கடன் வாங்கும் அனுமதிக்கு நிபந்தனைகள் விதிப்பதா?

கடன் வாங்கும் அனுமதிக்கு இதுபோல ஆபத்தான நேரத்தில், இக்கட்டான நேரத்தில் நிபந்தனைகளை விதிப்பது தேவையற்றது.

Update: 2020-05-20 22:30 GMT
தமிழ்நாட்டில் கொரோனாவின் உக்கிரம் இன்னும் தணியவில்லை. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழக அரசு நிர்வாகம் நிதிப்பற்றாக்குறை சுனாமியால் உழன்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே பட்ஜெட்டின்போதே வருவாய் பற்றாக்குறை அதிகமாக இருந்த காரணத்தினால் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 20 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாயில் 2.84 சதவீதம், அதாவது ஏறத்தாழ 60 ஆயிரம் கோடி ரூபாய் வெளிக்கடன் வாங்கப் பட்ஜெட்டில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்த கொரோனா சமயத்தில் மாநில மொத்த வருவாயே இல்லாத நிலையில் செலவுகள் உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் தமிழக அரசு நிதிப்பற்றாக்குறையால் திணறிக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநில அரசின் கடன் வாங்கும் வரம்பு 3 சதவீதம் இருக்கும் நிலையில் 4.5 சதவீதம் கடன் வாங்க அனுமதி கேட்டிருந்தார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபோது மாநில அரசுகள் 5 சதவீதம் வரை கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துவிட்டு அதற்கு 4 நிபந்தனைகளையும் விதித்திருந்தார். அந்த நிபந்தனைகளின்படி, தமிழக அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் அதாவது 0.5 சதவீதம் நிபந்தனைகள் இல்லாமல் கடன் வாங்கிக் கொள்ளலாம். மீதித் தொகையில் ஒரு சதவீதம் கடனை வாங்க முதலாவதாக ஒரே நாடு’ ஒரே ரேஷன் கார்டு! திட்டத்தை அமல்படுத்தினால் 0.25 சதவீதமும், வர்த்தக தொழில்களை நடத்துவதை எளிமையாக்கினால் மேலும் 0.25 சதவீதமும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி, தண்ணீர் வரியை நிர்ணயித்து அதற்குமேல் உயர்த்துவதற்கான முறைகளை வகுத்தால் அதற்கு 0.25 சதவீதமும் என்ற அடிப்படையில் வெளிக்கடன் வாங்க அனுமதி அளிக்கப்படும். இதில் 4-வது நிபந்தனையில்தான் சிக்கல் இருக்கிறது.

மின்சாரத் துறையை சீர் அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டு, மின்தொடரில் மின்சார இழப்பை அதாவது மின் திருட்டை குறைக்க வேண்டும். அதற்கு 0.05 சதவீதம் அனுமதி, மின்சாரத்தை வாங்குவதற்கும், விற்பதற்கும் உள்ள தொகையின் இடைவெளிக்கு மேலும் ஒரு 0.05 சதவீத அனுமதி என்று கூறிவிட்டு, இலவச மின்சாரம் கொடுக்கக்கூடாது. அப்படி கொடுக்க நினைத்தால் எவ்வளவு மானியம் கொடுக்கிறீர்களோ? அதை நேரடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தினால் இன்னொரு 0.15 சதவீதத்துக்கு அனுமதி என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த 4 நிபந்தனைகளில் 3 நிபந்தனைகளை டிசம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தினால் ஜனவரி மாதத்தில் மேலும் 0.5 சதவீதம் கடன் வாங்க அனுமதி தருவார்களாம். இந்த நிபந்தனைகள் எல்லாம் மாநில உரிமைகளில் கை வைப்பதுபோல இருக்கிறது. மாநில அரசுகள் கேட்கும் கடனை மத்திய அரசாங்கம் கொடுத்தாலோ, மானியமாக கொடுத்தாலோ நிபந்தனைகள் விதிப்பதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசாங்கம் கடன் தரப்போவதில்லை. வங்கிகளில்தான் மாநில அரசுகள் கடன் வாங்க வேண்டும். வங்கிகள் கடன் வழங்கும்போது விதிக்கும் நிபந்தனைகளையும் நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள மாநில அரசுகளுக்கு தேவையில்லாமல் மத்திய அரசாங்கமும் நிபந்தனைகளை விதிப்பது சரியல்ல. அதுவும் வருவாயே இல்லாத நிலையில், அரசு கடன் வாங்கித்தான் பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய நிலை இருக்கிறது. அப்போதுதான் பொதுமக்களிடமும் பணப்புழக்கம் இருக்கும். அதை அவர்கள் செலவழிக்கும் போதுதான் பொருளாதாரமும் தழைக்கும். அரசியல் சட்டத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசாங்கத்திடம் வாங்கிய கடன் பாக்கி இருக்கும்போது கூடுதல் கடன் வாங்க ஒப்புதல் கேட்கும் நேரத்தில் இதுபோல நிபந்தனைகளை விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிபந்தனைகளை இதுபோல ஆபத்தான நேரத்தில், இக்கட்டான நேரத்தில் விதிப்பது தேவையற்றது.

மேலும் செய்திகள்