கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை

வெங்காயம் விலை உயரும்போது வீட்டுக்கு வாங்குபவர்களுக்கும், விலை பெருமளவில் சரியும்போது வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் கண்ணீரை வரவழைக்கிறது.

Update: 2019-10-02 22:00 GMT
பொதுவாக சமையல் செய்யும்போது, எல்லா உணவுப்பண்டங்களின் சமையலுக்கும் அத்தியாவசிய தேவையான வெங்காயத்தை உரிக்கும்போது மட்டும் இல்லத்தரசிகளுக்கு கண்ணீர் வருவதில்லை. வெங்காயம் விலை உயரும்போது வீட்டுக்கு வாங்குபவர்களுக்கும், விலை பெருமளவில் சரியும்போது வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் கண்ணீரை வரவழைக்கிறது. வெங்காயம் விலை உயர்வு என்பது ஏழை-எளிய, நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் துண்டு விழவைக்கும். அந்தவகையில், கடந்த சிலநாட்களாக தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் வெங்காய விலை மிக அதிகமாக உயர்ந்து கொண்டேபோகிறது. உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிகமாக வெங்காயம் விளைகிறது. வெங்காயம் அதிகம் விளைவிக்கும் மராட்டிய மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சியால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெங்காயம் சாகுபடி செய்யும் பரப்பு மிக அதிகமாக குறைந்துவிட்டது. இதுபோல, தென்மாநிலங்களில் அதிகமாக வெங்காயம் விளையும் கர்நாடகாவில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட பெருமழையினால் விளைச்சல் பாதிக்கும் என்றும் கருதப்படுகிறது.

வெங்காயம் பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஏற்கனவே வெங்காய விலையை குறைக்க கடந்த மாதம் 13-ந்தேதி வெங்காயம் ஏற்றுமதி விலையை டன்னுக்கு 850 டாலராக மத்திய அரசு உயர்த்திப்பார்த்தது. ஆனால், இலங்கைக்கும், வங்காளதேசத்திற்கும் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது வெங்காய விலையை குறைப்பதற்கு மத்திய அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், சில்லறை வியாபாரிகள் 100 குவிண்டால் அல்லது 10 டன்களும், மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் அல்லது 50 டன்களும்தான் இருப்பு வைத்துக்கொள்ள முடியும். அதற்குமேல் வைத்திருப்பவர்கள் மீது பதுக்கல் சட்டம் பாயும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் எடுக்கவேண்டும் என்றும், மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2014-ம்ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதுபோல வெங்காய விலை அதிகமாக உயர்ந்த நேரத்தில் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்டது.

கடந்த 2018-2019 மட்டும் இந்தியாவிலிருந்து 24 லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தியாவில் தினசரி தேவை 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் டன் ஆகும். ஆனால், கடந்த ஆண்டு அதாவது 2018-2019-ல் 2 கோடியே 34 லட்சத்து 80 ஆயிரம் டன்கள் இந்தியாவில் வெங்காயம் உற்பத்தியானது. இந்த ஆண்டு அந்தளவிற்கு விளைச்சல் இருக்காது. விலை உயர்வின் பலன் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. இடைத்தரகர்கள்தான் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். இவ்வளவு விலைஉயர்வுக்கு காரணம் பதுக்கல்தான் என்று சில அதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள். எனவே, பதுக்கலை கண்டுபிடிக்க கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஒருவேளை வெங்காயத்திற்கு உண்மையிலேயே தட்டுப்பாடு இருந்தால், இதற்கு முன்பு எடுத்த நடவடிக்கைகள் போல வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டும். மத்திய-மாநில அரசுகளில் உள்ள வேளாண்மைத்துறையும், உணவு வழங்கல் துறையும் ஆண்டுக்கு எவ்வளவு வெங்காயம் தேவை என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ற வகையில் அந்தந்த மாநிலங்களில் வெங்காயம் சாகுபடிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். வெங்காயம் 3 பருவங்களில் சாகுபடி செய்யமுடியும். இது ஒரு குறுகிய காலபயிர் என்ற வகையில் திட்டமிட்டால், நிச்சயமாக வெங்காயம் தட்டுப்பாடு இல்லாத வகையில் அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்