ஏழைகளுக்கு மட்டும் இலவசங்கள்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான வடஇந்திய இளைஞர்கள் கையில் ஒரு பையுடன் ரெயில்களிலிருந்து இறங்கி வெளியே வருவதை பார்க்கமுடிகிறது.

Update: 2018-11-28 22:30 GMT
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான வடஇந்திய இளைஞர்கள் கையில் ஒரு பையுடன் ரெயில்களிலிருந்து இறங்கி வெளியே வருவதை பார்க்கமுடிகிறது. இந்தநிலை இன்றும் தொடர்கிறது. ஆரம்பகாலங்களில் சென்னையில் மட்டும் கட்டிட வேலைபார்த்த இவர்கள், இப்போது தமிழ்நாடு முழுவதும் கட்டிடவேலைகள், கிரானைட், மொசைக் பதிக்கும் பணிகள், தச்சு வேலைகள், மின்சார வேலைகள், ஓட்டல் உள்பட பல வணிக நிறுவனங்களில் வேலைகள், செக்யூரிட்டி பணி என்று எல்லா வேலைகளிலும் கால்பதித்துவிட்டார்கள். 

இவ்வளவு வடஇந்தியர்கள் தமிழ்நாட்டில் வேலைபார்க்கிறார்களே, தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதுவிட்டதா? என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை. கிராமங்களில் முன்பெல்லாம் எல்லோரும் மிகவும் சுறுசுறுப்பாக தன் கையே தனக்கு உதவி, சொந்தக்காலில் நிற்பதுதான் பெருமை என்றநிலையில் வேலைபார்த்து வந்தார்கள். ஆனால் இப்போது வேலைக்கு வருகிறீர்களா என்று கேட்டால், ஏன் வேலைக்கு வரவேண்டும்?. அரசு கொடுத்த இலவசவீட்டில் அமர்ந்துகொண்டு, இலவச வேட்டியை அணிந்துகொண்டு. அரசு மாதந்தோறும் கொடுக்கும் 20 கிலோ அரிசியை வைத்து, இலவச கிரைண்டர், இலவச மிக்சி மூலம் சமையல்செய்து, இலவசமாக கொடுத்த மின்விசிறியை ஓடவிட்டு, இலவசமாக கொடுத்த டெலிவி‌ஷனை பார்த்து பொழுதுபோக்கிக்கொள்ளலாமே, இதற்குமேல் வேலைவேண்டும் என்றால் 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தில் போய் கொஞ்சம்நேரம் வேலைபார்த்தால் போதும், கைநிறைய சம்பளம் கிடைத்துவிடுகிறது. ஏன் உடலை வருத்தி வேலை செய்யவேண்டும்? என்ற உணர்வு பலரிடம் இருக்கிறது. 

தமிழக அரசின் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசின் மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 251 கோடியாகும். இதில், மானியங்கள் மற்றும் உதவித்தொகைகளுக்காக மட்டும் ரூ.75 ஆயிரத்து 723 கோடி போய்விடுகிறது. நியாயவிலை கடைகளில் 1 கோடியே 83 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி கொடுப்பதற்காகவும் மற்றும் சர்க்கரை, மண்எண்ணெய், துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை மானியவிலையில் கொடுப்பதற்காகவும் ரூ.6 ஆயிரம் கோடி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி என்.கிருபாகரன் ஒரு வழக்கில், இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்கிவிடுகிறது. அரிசி மற்றும் உணவு பொருட்களை தேவையான ஏழை மக்களுக்கு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் வசதி படைத்தவர்களுக்கும் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து இலவச அரிசி கொடுப்பது சரியல்ல, இலவச அரிசிக்கு மட்டும் கடந்த ஆண்டு ரூ.2,110 கோடி செலவிடப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவசஅரிசி கொடுக்கவேண்டும் என்ற கருத்தை மிக துணிச்சலாக தெரிவித்துவிட்டார். பொதுமக்களில் பலர் சோம்பேறியாகிவிட்ட காரணத்தினால், சாதாரண வேலைகளுக்குகூட வடமாநிலங்களில் இருந்து வேலையாட்கள் தருவிக்க வேண்டியதிருக்கிறது என்ற கருத்தை அவர் தலைமையிலான பெஞ்சு பட்டவர்த்தனமாக கூறியிருக்கிறது. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகளுக்கு மட்டும் இலவச அரிசி கொடுக்க அரசு தயாராக இருக்கிறதா? என்பதை நாளை (30–ந்தேதி) தெரிவிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒரு கருத்தாகும். ஏழைகளுக்கு மட்டும் இலவசங்களை கண்டிப்பாக கொடுக்கவேண்டும். ஆனால், எல்லோருக்கும் இலவசங்கள் கொடுக்கவேண்டுமா? என்பதை அரசு பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

மேலும் செய்திகள்