தளர்வுகள் தானே தவிர விடுதலை அல்ல

1918-ம் ஆண்டில் உலகம் முழுவதையுமே ‘ஸ்பானிஷ் புளு’ என்ற தொற்று உலுக்கியது. 50 கோடி பேர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு, 5 கோடி பேர்கள் உயிரிழந்தனர்.

Update: 2020-09-07 20:51 GMT
1918-ம் ஆண்டில் உலகம் முழுவதையுமே ‘ஸ்பானிஷ் புளு’ என்ற தொற்று உலுக்கியது. 50 கோடி பேர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு, 5 கோடி பேர்கள் உயிரிழந்தனர். 100 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு திரும்பும் வகையில் கொரோனா தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகிலேயே கொரோனா பாதிப்பில் 2-வது இடத்துக்கு இந்தியா வந்துவிட்டது. தமிழ்நாடும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முன்னணி வரிசையில் இருக்கிறது. இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இப்போது 8-வது கட்டமாக கடந்த 1-ந்தேதி முதல் நிறைய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது. அரசின் பொருளாதாரமும் கைதூக்கி விடப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. சென்னையில் கடந்த 11 ஞாயிற்றுக்கிழமைகளிலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் 9 ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிறப்பிக்கப்பட்டு இருந்த முழு ஊரடங்கும் நேற்று முன்தினம் முதல் தளர்த்தப்பட்டது. இதனால் கொரோனா பரவலே நின்று விட்டது போல மக்கள் தங்கள் மனதில் ஒரு உணர்வை ஏற்படுத்தி எல்லா கட்டுப்பாடுகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர்.

‘இது தளர்வுதான். விடுதலை அல்ல’ என்பதை புரிந்து கொள்ளாமல் கொரோனா பரவலை தடுப்பதற்கு முக்கிய ஆயுதங்களான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சோப்பு அல்லது சானிடைசர் போட்டு கழுவுதல் என்ற பொன்விதிகள் மக்களுக்கு மறந்துவிட்டது போலும். தமிழ்நாடு முழுவதும் மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள், கடைவீதிகள், வழிபாட்டு தலங்களில் நெருக்கி அடித்துக்கொண்டு திருவிழா கூட்டம் போல நின்றனர்.

கொரோனா இப்போது அறிகுறியுடன் வருவது இல்லை. அறிகுறி இல்லாமல் தான் நிறைய பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆக, அந்த கூட்டத்தில் அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பை கொண்ட ஒருவர் பலருக்கு தொற்றைப் பரவச் செய்துவிட முடியும். சீனாவில் ஒரு குளுமை வசதி செய்யப்பட்ட பஸ்சில் 67 பேருடன் பயணம் செய்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் 100 நிமிட பயணத்தில் 23 பேர்களுக்கு கொரோனாவை பரவச் செய்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இதில் மற்றொரு தகவல் என்னவென்றால் பஸ்சுக்குள்தானே இருக்கிறோம் என்று யாரும் முககவசம் அணியவில்லை. அது போல 44 பேர்கள் கலந்துகொண்ட ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியிலும் கொரோனா பாதிப்பு உள்ள ஒருவரால் 7 பேருக்கு தொற்று பரவி இருக்கிறது. ஆக, முககவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைபிடிக்காத கூட்டம் எப்படி கொரோனாவை பரவச் செய்கிறது என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு. ஒரு கோயம்பேடு கூட்டம் நிறையப் பேரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கியதை தமிழ்நாடு மறந்துவிட்டது என்பதுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொருட்கள் வாங்குவதற்கும், வழிபாட்டு தலங்களிலும் பெரும் கூட்டம் நின்றதற்கு முக்கிய காரணம். முககவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் ரூ.500 அபராதம் என்ற அவசர சட்டத்தை அரசு தயவு தாட்சண்யமில்லாமல் நிறைவேற்ற வேண்டும். கொரோனாவின் அபாயத்தை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும். ஊரடங்கு தளர்வு அறிக்கப்பட்ட அன்று கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதையில், “ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க் கொல்லி நுழைந்துவிடக் கூடாது. மீண்டும் இயங்கப்போகும் வாழ்வியல் வெளியில் கடும் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக்கொள்வீர் பெருமக்களே! இது தீப்பிடித்த காடு பறவைகளே! பத்திரம்” என்ற எச்சரிக்கையை ஒட்டுமொத்த தமிழ்நாடும் மனதில் கொண்டு செயல்பட்டு கடும் கட்டுப்பாட்டை கைக்கொண்டால்தான் கொரோனா பாதிப்பில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

மேலும் செய்திகள்