ஒன்றல்ல; 2 முககவசம் வேண்டும்!

கொரோனாவின் கொடிய தாக்குதலின் முதல் அலையில், நன்றாக குறைந்துகொண்டிருந்த பாதிப்பு எண்ணிக்கை, 2-வது அலை தொடங்கியவுடன் ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டேபோகிறது.

Update: 2021-05-26 18:52 GMT
கொரோனாவின் கொடிய தாக்குதலின் முதல் அலையில், நன்றாக குறைந்துகொண்டிருந்த பாதிப்பு எண்ணிக்கை, 2-வது அலை தொடங்கியவுடன் ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டேபோகிறது. தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 20-ந்தேதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 438 ஆக இருந்த நிலையில், நேற்று 33,764 ஆக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு நிலையை பார்த்தால், அச்சமூட்டும் வகையில் இருக்கிறது.

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், “பல மாவட்டங்களில் நிலைமை கவலையளிக்கத்தக்க வகையில் இருக்கிறது” என்று குறிப்பிட்டு, “இந்த பரவல் சங்கிலியை துண்டிக்கத்தான் ஊரடங்கு” என்று கூறினார். நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘ஊரடங்கினால் சில பயன் வந்துகொண்டிருக்கிறது. அதை மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். சென்னை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்துகொண்டிருக்கிறது என்றும், இன்னும் 2, 3 நாட்களில் முழு பலனை தரும்” என்றும் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால், 20 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று கடந்த 11-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கீடுகளில் தெரிகிறது. இதில், செங்கல்பட்டு, தேனி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் 30 சதவீதத்துக்கு மேலும் இருக்கிறது. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகளை தமிழகஅரசு எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் 69 அரசு மருத்துவமனைகளில், இலவசமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. இதுதவிர, 198 தனியார் பரிசோதனை கூடங்களில், முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்ய கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.550 ஆகவும், மற்றவர்களுக்கு இதுவரை ரூ.1,200 ஆக இருந்த பரிசோதனை கட்டணம் இப்போது ரூ.900 ஆகவும் குறைக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது மிகவும் வரவேற்புக்குரியது. பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது அறிகுறி இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்துகொண்டு, சிகிச்சை பெற்றால் தொடக்கத்திலேயே குணமாக்கிவிட முடியும்.

மத்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா பரவலை தடுப்போம். இந்த தொற்றை நசுக்குவோம்” என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளில், தும்மல், இருமலின்போது வெளியேறும் நுண்ணிய நீர்திவலைகள் 10 மீட்டர் தூரம் வரை பரவும் வாய்ப்பு இருக்கிறது. கொரோனா பாதித்தவரின் மூக்கு, வாய் பகுதிகளில் இருந்து வெளியேறும் எடை அதிகம் உள்ள நீர்திவலைகள் 2 மீட்டர்தூரம் வரை பரவி கீழே விழும். இவை இரண்டும்தான் கொரோனா பரவலை அதிகம் ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் இரட்டை முககவசம் அணிவது சாலச்சிறந்தது என்றும், அல்லது என்-95 மருத்துவ முககவசம் அணியவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பலர் முககவசம் அணியாமல் அலையும்நிலை இன்னும் இருக்கிறது. சிலர் முககவசம் அணியும்போது, மூக்குக்கு கீழேயோ, வாய்க்கு கீழேயோ, ஏன் சிலநேரம் தாடைக்கு கீழேயோ அணிந்து கொண்டிருக்கும் நிலையை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோசெய்தியில் வெளியிட்டு, அவ்வாறு செய்யக்கூடாது என்பதை எடுத்துக்கூறினார். சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது, அவரைக்காண திரண்டிருந்த பொதுமக்களில், முககவசம் அணியாதவர்களுக்கு தன் காரில் இருந்து முககவசங்களை எடுத்து வழங்கி, அதை அணிந்துகொள்ள கூறியது மட்டுமல்லாமல், எப்போதும் அணியவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

இப்போது கொரோனா பாதிப்பின் காரணமாகவும், ஊரடங்கினால் வேலையிழந்த நிலையிலும் இருக்கும் ஏழை-எளிய மக்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முககவசம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மொத்தத்தில் கொரோனா பரவலின் வேகத்தை தடுக்கவேண்டும் என்றால், எல்லோரும் இரட்டை முககவசம் அணிந்தால் மட்டுமே முடியும் என்பதே, மத்தியஅரசாங்கத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் அறிவுரையாக இருக்கிறது.

மேலும் செய்திகள்