160 நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு நல்ல தளர்வுகள்!

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிலும், மார்ச் மாதம் தமிழ்நாட்டிலும் காலூன்றிய கொரோனா இன்னும் தன் கோரப்பரவலை நிறுத்தாமல் நீட்டித்துக்கொண்டே இருக்கிறது.

Update: 2020-08-31 21:30 GMT
கடந்த 160 நாட்களாக மக்களின் அன்றாட வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பூட்டிப்போட்ட ஊரடங்கை இன்று முதல் திறந்துவைத்து நல்ல பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் அப்பாடா.. என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். தங்கள் இன்னல்கள், துயரங்கள், வருமானம் இழப்பு என்பதற்கு எல்லாம் இன்றோடு ஒரு முடிவு கட்டி சகஜ வாழ்க்கை தொடங்கும் என்பது மக்கள் மனதில் பெருக்கெடுத்து ஓடும் மகிழ்ச்சி உணர்வாகும்.

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிலும், மார்ச் மாதம் தமிழ்நாட்டிலும் காலூன்றிய கொரோனா இன்னும் தன் கோரப்பரவலை நிறுத்தாமல் நீட்டித்துக்கொண்டே இருக்கிறது. மக்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. உற்பத்தி குறைவு, வேலையிழப்பு என்று தொழிற்சாலைகளின் இயக்கமும் முடங்கிப் போய்விட்டது. 7-வது கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் இன்று முதல் 8-வது கட்ட ஊரடங்கு மத்திய அரசாங்கத்தாலும், தமிழக அரசாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களின் நடமாட்டத்தையே பெருமளவில் கட்டுப்படுத்தி வைத்திருந்த “இ-பாஸ்” நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டுதலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, சென்னையில் பெருநகர பஸ் போக்குவரத்துகள் தொடங்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் மெட்ரோ ரெயில் 7-ந்தேதி முதல் இயங்குகிறது. இந்த தளர்வுகள் எல்லாம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கான கதவுகளை திறந்துவிட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் இப்போது புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 38 மாவட்டங்கள் இருக்கும்நிலையில் மாவட்டங்களுக்குள்தான் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது என்பது பொதுமக்களுக்கு நிறைவான வசதியை அளிப்பதாக இருக்காது. ஏனெனில் மாவட்ட எல்லைகளில் உள்ளவர்கள் பக்கத்து ஊருக்குச்செல்ல வேண்டுமென்றால் அடுத்த மாவட்டத்திற்குத்தான் செல்ல வேண்டியது இருக்கும். எனவே மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்தையும், ரெயில் போக்குவரத்தையும் குறிப்பாக மின்சார ரெயில் போக்குவரத்தையும் அதிவிரைவில் தொடங்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த தளர்வுகளில் செப்டம்பர் 21-ந்தேதி முதல் திருமணம், இறுதி சடங்குகளில் 100 பேர் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது திருமண சீசன் தொடங்கிவிட்டது. எனவே மத்திய அரசு அறிவித்ததுபோல் தமிழக அரசும் 100 பேரோ அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களோ கலந்துகொள்ளும் வகையில் தளர்வுகளை அறிவிக்கவேண்டும் என்பது திருமண வீட்டாரின் கோரிக்கையாக இருக்கிறது. அதிகபட்சம் 100 பேர் கலந்துகொள்ளும் வகையில் சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு செப்டம்பர் 21-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்து இருந்தாலும் தமிழக அரசு அதுபற்றி எதுவும் குறிப்பிடாதது அரசியல் கட்சியினருக்கும், மற்றவர்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

எவ்வளவோ தளர்வுகளை அறிவித்த அரசு மேலும் இந்த வசதிகளையும் விரைவில் செய்து கொடுக்கவேண்டும். அரசு உதவிக்கரம் நீட்டி விட்டது. அதை பேணிக்காப்பது மக்கள் கையில்தான் இருக்கிறது. கொரோனாவின் கோரமுகம் இன்னும் அகலவில்லை என்ற பயத்தோடு கொரோனாவை நம் பக்கத்தில் நெருங்கவிடாமல் தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி சோப்புப்போட்டு கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல் என்பதுபோன்ற பொன் விதிகளை கடைபிடித்து பொதுமக்கள் தங்களையும் காத்துக்கொண்டு அரசுக்கும் ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

மேலும் செய்திகள்