மாணவர்கள் சுமை தூக்குபவர்கள் அல்ல!

மாணவப்பருவம் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் இனிமையான பருவமாகும். எந்தவித கவலையும் இல்லாத பருவமாகும். அந்த வகையில், பள்ளிக்கூடங்களுக்கு செல்வது என்பது இளமைப் பருவத்தில் கற்கண்டை சுவைப்பது போல இனிமையாக இருக்க வேண்டும்.

Update: 2018-12-14 22:55 GMT
பள்ளிக்கூடத்துக்கு செல்லும்போதே மகிழ்ச்சியோடும், ஆசையோடும், உற்சாகத்தோடும் செல்ல வேண்டும். ஆனால், சமீப காலங்களில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்புவரை படிப்பதற்காக செல்லும் மாணவர்கள் முதுகில் பெரிய புத்தகப்பையை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடப்பதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது. ‘நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும்’ இருக்க வேண்டிய அந்த மழலைப் பருவத்தில், புத்தகப்பையை சுமக்க முடியாமல் குனிந்து கொண்டு, நேர்கொண்ட பார்வையை பார்க்க முடியாமல் செல்லும் காட்சிகள் தான் அன்றாடம் பார்க்கக்கூடிய காட்சிகளாகும்.

இந்தநிலையில், மத்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு உத்தரவை அனுப்பி உள்ளது. அதில், மாணவர்கள் எடுத்துச் செல்லும் பள்ளிக்கூட பைகள் இலகுவாக இருக்கும்வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். 1, 2-ம் வகுப்பு மணவர்களின் புத்தகப் பைகள் 1.5 கிலோ எடையும், 3, 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பைகள் 2 முதல் 3 கிலோ வரையும், 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பைகள் 4 கிலோ எடை வரையும், 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பைகள் 4.5 கிலோவும், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் புத்தகப்பைகள் 5 கிலோதான் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. புத்தகப்பைகள் இலகுவாக இருக்கும் நிலையில் கற்பிக்கும் பாடங்கள் வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும், 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழியையும், கணக்கையும் தவிர, வேறெந்த பாடங் களையும் நிர்ணயிக்கக்கூடாது. 3 முதல் 5-ம் வகுப்பு வரையில் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வகுத்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் கணக்கு பாடங்கள் கற்பிக்கப் படவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இதுமட்டு மல்லாமல், மாணவர்களை கூடுதலாக புத்தகங்களை கொண்டு வரச் சொல்லக்கூடாது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது.

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி என்.கிருபாகரன், கடந்த மே மாதம் 29-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் இதுகுறித்து தெளிவாக கூறியிருக்கிறார். மாணவர்கள் பளு தூக்குபவர்களும் அல்ல, புத்தகப்பைகள் சரக்கு ஏற்றப்பட்ட கன்டெய்னர்களும் அல்ல என்று தொடங்கிய அந்த உத்தரவில், சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஹோம் ஒர்க்’ என்று கூறப்படும் வீட்டுப்பாடங்கள் கொடுக்கக் கூடாது. இதை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் உத்தரவாக பிறப்பிக்க வேண்டும் என்பது போன்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இப்போது உத்தரவாக கூறியுள்ள அனைத்தையுமே நீதிபதி என்.கிருபாகரன் தான் உத்தரவாக பிறப்பித்திருந்தார். அவர் பிறப்பித்த இந்த உத்தரவு, இப்போது நாடு முழுவதும் நிறை வேற்றப்பட இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக சென்னை ஐகோர்ட்டு மற்றும் மனிதவள அமைச்ச கத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும். ஆரம்ப பள்ளிக்கூடங்களில் என்னென்ன வகுப்புகள் நடக்கப் போகிறது? என்பதற்கான கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் அதற்குரிய புத்தகங்களை கொண்டு வந்தால் போதும். அதற்கு மேல் எல்லா பாடப்புத்தகங்களும் தேவையில்லை என்பதை கடைப் பிடிக்க வேண்டும். இனி ஒரு போதும் தமிழ்நாட்டில் சின்னஞ்சிறு குழந்தைகள் தோளில் சுமக்கமுடியாத பைகளை கொண்டு செல்வதை பார்க்கும் நிலை ஏற்படக்கூடாது.

மேலும் செய்திகள்