அரசியல் ஆடுகளத்தில் ரஜினிகாந்த் கட்சி இல்லை!

1996-ம் ஆண்டில் இருந்தே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்று ஒரு பிரிவினரும், வரமாட்டார் என்று ஒரு பிரிவினரும் பட்டிமன்றத்தில் உண்டு, இல்லை என்று வாதங்கள் வலுவாக இருப்பதுபோல, பலத்த கருத்து பரிமாற்றங்களை நடத்தினர்.

Update: 2020-12-29 20:30 GMT
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ரசிகர்களுடனான சந்திப்பின் நிறைவில், ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என்று ரஜினிகாந்த் சொன்னது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த் கடந்த 3-ந்தேதி ஒரு டுவிட்டர் பதிவில் ‘ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31-ந்தேதி அறிவிப்பு’ என்று பதிவிட்டிருந்தார். அதற்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துவிட்டு முழுமையான அரசியலில் இறங்க அவர் முடிவு எடுத்திருந்தார். அதன்படி, ஐதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நேரத்தில் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், அதில் இருந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவர் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் ரத்தஅழுத்த மாறுபாடு இருந்தது. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை ஏற்கனவே செய்யப்பட்ட நிலையையும், ரத்தஅழுத்த மாறுபாடுகளையும், அவரது வயதையும் கருத்தில்கொண்டு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவர் ஒரு வார காலத்துக்கு முழுஓய்வில் இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும், அபாயத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடக்கூடாது என்று ஆலோசனை வழங்கினர்.

இந்த சூழ்நிலையில் அவர் 31-ந்தேதி கட்சி தொடங்கும் அறிவிப்பை எப்படி வெளியிடமுடியும்? ஏற்கனவே ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்களே? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதுள்ள உடல்நிலையிலும், சிறுநீரக அறுவைசிகிச்சை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் சூழ்நிலையிலும், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து பிரசாரத்தின்போது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்ட எல்லோருக்கும் பல துன்பங்கள் ஏற்படும். ஆகவே கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வரமுடியவில்லை’ என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக கூறியிருக்கிறார். பல கட்சிகள் போட்டியிடும் 2021 தேர்தல் ஆடுகளத்தில் ரஜினிகாந்த் கட்சி போட்டியிடவில்லை என்பதை அவர் இதன் மூலம் தெளிவாக்கிவிட்டார். ரஜினிகாந்த் மிக துணிச்சலாக இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவரது இந்த முடிவு இந்த தேர்தலிலும், தேர்தல் களத்திலும் நேற்று முதல் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், அவருடைய கட்சி தனியாக போட்டியிடுமா? ஏற்கனவே கூறியதுபோல 234 தொகுதிகளிலும் போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அவர் தலைமையில் கூட்டணி இருக்குமா? அல்லது வேறொரு கட்சியுடன் கூட்டணி இருக்குமா? என்றெல்லாம் பல கருத்துகள் அரசியல் உலகில் உலா வந்தன. அவர் கட்சி ஆரம்பித்தால் எந்த கட்சிக்கு பாதிப்பு? இதுவரை யாருடைய ஓட்டு வங்கியில் இருந்த ஓட்டுகள் அவருக்கு போய் சேரும்? என்றெல்லாம் பல கணக்குகள் போடப்பட்டு வந்தன. ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் என்ற நிலையில் போடப்பட்ட கணக்குகள் எல்லாம், இனி அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே தமிழக தேர்தல் அரசியலிலும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை, அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பு இதுவரை போட்ட கணக்குகளை எல்லாம் அழித்துவிட்டு, இனி புது கணக்குகளை போட வழிவகுத்துவிடும். ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தில் ராதாரவி கூறுவதுபோல, ‘கூட்டி கழிச்சு பாரு.. கணக்கு சரியா வரும்’ என்ற புகழ்மிக்க வசனத்தை உறுதிப்படுத்தும் வகையில் இப்போது எல்லா அரசியல் கட்சிகளையும் கூட்டி கழித்து பார்க்கும் வேலைகளை செய்ய தொடங்கும் நிலையை, ரஜினிகாந்த் வைத்துவிட்டார்.

மேலும் செய்திகள்