அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்

வல்லரசு நாடான அமெரிக்க நாட்டின் 46-வது ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 3-ந்தேதி நடக்கிறது. உலகமே இந்த தேர்தலை உற்றுநோக்குகிறது.

Update: 2020-08-14 22:53 GMT
வல்லரசு நாடான அமெரிக்க நாட்டின் 46-வது ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 3-ந்தேதி நடக்கிறது. உலகமே இந்த தேர்தலை உற்றுநோக்குகிறது. குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘வால்ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகையில், கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் கருப்பர் இனப்பெண், முதல் ஆசிய மரபில் வந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கமலா ஹாரிசின் தாய் சியாமளா கோபாலன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். புற்றுநோய் ஆராய்ச்சியாளரான அவர், அமெரிக்காவில் பேராசிரியராக இருந்த ஆப்பிரிக்காவின் ஜமைக்கா நாட்டை சேர்ந்த டொனால்டு ஹாரிஸ் என்பவரை மணந்தார். கமலாவுக்கு 7 வயதாக இருக்கும்போது, அவருடைய பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டனர். கமலாவையும், அவருடைய சகோதரி மாயாவையும், அவரது தாயார் சியாமளாதான் வளர்த்தார்.

1964-ம் ஆண்டு பிறந்த கமலா, சட்டப்படிப்பு முடித்து, ஒக்லாந்து, சான்பிரான்சிஸ்கோ ஆகிய மாவட்டங்களில் உதவி மாவட்ட அட்டர்னியாகவும், தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் முதல் கருப்பர் இனத்தை சேர்ந்த மாவட்ட அட்டர்னியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011-ல் கலிபோர்னியா மாநில அட்டர்னி ஜெனரல் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016-ல் கலிபோர்னியா செனட்டர் தேர்தலில் வெற்றிபெற்றார். கடந்த ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில், ஜனாதிபதி தேர்தலில் யார் வேட்பாளராக போட்டியிடப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தபோது, ஜோ பைடனும், கமலா ஹாரிசும்தான் களத்தில் இறங்கினர். ஆனால், டிசம்பர் மாதம் அந்த போட்டியில் இருந்து கமலா ஹாரிஸ் விலகிக்கொண்டார்.

சமீபத்தில் மினியா போலீசில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பர் இனத்தவர், ஒரு போலீஸ் அதிகாரியால் கொடூரத்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்த நேரத்தில், கமலா ஹாரிஸ் பொங்கி எழுந்தார். இது கருப்பர் இனத்தவரிடையே அவருடைய செல்வாக்கை பெரிதும் உயர்த்தியது. இதுபோல, கிரீன் கார்டு வழங்கும் எண்ணிக்கையையும் உயர்த்தவேண்டும் என்று போராடியதால், அமெரிக்காவில் அதிகமாக வாழும் இந்தியர்கள் மற்றும் சீனர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் 13 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். செனட்டராக இருக்கும்போது அவர் பல்வேறு கருத்துக்களை மிகவும் துணிச்சலாக கூறியிருக்கிறார். துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்றவர்கள் ஜனாதிபதியாகவும் பதவி வகித்த வரலாறு அமெரிக்காவில் உண்டு. எனவே, இந்த தேர்தலில் கமலா வெற்றிபெற்றால் எதிர்காலத்தில் வெள்ளை மாளிகைக்கு போகவும் வாய்ப்பு இருக்கிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

கமலா ஹாரிஸுக்கு சென்னை பெசன்ட்நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் மீது அதிக நம்பிக்கை உண்டு. அவர் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் தேர்தலில் போட்டியிட்டபோது, சென்னையில் வசிக்கும் அவரது தாயாரின் தங்கை சரளா கோபாலனுக்கு போன் செய்து, “சித்தி எனக்காக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். வரசித்தி விநாயகர் கோவிலில் தேங்காய் உடையுங்கள்” என்று கூறினார். சரளா கோபாலனும் 108 தேங்காய்களை உடைத்தார். அப்போது வெற்றிபெற்றவுடன் கமலா ஹாரிஸ் டெலிபோன் செய்து, “சித்தி நீங்கள் தேங்காய் உடைத்ததற்கு பலன் கிடைத்துள்ளது. நீங்கள் உடைத்த ஒவ்வொரு தேங்காய்க்கும் எனக்கு 1,000 ஓட்டுகள் கிடைத்துள்ளது” என்று மகிழ்ச்சியோடு கூறினார். 5 ஆண்டுகள் கழித்து 2016-ல் செனட்டர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடும்போது சரளா கோபாலன் ஆண்டும் 108 தேங்காய்களை உடைத்தார். கமலா ஹாரிஸ் வென்றார். இப்போது 1,008 தேங்காய்களை உடைக்கப்போகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆக, இப்போது கமலா ஹாரிஸ் நவம்பர் மாதம் நடக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் அமெரிக்காவில் வாழும் கருப்பர் இனத்துக்கும் பெருமை, தமிழர்களுக்கும் பெருமை, இந்தியர்களுக்கும் பெருமை. வரசித்தி விநாயகர் அருள்பாலித்தார் என்ற பெருமையும் கிடைக்கும்.

மேலும் செய்திகள்