7 பேருக்கு மட்டும் தெரிந்த தாக்குதல் ரகசியம்

காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில் கடந்த 14–ந்தேதி 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்களை கொடூரமாக உயிர் இழக்க வைத்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம், தற்கொலைப்படைகளை பயன்படுத்தி இந்தியாவில் பெரிய சேதங்களை ஏற்படுத்த திட்டமிட்டு வந்தது.

Update: 2019-02-27 22:30 GMT
காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில் கடந்த 14–ந்தேதி 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்களை கொடூரமாக உயிர் இழக்க வைத்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம், தற்கொலைப்படைகளை பயன்படுத்தி இந்தியாவில் பெரிய சேதங்களை ஏற்படுத்த திட்டமிட்டு வந்தது. அதன் காரணமாகத்தான் இந்தியாவிலிருந்து 60 கி.மீட்டர் தூரத்திலுள்ள பாலகோட் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நட்சத்திர ஓட்டல் போன்ற அனைத்து வசதிகளையும் கொண்ட முகாமில் தற்கொலைக்கு தயாராக உள்ள 325 இளைஞர்களை வரவழைத்து, அவர்களுக்கு பயிற்சியை அளித்துவந்தது. இந்த 325 பேர்களில், 107 பேர் புதிதாக இந்த பயிற்சிக்கு சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மூளைச்சலவை செய்து தற்கொலைப்படையாக மாற்ற இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

14–ந்தேதி நடந்த சம்பவத்துக்குப்பிறகு ‘ரா’ பிரிவு, பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 6 இடங்களில் உள்ள தங்கள் முகாம்களில் இருந்து இந்தியா மீது அடுத்த தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளார்கள் என்று கண்டுபிடித்தது. அதில் ஒன்று ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகபழமையான பாலகோட் பயிற்சி முகாம். இதில் எந்தெந்த இடங்களில் தாக்குதலை நடத்தினால் அப்பாவி பொதுமக்களுக்கு சேதம் ஏற்படாது என்றவகையில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. இது ராணுவத்தாக்குதல் அல்ல. பயங்கரவாதிகள் மீதான தாக்குதல். நம்மீது மேலும் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நடவடிக்கை என்ற வகையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த துல்லிய தாக்குதலுக்கு பிரதமர் மோடி 18–ந்தேதி அனுமதி கொடுத்தார்.

25–ந்தேதி பாலகோட் முகாமில் 300 முதல் 350 வரையிலான பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்று உளவுதகவல் உறுதிப்படுத்தியபிறகு, பிரதமர் தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், விமானப்படை தலைவர் வி.எஸ்.தனோவா, ராணுவப்படை தலைவர் பிப்பின் ராவத், கப்பல்படை தலைவர் சுனில் லன்பா மற்றும் ‘ரா’, உளவுப்பிரிவு தலைவர்கள் ஆகிய 7 பேர் மட்டுமே ரகசியமாக இந்தத்தாக்குதலுக்கு முடிவு எடுத்தனர். 1971–ம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் போருக்குப்பிறகு, இப்போதுதான் இந்திய விமானப்படை விமானங்கள் எல்லைதாண்டி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத்தாக்குதல் நடத்திய ‘மிராஜ்’ போர்விமானங்கள் எல்லாம் எல்லைப்பகுதியில் இருந்து புறப்படாமல் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் இருந்தே புறப்பட்டது. நள்ளிரவு 1.30 மணிக்கு குவாலியரில் இருந்து புறப்பட்ட போர்விமானங்கள் தம்பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு 4 மணிக்கு திரும்பின. அன்று இரவு முழுவதும் பிரதமர் உள்பட அந்த 7 பேரும் தூங்காமல் விழித்திருந்தனர். இவ்வளவு பெரியதாக்குதலை வெற்றிகரமாக முடித்து, இந்தியா மீது தாக்குதல் தொடுக்க பயிற்சியளிக்கப்பட்ட 325 பயங்கரவாதிகளையும் ஒழித்துக்கட்டிய விமானப்படையினரும், இதற்கான திட்டங்களை தீட்டிய பிரதமர் தலைமையிலான 7 பேரும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். அந்த 7 பேருக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி என்று இந்தியா பாராட்டுகிறது. ஆனால், இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நேற்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும் நுழைந்த 2 விமானங்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளன. நேற்று இந்திய விமானபடையை சேர்ந்த 2 மிக்21 விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம். ஒரு விமானி சென்னையை சேர்ந்த அபிநந்தன், தற்போது பாகிஸ்தான் காவலில் இருக்கிறார். காயமடைந்த மற்றொரு விமானி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறுகிறார். எல்லைப்பகுதியில் இப்போது பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

மேலும் செய்திகள்