இலங்கை தமிழர்களும் என் மக்களே!

இலங்கையில் 7-வது அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பரவலாக எதிர்பார்த்ததுபோல, முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே 52.25 சதவீத வாக்குகளை பெற்று மகத்தான வெற்றியை அடைந்து பதவி ஏற்றுள்ளார்.

Update: 2019-11-18 22:00 GMT
35 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டாலும், முக்கியமாக 2 பேரின் பெயர்தான் வேட்பாளர்கள் பட்டியலில் பிரபலமாக இருந்தது. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் கடைசி தம்பி கோத்தபய ராஜபக்சே இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார மந்திரியுமான சஜித் பிரேமதாசா போட்டியிட்டார். இதில், கோத்தபய ராஜபக்சே 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் வீழ்த்திய நேரத்தில் ராணுவ செயலாளராக இருந்தார். அந்த நேரத்தில்தான் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிர் இழந்தனர். எண்ணற்றோர் வீடு வாசல்களை இழந்தனர். தமிழர்களின் நிலங்கள் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இந்த நிகழ்வால் அவருக்கு சிங்களர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு உயர்ந்தது.

கடந்த தேர்தலின்போது ராஜபக்சேயை எதிர்த்து போட்டியிட்டு ஜனாதிபதியான சிறிசேனா இப்போது பல்டி அடித்து, கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவருடைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டுமல்லாமல், டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி உள்பட 17 கட்சிகள் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தன. இலங்கையின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் சிங்களர்கள்தான். 7 மாதங்களுக்கு முன்பு ஈஸ்டர் குண்டு வெடிப்பில் 269 பேர் மரணம் அடைந்த நிலையில், உள்நாட்டு பாதுகாப்புக்கு கோத்தபய ராஜபக்சேதான் பொருத்தமானவர் என்ற உணர்வு மேலோங்கி இருந்தது. வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்தான் தமிழர்களும், முஸ்லிம்களும் வசிக்கிறார்கள். அங்கு 80 சதவீதம் பேர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ராஜபக்சே சீனாவுக்கு ஆதரவானவர், தமிழர்களுக்கு எதிரானவர் என்று பரவலாக கூறப்பட்டாலும், கோத்தபய ராஜபக்சேவின் தேர்தல் அறிக்கையில், முன்னாள் விடுதலைப்புலி வீரர்கள் அனைவருக்கும் மறுவாழ்வு அளிக்கப்படும். அவர்கள் சமுதாயத்தோடு மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவார்கள். உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தித்தரப்படும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விடுவித்து, நிலச்சொந்தக்காரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்பட தமிழர்களுக்கு ஆதரவாக பல வாக்குறுதிகள் கூறப்பட்டிருந்தன.

இப்போது கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றிருப்பதால், இந்தியா-இலங்கை உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதவேண்டிய நேரம் இந்தியாவுக்கு வந்துவிட்டது. வெற்றி பெற்றவுடன் கோத்தபய ராஜபக்சேவும், “எனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், எனக்கு எதிராக ஓட்டு போட்டவர்களுக்கும், எந்த மதம், எந்த இனம் என்று பார்க்காமல், எல்லோருக்கும் நான்தான் ஜனாதிபதி” என்று பெருந்தன்மையோடு கூறியதுபோல, இலங்கை தமிழர்கள் உள்பட எல்லோருக்கும் பாரபட்சம் இல்லாமல் பணியாற்றவேண்டும். சீனா என் நண்பர் என்ற எண்ணம் கோத்தபய ராஜபக்சேவுக்கு இருந்தாலும், இந்தியா அண்டை வீட்டுக்காரர், சொந்தக்காரர் என்ற உணர்வு எப்போதும் இலங்கைக்கு இருக்கவேண்டும். கோத்தபய ராஜபக்சே, தமிழ் மக்களுக்கு அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றித்தரவேண்டும். அதற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும். இலங்கையில் ஜனாதிபதி மாறினாலும், இலங்கை தமிழர்களின் நல்வாழ்வில் எந்த பின்னடைவும் ஏற்படாமல், ‘அவர்களும் என் மக்களே! அவர்களும் இலங்கை குடிமக்களே!’ என்ற உணர்வோடு கோத்தபய ராஜபக்சே, தமிழர்களுக்கான நலவாழ்வு திட்டங்களிலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் பொதுவான கருத்து.

மேலும் செய்திகள்