கடன் தவணையை கட்ட முடியவில்லை

கொரோனாவின் கொடிய கரங்களின் தீண்டுதல் இன்னும் குறையவில்லை. தமிழ்நாட்டிலும் மார்ச் மாதம் முதல் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-09-17 21:30 GMT
நாடு முழுவதும் எல்லா தொழில்களும் ஒரு முடக்கநிலையை சந்தித்துவிட்டன என்பதற்கு ஜி.எஸ்.டி. வசூல் வீழ்ச்சியே சான்றாகும். அரசே வருவாய் இல்லாமல் தத்தளிக்கிறது என்றால், அது தனிநபர், நிறுவனங்களின் உற்பத்தி, வருவாய் பாதிப்பின் எதிரொலிதான். பெருமளவில் வேலைவாய்ப்பு பாதிப்பு, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உள்பட எல்லா தொழில்களுக்குமே பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அன்றாடம் ஏதாவது தொழில் செய்து வருவாய் ஈட்டினால் தான் வயிற்றுக்கு கஞ்சி என்ற நிலையில் உள்ளவர்களில் இருந்து பெரிய செல்வந்தர்கள் வரையில் எல்லோருமே வருவாய் வீழ்ச்சியில் இருந்து தப்பவில்லை. இப்படியொரு நிலை ஏற்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏராளமானவர்கள் மாதந்தோறும் கிடைக்கும் நிலையான வருவாயை நம்பி, வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், தொழில் கடன், கடன் அட்டை கடன் என்பன போன்ற பல கடன்களை வாங்கி மாதத்தவணையில் அதை திருப்பி செலுத்திக்கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவால் எல்லோருடைய வருமானமும் நசிந்த நிலையில், மாதத்தவணையை செலுத்த முடியாதநிலை ஏற்பட்டுவிட்டது. நல்ல வேளையாக, ரிசர்வ் வங்கி 6 மாதம் கடன் தவணை கட்டுவதை ஒத்திவைத்து உதவிக்கரம் நீட்டியது. இது ஒரு நிவாரணம் போல தோன்றினாலும், உண்மையான நிவாரணம் அல்ல. ஏனெனில், இந்த 6 மாத தவணை தள்ளுபடி கடனை திருப்பிக்கட்டும் காலத்தை மேலும் நீட்டிக்கும். இந்த 6 மாத கால தவணைக்கான வட்டிக்கும் வட்டி ஒரு பெரிய சுமையை ஏற்படுத்திவிடும். கொரோனா பாதிப்பு இன்னும் முடியாத நிலையில், இந்த மாதம் முதல் கடன் தவணையை செலுத்துமாறு வங்கிகள் கட்டாயப்படுத்துகின்றன.

நிலைமை சீரடைய இன்னும் 6 காலாண்டுகள், அதாவது 1½ ஆண்டுகள் ஆகும் என்பது வல்லுனர்களின் மதிப்பீடு. “நாங்கள் முழு அளவில் உற்பத்தியை தொடங்கவில்லை. இன்னும் எங்களுக்கு வருமானமே வராத நிலையில் எங்கிருந்து இந்த மாதக்கடன் தவணையை செலுத்த முடியும்” என்பது தொழிலதிபர்களின் துயரக்குரல். “வங்கிகளில் கடன் வாங்கி, திருமண மண்டபம் கட்டினோம். இன்னும் திருமணங்களை மண்டபங்களில் நடத்துவதற்கான அனுமதியை அரசு வழங்கவில்லை. திருமண மண்டபங்களை பூட்டித்தான் வைத்திருக்கிறோம். வருமானம் இல்லாத நிலையில், மாதத்தவணையை கட்ட சொல்கிறார்கள். இந்த மாத தவணையை கட்ட வெளியே அதிக வட்டிக்கு கடன் வாங்கித்தான் கட்ட வேண்டியது இருக்கிறது” என்பது திருமண மண்டப உரிமையாளர்களின் சோகக்குரல்.

பெரிய தொழிலதிபர்களின் நிலையும் இதுதான். இப்படி மாதச்சம்பளம் பெறுபவர்களில் இருந்து பெரிய தொழிலதிபர்கள் வரை எல்லோருமே கடன்களுக்கான மாதத்தவணையை கட்டுவதற்கு சிரமப்படுகிறார்கள். எனவே, சிறிய கடன், பெரிய கடன் என்று இல்லாமல் அனைத்து கடன்களையும் திருப்பிக்கட்டுவதற்கான தவணையை கொரோனா பாதிப்பு குறையும் வரை தள்ளி வைக்க வேண்டும், கடன் தவணைக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், வட்டிக்கு வட்டி என்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று 3 கோரிக்கைகள் எல்லாத்தரப்பில் இருந்தும் ரிசர்வ் வங்கியை நோக்கியும், மத்திய அரசாங்கத்தை நோக்கியும் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், மத்திய அரசாங்கம் கடன் தவணை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகைக்கான வட்டி ரத்து குறித்து ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் ரிசர்வ் வங்கியின் சார்பில் யாரும் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. ரிசர்வ் வங்கி செய்ய வேண்டிய வேலை, இப்போது மத்திய அரசாங்கத்தின் வேலையாகி விட்டது. ஆனால், யார் செய்தால் என்ன, எங்களுக்கு தேவை உடனடி நிவாரணம் என்பது வங்கிகளில் கடன் வாங்கி மாதத்தவணைகளை செலுத்த முடியாமல் தத்தளித்து கொண்டிருப்பவர்களின் அபயக்குரலாகும்.

மேலும் செய்திகள்