கடும் நிதிச்சிக்கலில் மத்திய, தமிழக அரசுகள்

கடும் நிதிச்சிக்கலில் மத்திய, தமிழக அரசுகள்.

Update: 2020-05-12 22:30 GMT

மத்திய அரசாங்கம் என்றாலும் சரி, தமிழக அரசு என்றாலும் சரி, ஆண்டுதோறும் வரவு-செலவு தொகையை அடிப்படையாக வைத்தே பட்ஜெட்டுகள் தயாரிக்கின்றன. செலவைவிட வரவு அதிகமாக இருந்தால் உபரி பட்ஜெட் என்றும், வரவைவிட செலவு அதிகமாக இருந்தால் பற்றாக்குறை பட்ஜெட் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக கடந்த காலங்களில் மத்திய அரசாங்கத்திலும், தமிழக அரசிலும் மிக அபூர்வமாகவே உபரி பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக பற்றாக்குறை பட்ஜெட்கள்தான் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மத்திய அரசாங்கத்தில் 3.5 சதவீத நிதிப்பற்றாக்குறையும், தமிழக அரசில் 2.84 சதவீத நிதிப்பற்றாக்குறையும் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக பற்றாக்குறையை ஈடுகட்ட அரசுகள் கடன் வாங்குவது உண்டு. அந்தவகையில், மத்திய அரசாங்கம் 2020-21-ம் ஆண்டில் ரூ.7.8 லட்சம் கோடி கடன்வாங்க இலக்கு நிர்ணயித்து இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் வரிவருவாய் உள்பட அனைத்து வருவாயும் அடிமட்டத்துக்கு போய்விட்ட நிலையில், அரசுகள் வருவாய் இல்லாமல் தவிக்கின்றன. அதேநேரம் கொரோனா ஒழிப்புக்கு ஏராளமாக செலவு செய்யவேண்டியது இருக்கிறது. வருமானம் இல்லாத நிலையில், செலவை சரிக்கட்ட மத்திய அரசாங்கம் 54 சதவீதம் அதிகமாக அதாவது, மொத்தம் ரூ.12 லட்சம் கோடி கடன்வாங்க முடிவு செய்துள்ளது. கூடுதலாக ரூ.4.2 லட்சம் கோடி கடன் வாங்கப்போகும் இந்த நிலையில், ஏற்கனவே மதிப்பிடப்பட்ட 3.5 சதவீத நிதிப்பற்றாக்குறை இனி 5.5 சதவீதமாக உயரப்போகிறது. இதேபோல, தமிழக அரசும் தன் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட, நிர்ணயிக்கப்பட்ட அதிகப்பட்ச நிதிப்பற்றாக்குறையை 3 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக உயர்த்தவும், கடன்வாங்கும் அளவை மேலும் 33 சதவீதம் அதிகரிக்கவும், மத்திய அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருக்கிறது.

தனக்கு ஏற்பட்டுள்ள வலிதான், தமிழக அரசுக்கும் ஏற்பட்டுள்ளது என்ற நிலையை மத்திய அரசாங்கம் உணர்ந்து, உடனடியாக இதற்கான அனுமதியை வழங்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், மத்திய அரசாங்கத்திடம் இருந்து பல்வேறு வகைகளில் வரவேண்டிய பாக்கித்தொகை, மானியங்களை உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கைக்குமேல் கோரிக்கை விடுத்து வருகிறது. எவ்வளவோ வற்புறுத்தியும் பார்த்துவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் தமிழக அரசு, வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் போதுமான நிதி இருந்தால் மட்டுமே முடியும். இப்போது தமிழக முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ, விமான போக்குவரத்து எதுவுமே இல்லாதநிலையில், நேரில் டெல்லிக்கு சென்று பிரதமரையோ, மத்திய மந்திரிகளையோ சந்தித்து கோரிக்கைவிடும் வாய்ப்பு இல்லை. எனவே முதல்-மந்திரிகள், என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம் என்று பிரதமர் ஏற்கனவே அளித்த உறுதிமொழியைப் பயன்படுத்தி உடனடியாக மத்திய அரசாங்கத்தை, தமிழக அரசு வலியுறுத்தி தேவையான நிதியை கேட்டுப்பெறவேண்டும். நிதி சிக்கலிலிருந்து விடுபடவேண்டும்.

இதுபோல, நாட்டில் மற்றொரு சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை மக்களிடையே ரூ.2.40 லட்சம் கோடி பணப்புழக்கம் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்திலேயே ரூ.2.66 லட்சம் கோடி பணப்புழக்கம் இருக்கிறது. அதாவது, வங்கிகளில் உள்ள பணத்தை எல்லாம் எடுத்து மக்கள் ரொக்கமாக வைத்திருக்கிறார்கள். பொதுவாக பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும் நேரத்தில்தான் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால், பொருளாதாரம் கடும்வீழ்ச்சி அடைந்த நிலையில், எந்தவித பரிமாற்றத்துக்கும் வாய்ப்பு இல்லாத நிலையில், இவ்வாறு மக்கள் பணத்தை எடுத்து வைத்திருப்பதை பார்த்தால், தபால் அலுவலகங்களில், வங்கிகளில் டெபாசிட்டுக்காக கொடுக்கப்படும் வட்டி குறைவாக இருப்பதுதான் காரணமா? அல்லது வங்கிகள் மீது நம்பிக்கை இல்லையா? என்று புரியவில்லை. எனவே, இதையும் மத்திய அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் செய்திகள்