வெற்றியைத் தந்த தீர்ப்பு!

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க தடை ஏதும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு தமிழக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

Update: 2020-07-30 21:42 GMT
மிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க தடை ஏதும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு தமிழக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தமிழ்நாடு, சமூக நீதி மண் ஆகும். இங்கு இடஒதுக்கீட்டிற்காக கடந்த 100 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள், முயற்சிகள் நடந்து வருகின்றன. அதில் ஒரு மைல் கல்தான் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பாகும்.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும்நிலையில், மத்திய அரசாங்கம் தன்னுடைய மருத்துவ கல்லூரி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிவிட்டு, மாநிலங்களிலிருந்து எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 15 சதவீதமும், முதுகலை மருத்துவப்படிப்பில் 50 சதவீதமும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் நிலையில், அந்த இடங்களுக்கு மட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 50 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தநிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் அகில இந்திய கோட்டாவில் இடஒதுக்கீடு வழங்காததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு, அ.தி.மு.க., தி.மு.க., திராவிடர் கழகம், பா.ம.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும், 2 தனி நபர்களும் என 13 வழக்குகள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தன. முதலில் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், சென்னை ஐகோர்ட்டிலேயே தீர்வுகண்டுகொள்ளலாம் என்று திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, தமிழக அரசும், அனைத்து கட்சிகளும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியே வழக்கு தாக்கல் செய்து வாதாடின. பரபரப்பான இந்த வழக்கில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து 171 பக்கங்களில் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். மத்திய அரசாங்கம் அல்லாத கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ, அரசியல் சட்ட ரீதியாகவோ எந்தத் தடையும் இல்லை. மாநில அரசு கடைப்பிடித்து வரும் இடஒதுக்கீட்டு முறை அகில இந்திய இடங்களுக்கு பொருந்தாது என்று கூறமுடியாது.

எனவே, இதுதொடர்பாக மத்திய அரசாங்கத்தின் குடும்ப நலத்துறை அமைச்சக முதன்மை இயக்குனர் தலைமையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவ குழு கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் இந்த கல்வி ஆண்டில் நிறைவேற்ற முடியாது என்ற நிலையில், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து இடஒதுக்கீடு தொடர்பாக தகுந்த முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதுபோன்று எந்தவொரு பிரச்சினையிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இருந்து வாதாடினால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு இந்த தீர்ப்பே ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். 3 மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், மத்திய அரசாங்கம் இந்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யாமல் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க உடனடியாக அந்த குழுவை அமைத்து இந்த ஆண்டிலேயே தமிழ்நாட்டிலிருந்து அகில இந்திய கோட்டாவில் அனுமதிக்கப்படும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் 50 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்க நடவடிக்கை எடுத்தால், சமூக நீதியை நடைமுறைப்படுத்த மத்திய அரசாங்கம் முன்வந்து இருக்கிறது என்ற பெருமை கிடைக்கும்.

மேலும் செய்திகள்