18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெளிநாட்டு தடுப்பூசிகள்!

ஜனவரி 16-ந்தேதி முதல் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுவந்தது.

Update: 2021-05-17 22:00 GMT
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கால் பதித்த கொரோனா மார்ச்சில் இருந்து தமிழ்நாட்டில் கோரதாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தடுப்பூசி ஒன்றுதான் ஆயுதம் என்ற வகையில், இந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுவந்தது. மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் போடப்பட்டுவந்த தடுப்பூசி, ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது.

இது, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்திலும் போடப்பட்டு வந்தது. இதுவரை தடுப்பூசிகள் முழுமையையும் இலவசமாகவே வழங்கிவந்த மத்திய அரசு, இப்போது சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் “கோவிஷீல்டு”, பாரத் பயோடெக் நிறுவனத்தின் “கோவேக்சின்” தடுப்பூசி மருந்துகளின் மொத்த உற்பத்தியில், 50 சதவீத உற்பத்தியை மட்டுமே வாங்கி இலவசமாக மாநில அரசுகளுக்கு வழங்கும். மீதமுள்ள தேவைக்கு மாநில அரசுகளே விலை கொடுத்து வாங்கவேண்டும் என்று அறிவித்துவிட்டது.

இந்தநிலையில், மே 1-ந்தேதி முதல் 18 வயதில் இருந்து 45 வயதுவரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடலாம். ஆனால், அந்த தடுப்பூசியை மாநில அரசுகள்தான் விலை கொடுத்து வாங்கவேண்டும் என்று மத்திய அரசு கூறிவிட்டது. மத்திய அரசாங்கத்துக்கு ரூ.150-க்கு கிடைக்கும் “கோவிஷீல்டு” தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு ரூ.300 என்றும், “கோவேக்சின்” தடுப்பூசி ரூ.400 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே தமிழக அரசு பணம் கட்டினாலும், போதுமான அளவு தடுப்பூசி மருந்துகள் தேவையான நேரத்தில் கிடைப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில், 40 வயதுக்கு குறைவான இணை நோய்கள் இல்லாத ஏராளமான இளம் வயதினர் மற்றும் உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

எனவே, தமிழ்நாட்டிலுள்ள 18 வயது முதல் 45 வயது வரையுள்ள 3 கோடியே 65 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியது மிகவும் அவசரமான ஒரு நிலையாக உள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 45 சதவீதம் பேர் இந்த வயது வரம்பில் இருக்கிறார்கள். இவர்களுக்கு தடுப்பூசி போட, இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசி மருந்துகள் உடனடியாக கிடைக்காத நிலையில், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி மருந்து வாங்குவதுதான் ஒரே வழி என்ற நிலைக்கு தமிழக அரசு ஆளாகியுள்ளது. ஒடிசா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மராட்டியம், கர்நாடகம், மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி மருந்துகளை வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடலாம் என்றநிலை இருந்தாலும், இதுவரை 13 லட்சம் தடுப்பூசிகள்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இப்போது, 18 வயதிலிருந்து 45 வயதுவரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள் மூலம் 3½ கோடி டோஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. இதற்கான குறுகிய கால டெண்டரில், உலகிலுள்ள பல தடுப்பூசி மருந்து கம்பெனிகள், குறிப்பாக அமெரிக்க நாட்டின் மாடர்னா, பைசர், ஜான்சன் அண்டு ஜான்சன் போன்ற பல நிறுவனங்கள் பங்குபெறும்.

இந்த ஒப்பந்தப்புள்ளிகளில் தேர்வாகும் நிறுவன தடுப்பூசி மருந்துகள், 90 நாட்களில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும். “ஸ்புட்னிக்” தடுப்பூசி மருந்து அடுத்த வாரத்தில் இந்தியாவில் வினியோகிக்கப்பட இருக்கிறது. இந்த தடுப்பூசி மருந்தையும், தமிழகத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு அதிக அளவில் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்