வனவளம் குறைந்த தமிழ்நாடு

‘‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்? என்று ‘விவசாயி’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பாடும் காட்சி வரும். தமிழ் நாட்டில் எல்லா வளங்களும் இருக்கின்றன. ஆனால், ஆற்று வளமும், வனவளமும்தான் மிகக்குறைவாக இருக் கின்றன.

Update: 2020-02-03 23:00 GMT
ஆற்றுவளத்தை பொறுத்தமட்டில், தாமிரபரணி ஆற்றைத்தவிர, வேறு எந்த ஆறும் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆவதில்லை. இதுபோல, வனவளமும் தமிழ்நாட்டில் இருக்கவேண்டிய அளவு இல்லை. வனவளம் இருந்தால் தான், மழை வளம் இருக்கும். அந்த வகையில், ஒரு நாடு செழிப்பு மிகுந்த வனவளத்தை கொண்டிருக்கும் நாடாக இருக்க வேண்டுமென்றால், அந்த மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனவளம் இருக்கவேண்டும். 

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசின் இந்திய வன அளவு நிறுவனத்தால், இந்திய வனங்களின் நிலைப்பற்றிய அறிக்கை வெளியிடப்படுகிறது. சமீபத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 24.56 சதவீதம் பசுமை பகுதியாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2017–ம் ஆண்டு எடுத்த கணக்கை ஒப்பிட்டால், 5,188 சதுர கிலோமீட்டர் வனவளம், மரவளம் அதிகரித்திருக்கிறது. வனவளத்தை பொறுத்த மட்டில், கர்நாடக மாநிலத்தில்தான் இந்த 2 ஆண்டுகளில் வனபரப்பு 1,025 சதுர கிலோமீட்டர் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 2017–ம் ஆண்டைவிட, இந்த ஆண்டு 83.02 சதுர கிலோ மீட்டர்தான் வனவளம், மரவளத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், தமிழ்நாட்டில் வனவளத்தை எடுத்துக்கொண்டால், மொத்த நிலபரப்பில் 17.6 சதவீதம்தான் இருக்கிறது. வனபரப்புக்கு வெளியே உள்ள மரங்களை சேர்த்து கணக்கிட்டால், ஏறத்தாழ 20.27 சதவீதம் இருக்கிறது.

 அண்டை மாநிலங்களில் எல்லாம் தமிழ்நாட்டைவிட, வனப்பரப்பு அதிகமாக இருக்கிறது. கேரளாவில் 29 சதவீதமும், தெலுங்கானாவில் 24 சதவீதமும், ஆந்திராவில் 22.9 சதவீதமும், கர்நாடக மாநிலத்தில் 20 சதவீதமும் இருக்கும் சூழ்நிலையில், கடைசியாக தமிழ்நாட்டில்தான் 17.6 சதவீதம் இருக்கிறது.

இவ்வளவுக்கும் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை இருக்கிறது, கிழக்கு தொடர்ச்சி மலை இருக்கிறது. இந்த மலைகளில் எல்லாம் வன அடர்த்தியை இன்னும் அதிக அளவில் பெருக்கி அடர்ந்த காடுகளாக ஆக்கலாம். தமிழ்நாட்டில் 2015–ம் ஆண்டு முதல் 2019–ம் ஆண்டு பிப்ரவரி 5–ந் தேதிவரை வனப்பகுதியில் உள்ள 542.4 ஹெக்டேர் நிலங்கள் வனநோக்கங்களுக்கு இல்லாத மற்ற நோக்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நடும் திட்டங்களில் தமிழ்நாடு பின்தங்கி இருக்கவில்லை. 2012–ம் ஆண்டு ஜெயலலிதாவின் 64–வது பிறந்த நாளையொட்டி, 64 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. வருகிற 24–ந்தேதி அவரது 72–வது பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. 

2012–லிருந்து ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவரது வயதை குறிக்கும் வகையில் அத்தனை லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. மேலும் திட்டங்களை வனத்துறை செயல்படுத்துகிறது. இதுதவிர, ஈஷா மைய தலைவர் சத்குரு, நடிகர் விவேக் என்று ஏராளமானோர் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். ஆக, இந்த கணக்குகளை வைத்து பார்த்தால், நடப்பட்ட கோடிக்கணக்கான மரக்கன்றுகளை ஒப்பிட்டால் தமிழ்நாடு, அமேசான் காடுகளைப்போல இருந்திருக்கவேண்டும். ஆனால், மொத்தம் நடப்படும் மரகன்றுகளில் 10 சதவீதம்கூட வளர்வதில்லை என்று ஒரு கருத்து வருகிறது. 

எனவே, விவசாய வளர்ச்சிக்கு மிகமுக்கியமான மழை வளம் இருக்கவேண்டுமென்றால், உடனடியாக வனவளத்தை பெருக்கும் வகையில், தீவிர காடு வளர்ப்புத்திட்டம், மரம் வளர்க்கும் திட்டம் ஆகியவற்றை தமிழக அரசின் வனத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை செயல்படுத்தவேண்டும். மரக்கன்றுகள் நடுவதில் மட்டும் பயன் கிடைத்திடுவதில்லை. அதை மரமாக வளர்க்க செய்யும் வகையில்தான் முழு வெற்றியும் இருக்கிறது. எனவே, இந்த 2020–ம் ஆண்டு அரசு இதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். 

மேலும் செய்திகள்