மீனவர்களின் நிறைவேறாத கோரிக்கை!

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 135 நாட்கள் அவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2021-04-22 21:05 GMT
கடலில் போய் மீன்பிடிப்பது என்பது, மிகவும் ஆபத்தான தொழில். எந்த நேரத்தில் கனமழை பெய்யுமோ?, கடும் புயல் வீசுமோ?, ஆர்ப்பரிக்கும் அலை படகை கவிழ்த்துவிடுமோ?, இடையில் மோட்டார் பழுதானால் என்ன செய்வது?, இதை எல்லாவற்றையும் மீறி இலங்கை கடற்படை பிடித்து சென்று விடுமோ? என்ற தொடர் அச்சத்தையும் தாண்டி, மீன்பிடிக்க சென்றால், போதுமான அளவு மீன்கள் கிடைக்குமா? என்ற ஏக்கமும் ஏற்படுகிறது. இப்படி நித்தம்.. நித்தம்.. ஒரு நிலையில்லாத வாழ்க்கையை வாழ்பவர்கள்தான் மீனவர்கள்.

அதனால்தான், 19-வது நூற்றாண்டில் தலைசிறந்த ஓவியராக திகழ்ந்த டச்சு நாட்டை சேர்ந்த வின்சென்ட் வான் கோ என்பவர், மீனவர்களை பற்றி குறிப்பிடும்போது, “கடல் ஆபத்தானது. கடும் புயல் பயங்கரமானது என்பதெல்லாம் மீனவர்களுக்கு தெரியும். ஆனால், மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே உட்கார்ந்துகொள்வதற்கு, இந்த ஆபத்துகள் எல்லாம் போதுமான காரணங்கள் அல்ல என்பதுதான் அவர்கள் எப்போதும் கொண்டிருக்கும் நிலைப்பாடு” என்கிறார்.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 135 நாட்கள் அவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இப்போதெல்லாம் மீனவர்கள் கடலில் போதுமான அளவு மீன்வளம் இல்லை என்ற குறைபாட்டை சொல்கிறார்கள். இந்தநிலையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கிறது. இந்த நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கடலில் போய் மீன்பிடிக்க முடியாது. மீனவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிப்பு, அதே நேரத்தில் மக்களுக்கும் மீன்கள் சரிவர கிடைக்காமல் அதிகவிலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை.

எதற்காக இந்த மீன்பிடி தடைக்காலம் என்றால், இந்த நேரத்தில்தான் மீன்கள் இனவிருத்தி செய்யும். எனவே, அந்த நேரத்தில் போய் மீன்பிடிக்கக்கூடாது என்பதைத்தான் கூறுகிறார்கள். ஆனால், தமிழக மீனவர்களை பொறுத்தமட்டில், நமக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரைதான் மழைகாலம் என்ற வகையில், அப்போதுதான் மீன்களின் இனவிருத்தி இருக்கும். அந்த காலக்கட்டங்களில் கடலில் போய் மீன்பிடித்தால், சினை மீன்கள், மீன் குஞ்சுகளையும் பிடித்துக்கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படுவதாக வருத்தப்படுகிறார்கள். மேலும், தொடர்ந்து ஆண்டு முழுவதும் நிறைய மீன்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

பொதுவாக இந்த காலங்களில்தான் கடலில் புயல் தோன்றும் என்பதால், பல நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, மீன்பிடி தடைக்காலத்தை ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை இருப்பதை அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மாற்றியமைக்கவேண்டும் என்பதுதான் மீனவர்களின் கோரிக்கை. இந்த தடைக்காலம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. கிழக்கு கடலோர மாநிலங்கள் அனைத்திலும் இந்த தடைக்காலம் அமலில் இருக்கிறது. எனவே, இதை மாற்றியமைக்கவேண்டும் என்றால், அந்த கடலோர மாநிலங்களும் இதை ஏற்றுக்கொண்டால்தான் முடியும். அந்த ஏற்பாடுகளை மத்திய அரசாங்கம்தான் செய்யவேண்டும்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மத்திய அரசாங்கத்துக்கும், கடலோர மாநில முதல்-மந்திரிகளுக்கும் கடிதம் எழுதினார். ஆனால், பல மாநில அரசுகள் இதற்கு செவிசாய்க்கவில்லை என்பது அவரது கருத்து.

இச்சூழ்நிலையில், இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் இப்போது தொடங்கிவிட்டதால், இனி மாற்றம் செய்வது என்பது முடியாது. எனவே, மே 2-ந்தேதிக்கு பிறகு அமையப்போகும் புதிய அரசின் மீன்வளத்துறை அமைச்சர், மீனவர்களின் இந்த கோரிக்கையை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று, உடனடியாக கிழக்கு கடலோர மாநிலங்களின் மீன்வளத்துறை மந்திரிகள் கூட்டத்தைக்கூட்டி, தமிழக மீனவர்களுக்கு சாதகமான முடிவை அடுத்த ஆண்டு முதலாவது பெற்றுத்தரவேண்டும். முதல்-அமைச்சரும், ஆட்சிப் பொறுப்பை ஏற்று, முதல் முறையாக பிரதமரை சந்திக்கும்போது, கொடுக்கப்போகும் கோரிக்கை மனுவில் மீனவர்களின் இந்த கோரிக்கையும் இடம்பெறவேண்டும் என்பது மீனவர்களின் விருப்பமாக இருக்கிறது.

மேலும் செய்திகள்