நல்லுறவுக்கு இது வழி திறக்கட்டும்!

“அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்” என்பதுபோல், இந்த பேச்சு வார்த்தைகளுக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது.

Update: 2021-02-14 21:45 GMT
“உன் நண்பர்களை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், அண்டை நாட்டுக்காரர்களை மாற்றிவிட முடியாது. எனவே, சமாதானத்தோடு வாழ்வதுதான் நல்லது” என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். ஆனாலும், நமது அண்டை நாடான சீனாவோடு அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. 1962-ம் ஆண்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நடந்த போரின்போது, சீனா இந்தியாவிலுள்ள 43 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டது. இப்போதும், எல்லையின் கிழக்குப் பகுதியில் அருணாச்சலபிரதேசத்திலுள்ள 90 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை தனக்கு சொந்தமானது என்று கூறிவருகிறது. ஆனால், இதை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்த 9 மாத காலமாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே லடாக் பகுதியில் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். இந்தநிலையில், இந்த மோதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற முயற்சியில், 2 நாட்டு ராணுவ அதிகாரிகள், தளபதிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும், சீன ராணுவ மந்திரியும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுபோல, இந்திய வெளிவிவகாரத் துறை மந்திரி ஜெய்சங்கர், சீன வெளிவிவகாரத்துறை மந்திரியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பாதுகாப்பு ஆலோசகருடன் பேசினார்.

இந்த பேச்சு வார்த்தைகளில் எல்லாம் முதலில், இந்தியா-சீனா எல்லையின் மேற்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருநாட்டு படைகளும் வாபஸ் பெறவேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது. “அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்” என்பதுபோல், இந்த பேச்சு வார்த்தைகளுக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. இருநாடுகளும், பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளிலுள்ள தங்கள் படைகளை படிப்படியாக வாபஸ் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்குள் இருநாட்டுப் படைகளும் வாபஸ் பெற்றுவிடும். சீனப்படைகள் பிங்கர்-8 பகுதியிலுள்ள தங்கள் முகாமுக்கு திரும்பிவிடும். இதேபோல, இந்தியப் படைகள் பிங்கர்-3 பகுதியிலுள்ள தங்கள் தன்சிங் தாபா சாவடி முகாமுக்கு திரும்பிவிடும். சர்ச்சைக்குரிய பிங்கர்-4 பகுதியில் இருந்து 8-வது பகுதிவரை இருநாட்டு ராணுவமும் எந்தவித ரோந்து பணிகளையும் மேற்கொள்ளாது. ஏப்ரல் 20-ந்தேதிக்கு பிறகு அந்தப்பகுதியில் கட்டப்பட்ட தற்காலிக உள்கட்டமைப்பு வசதிகள் எல்லாம் விலக்கிக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

சீனா இந்த பகுதிகளில் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்து வைத்திருந்தது. கடும் பனிக்குள் இருநாட்டு வீரர்களும் தங்கள் உயிரையும் பணயம்வைத்து காவல் காத்துக்கொண்டிருந்தனர். இந்தியா-சீனா இருநாடுகளும் நட்புறவுடன் இருந்தால்தான், வர்த்தக உறவு மேம்படும். மற்ற பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக இருநாட்டு படைகளும் வாபஸ்பெற்ற 48 மணி நேரத்தில், இருநாட்டு மூத்த ராணுவ தளபதிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிச்சயமாக, இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தமாகும். ஆனால், வெறும் எழுத்து வடிவில் சமாதானம் வந்துவிடாது. அதை முழு உணர்வோடு செயல்படுத்தவேண்டும். இருநாடுகளுக்கு இடையே நல்லுறவுவேண்டும் என்றால், எல்லைப் பகுதியில் அமைதி இருந்தால்தான் முடியும். அந்த வகையில், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் முயற்சிகளும், ராணுவ தளபதிகளின் முயற்சிகளும் இப்போதைக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்றே கூறலாம். ஆனால், இந்த வெற்றி நிரந்தர வெற்றியாகவேண்டும்.

1950 தொடக்கங்களில் இந்திய பிரதமர் நேருவும், சீன அதிபர் சூயன்லாயும் சந்தித்த நேரத்தில் கூறியதுபோல, இந்தியாவும், சீனாவும் சகோதரர்களாக வாழவேண்டும் என்றால், இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு திகழ்ந்தால் மட்டுமே முடியும்.

மேலும் செய்திகள்