விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நரேந்திரமோடி - மு.க.ஸ்டாலின்!

உலகில் எல்லா தொழில்களையும்விட உன்னதமான தொழில் விவசாயம்தான். அதனால்தான், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அய்யன் திருவள்ளுவர் உழவர்களின் மேன்மை குறித்து, “உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை” என்ற திருக்குறளை எழுதியுள்ளார்.

Update: 2021-06-23 22:09 GMT
உலகில் எல்லா தொழில்களையும்விட உன்னதமான தொழில் விவசாயம்தான். அதனால்தான், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அய்யன் திருவள்ளுவர் உழவர்களின் மேன்மை குறித்து, “உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை” என்ற திருக்குறளை எழுதியுள்ளார். இதன் பொருள், “உழவருடைய கைகள் உழவுத்தொழிலைச் செய்யாமல் மடங்கி இருக்குமானால், எல்லாப் பற்றினையும் விட்டு விட்டோம் என்று சொல்கின்ற துறவிகளுக்கும் வாழ்வு இல்லை” என்பதாகும்.

கொரோனா காலத்தில் எல்லா தொழில்களுமே முடங்கிப்போன நிலையில், விவசாயம் மட்டும் வீறுகொண்டு எழுந்து, வேகமாக நடந்ததால்தான், உணவு உற்பத்தியில் எந்தவித தொய்வும் ஏற்படவில்லை. இப்போது குறுவை சாகுபடி தொடங்க இருக்கிறது. இந்தநேரத்தில், கடும் விலைவாசியாலும், கொரோனா பாதிப்பினாலும் அவதிப்படும் விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் உதவிக்கரம் நீட்டும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது, போற்றுதலுக்குரியது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்துவைத்தார். இதுமட்டுமல்லாமல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும், கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் சில பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், குறுவை நெல் சாகுபடியில் உயர் மகசூல் பெறவேண்டும் என்ற நோக்கத்தில், முக்கிய இடுபொருட்கள் மற்றும் வேளாண் எந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் வகையில், ரூ.61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2,870 டன் சான்று நெல் விதைகள், ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முழு மானியத்தில் ரசாயன உரங்கள், 24 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பசுந்தாளுர விதைகள் போன்ற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும். இதுதவிர, பண்ணைக் குட்டைகளும் அமைக்கப்படும். இதன் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 259 விவசாயிகள் பயனடைவார்கள் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்திருப்பது மிகவும் வரவேற்புக்குரியது. ஆனால், இதுபோல தமிழகம் முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் திட்டங்களை அறிவித்தால், எல்லா விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் தங்கள் சாகுபடியை மேற்கொள்ள உதவியாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் எல்லா விவசாயிகளுக்குமே மானியங்கள், உதவிகள் மிகமிக தேவையாகும்.

பயிர் சாகுபடிக்கு உரம் மிகமிக அவசியமானதாகும். பொதுவாக விவசாயிகள் டை-அம்மோனியம் பாஸ்பேட் என்று கூறப்படும் டி.ஏ.பி. உரத்தையும், யூரியாவையும்தான் பயன்படுத்துவார்கள். யூரியா விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனால், டி.ஏ.பி. உர விலை, உரக் கம்பெனிகளாலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில், டி.ஏ.பி. உரம் தயாரிப்பதற்கு தேவையான பாஸ்பாரிக் அமிலம், அம்மோனியா மற்றும் ஏனைய மூல பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியத்தில், சர்வதேச விலை 60 முதல் 70 சதவீதம்வரை உயர்ந்தது. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் டி.ஏ.பி. உரம் விலை உயர்ந்தவுடன், விவசாயிகள் பெரும் எதிர்ப்பை தெரிவித்தனர். உடனடியாக மத்திய அரசாங்கம் தலையிட்டு, பழைய இருப்பு தீரும்வரை பழைய விலையிலேயே விற்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. டி.ஏ.பி. உரத்திற்கு, 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டைக்கு மத்திய அரசாங்கம் ரூ.500 மானியம் கொடுத்து வருவதால் ரூ.1,200-க்கு விற்றுவந்தது. தற்போது இதன் விலை ரூ.1,900 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மேலும் ரூ.700 மானியமாக கொடுத்து பழைய விலையிலேயே விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதற்கான வசதிகளை பிரதமர் நரேந்திரமோடி ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக, மத்திய அரசாங்கத்துக்கு கூடுதலாக ரூ.14,775 கோடி செலவாகும். பிரதமரும், முதல்-அமைச்சரும் எடுத்துள்ள இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் செய்திகள்