வரவேற்புகளும், எதிர்ப்புகளும் கலந்த அறிவிப்புகள்

பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத சில அறிவிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

Update: 2021-02-26 21:30 GMT
சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை அறிக்கைகளாக வெளியிட வகை இருக்கிறது. அந்தவகையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத சில அறிவிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிவித்துள்ளார். 2020-21-ம் கல்வியாண்டில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டுத்தேர்வு, பொதுத்தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்படுகிறது என்று அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதுபோல அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது 60 வயதாக உயர்த்தப்படுகிறது என்றும், இந்த உத்தரவு அரசு, அரசு உதவிபெறும் கல்விநிறுவனங்கள், அரசியலமைப்பு, சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுநிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவித்துள்ளார். இந்த இரு அறிவிப்புகளும் பலத்த கருத்து வெளிப்பாடுகளை கிளப்பியுள்ளன. ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் முதல் வகுப்புகள் நடத்தப்படவில்லை. ‘ஆன்-லைன்’, கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19-ந்தேதி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 8-ந்தேதிதான் வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாணவர்கள் முழுவீச்சில் பாடங்களை மிகவும் ஆர்வமாக படிக்க தொடங்கினார்கள். ஆசிரியர்களும் அக்கறையோடு கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்தவாரம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தநிலையில், முதல்-அமைச்சரின் இந்த திடீர் அறிவிப்பு எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

10-ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தமட்டில், எல்லோரும் 11-ம் வகுப்புகளுக்கு சென்றுவிடுவதில்லை. நிறையபேர் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவார்கள். அத்தகைய படிப்புகளுக்கு 10-ம் வகுப்பு மார்க் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் சூழ்நிலையில், இந்த ஆண்டு எப்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்? என்பது குழப்பமாக இருக்கிறது. பல நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் பார்ப்பார்கள். மேலும் தேர்வுதான் மாணவர்களின் கற்றல்திறனை மதிப்பீடு செய்கிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் முன்பு 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அவர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். இப்போது தேர்வுகள் இல்லை என்று அறிவித்துவிட்டதால், எப்படியும் பாஸ் பண்ணிவிடுவோம் என்ற உணர்வில் மாணவர்களிடையே படிக்கும் ஆர்வம் குறைந்துவிடும். எனவே தேர்வு தேதியை தள்ளிவைத்துவிட்டு நடத்தியிருக்கலாம் அல்லது பள்ளிக்கூட அளவில், மாவட்ட அளவில் தேர்வுகளை நடத்தியிருக்கலாம். இதனடிப்படையில் எல்லோரும் பாஸ் என்று அறிவித்திருக்கலாம் என்ற கருத்து பெரும்பாலும் நிலவி வருகிறது.

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது இப்போதுள்ள அரசின் நிதிநிலையில், ஏறத்தாழ 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் சூழ்நிலையில் அவர்களுக்கான ஓய்வூதியப்பலன்கள் கொடுப்பதற்கு அரசிடம் நிதியில்லை. இதன்காரணமாக ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 59 ஆக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. அதே காரணத்துக்காக இந்த ஆண்டும் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும். விரக்தியில் இளைஞர்களை தள்ளிவிட்டுவிடும். ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலைக்காக காத்திருக்கும்நிலையில், அவர்களுக்கு கடந்த ஆண்டும் வேலைவாய்ப்பு இல்லை. இந்த ஆண்டும் வேலைவாய்ப்பு இல்லை என்றால், அவர்களின் எதிர்காலமும் கேள்விகுறியாகிவிடும் என்ற கருத்தும் இருக்கிறது. பலருக்கு வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான வயதுவரம்பும் முடிந்துவிடும். மொத்தத்தில் இந்த இரு அறிவிப்புகளுக்கும் வரவேற்பும் இருக்கிறது. அதேநேரத்தில் விமர்சனமும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

மேலும் செய்திகள்