்னப்பாதை வழியாக நடந்துதான் செல்லவேண்டும் என்ற மரபை மீறி, ஹெலிகாப்டரில் செல்வது என்பது நிச்சயமாக ஏற்புடையது அல்ல. எந்தநிலையிலும் வழிபாட்டு முறைகள் மீறப்படக்கூடாது. இது அய்யப்ப பக்தர்களின் மனதை மேலும் புண்படுத்துவதாகத்தான் அமையும்.

மேலும் செய்திகள்