உக்ரைன் மாணவர்களுக்கு இடம் உண்டா?

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து, அங்கு படித்துவந்த இந்திய மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பெரும்பாடுபட்டு போனார்கள்.

Update: 2022-03-17 19:41 GMT
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து, அங்கு படித்துவந்த இந்திய மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பெரும்பாடுபட்டு போனார்கள். கல்லூரிகள் மூடப்பட்டநிலையில், போகமுடியாத சூழலில் குண்டுமழை பெய்தது. படிப்பைக்கருதி ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலான மாணவர்கள் நாடு திரும்ப முன்வரவில்லை. ஆனால், விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டவுடன் என்ன செய்வது? என்று தெரியாமல் திக்குமுக்காடிப்போனார்கள். இந்தியா முழுவதும் ஏறத்தாழ 20 ஆயிரம் மாணவர்கள் படித்துவந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 1,921 மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழகஅரசு மிகத்தீவிரமாக எடுத்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்தார்.

தமிழகத்தை சேர்ந்த 1,890 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகத்துக்கு வந்துசேர்ந்தனர். இதில் 1,524 மாணவர்கள் தமிழக அரசின் செலவில் இங்கு அழைத்துவரப்பட்டு, அவர்கள் இல்லம் வரை கொண்டு சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள 366 மாணவர்கள் அவர்களது சொந்தசெலவில் தமிழகம் திரும்பியுள்ளனர். 31 மாணவர்கள் உக்ரைனிலும், அதன் அண்டைநாடுகளிலும் பாதுகாப்பாக குடியேறிவிட்டனர்.

இந்தநிலையில், இந்தியா திரும்பிய மாணவர்கள் குறிப்பாக தமிழக மாணவர்கள் இங்குள்ள மருத்துவக்கல்லூரிகளிலேயே தங்கள் படிப்பைத்தொடர மத்திய-மாநில அரசுகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். உக்ரைன் போன்ற நாடுகளில் படித்துமுடித்த மாணவர்கள், இந்தியாவில் வந்து மருத்துவத்தொழிலை தொடரவேண்டும் என்றால், வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வை எழுதவேண்டும். வெளிநாடுகளில் படிப்பவர்கள் பெரும்பாலும் இந்தத்தேர்வில் வெற்றிபெறுவதில்லை. எப்.எம்.ஜி. என்று அழைக்கப்படும் இத்தேர்வை எழுதிய மாணவர்களில் 14 முதல் 20 சதவீதம் வரையே தேர்ச்சி பெறுகிறார்கள். எடுத்துக்காட்டாக, கடந்தாண்டு 23,349 மாணவர்கள் இத்தேர்வை எழுதியதில், 5,665 மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். மேலும், இப்போதுள்ள மருத்துவக்கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட முழுஅளவில், இந்தியாவில் ‘நீட்’ தேர்வு எழுதி தேர்வுபெற்றவர்களே படித்துவருகிறார்கள். ஏதாவது தேர்வு வைத்து உக்ரைன் மாணவர்களை சேர்க்கவேண்டும் என்றால், ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியிலும் மாணவர்களின் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்படவேண்டும். ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படுவார்கள். உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படவேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக, ‘நீட்’ தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்ற மாணவர்கள், ‘எங்களைவிட குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதே...’, என்று கோர்ட்டுக்கு போகும் நிலையும் வரலாம். 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தாக்குதல் அதிகமாக இருந்தநேரத்தில், சீனாவில் படித்த மாணவர்கள் அங்கு பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதாலும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும் இந்தியா திரும்பிவந்து, இன்னும் விசா பிரச்சினைகளால் அங்கு போகமுடியாமல் இருக்கிறார்கள். உக்ரைன் மாணவர்களுக்கு இடம் கொடுக்கும்போது, அவர்களும் இடம் கேட்பார்கள். சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து மட்டும் 1 லட்சம் மாணவர்கள், இந்தியாவுக்கு திரும்பவந்துள்ளதாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கே.செந்தில் தெரிவித்துள்ளார். ‘உக்ரைன் மாணவர்களை இந்திய மருத்துவக்கல்லூரிகளில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை’, என்று அவர் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசும்போது கூட, உக்ரைன் மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடருவது பற்றி எதுவும் பேசவில்லை. எந்த உறுதியும் அளிக்கவில்லை.

இந்தநிலையில், உக்ரைன் மாணவர்களுக்கு நம்பிக்கை வெளிச்சமாக அங்குள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்-லைன் வகுப்புகளை தொடங்கிவிட்டன. மாணவர்களில் ஒருசாரார் உக்ரைனிலோ, உக்ரைன் போன்ற பாடத்திட்டங்களை கொண்ட போலந்து போன்ற நாடுகளிலோ படிக்க விரும்புகிறார்கள். போலந்து போன்ற சில நாடுகள் இந்த மாணவர்களை சேர்க்க தயாராக இருக்கின்றன. இவ்வாறு பல அம்சங்களை கருத்தில்கொண்டு உடனடியாக மத்தியஅரசாங்கம், உக்ரைன் மாணவர்களுக்கு இந்திய மருத்துவக்கல்லூரிகளிலேயே படிப்பைத்தொடர வாய்ப்பு இருக்கிறதா?, இல்லையா? என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிடவேண்டும். மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் இங்கு படிப்பதற்கு இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையை வளர்த்து கொண்டிருக்கக்கூடாது. படிக்கலாம் என்றால் உடனடியாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும், முடியாது என்றால் அதையும் தெரிவித்துவிடவேண்டும்.

மேலும் செய்திகள்