பெட்ரோல்–டீசல் கார்களுக்கு ‘டாடா’

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில், நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச்செல்லும் வகையிலான பல இலக்குகளை கோடிட்டு காண்பித்தார்.

Update: 2019-07-31 22:00 GMT
நாடு வளரவேண்டுமென்றால், பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கவேண்டும். அந்தவகையில், 2014–ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் 1.85 டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.127.6 லட்சம் கோடியாக) இருந்த நிலை மாறி, 5 ஆண்டுகளில் தற்போது 2.7 டிரில்லியன் டாலராக (ரூ.186.3 லட்சம் கோடியாக) உயர்ந்திருக்கிறது என்று பெருமைபட பட்ஜெட்டில் தெரிவித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அடுத்த சில ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலராக அதாவது நமது பொருளாதாரத்தை ரூ.345 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்தப்படும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கவேண்டுமென்றால், அரசின் செலவுகள் குறையவேண்டும். வருமானம் அதிகரிக்கவேண்டும். அதிலும் குறிப்பாக, வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியின் அளவு குறைந்து, ஏற்றுமதியின் அளவு அதிகமாக இருந்தால், அன்னிய செலாவணியை அதிகமாக ஈட்டமுடியும். நமது நாட்டை பொறுத்தமட்டில், இங்கு பெட்ரோலிய வளம் இல்லை. நமது தேவைக்காக வெளிநாடுகளிலிருந்துதான் கச்சா எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யவேண்டிய நிலை இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு பெட்ரோல்–டீசல் தேவை அதிகரித்துக்கொண்டு இருப்பதால், அதிகளவில் இறக்குமதி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. எடுத்துக்காட்டாக, 2018–19–ல் 21 கோடியே 16 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 23 கோடியே 30 லட்சம் டன் இறக்குமதி செய்யவேண்டிய அளவுக்கு தேவை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.7 லட்சத்து 76 ஆயிரத்து 52 கோடியே 20 லட்சம் அளவுக்கு அன்னிய செலாவணியாக கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா செலவழிக்க வேண்டியதிருக்கிறது. இந்தநிலையில், கச்சா எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென்றால், சாதாரண நடையாக அல்ல, பெரும் பாய்ச்சலில் மின்சார மோட்டார் வாகனங்கள் அதாவது, பேட்டரி மூலம் இயங்கும் மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இப்போது மேலும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. 15 ஆண்டுகளுக்குமேல் உள்ள பழமையான மோட்டார் வாகனங்களை அதற்குமேல் பயன்படுத்தாமல் நொறுக்கி அழிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர நகல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தகைய வாகனங்களை அடித்து நொறுக்குவதற்காக கொடுப்பவர்கள், புதிய வாகனங்கள் வாங்கினால் பதிவுக்கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், 15 ஆண்டுகளுக்குமேல் உள்ள பழமையான வாகனங்களை வைத்திருப்பவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை தகுதி சான்றிதழ் பெறவேண்டும். அதற்கான கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார மோட்டார் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு பதிவுக்கட்டணமோ, புதுப்பித்தல் கட்டணமோ கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக நல்ல ஒரு நடவடிக்கையாகும். பழைய கார்களை அழிப்பதன் மூலம் சுற்றுசூழல் பாதிக்கப்படாது. எனவே, மின்சார கார்களுக்கான பயன்பாட்டுக்கு இன்னும் அதிக சலுகைகளை அளித்து, விலையையும் குறைத்து, சார்ஜ் செய்வதற்கான வசதிகளையும் மிக அதிகளவில் பெருக்கி, அதற்கான மின்சார கட்டணங்களையும் குறைத்தால், நிச்சயமாக நாடு பொருளாதார வளர்ச்சியில் பீடு நடைபோடும்.

மேலும் செய்திகள்