அரசு மருத்துவமனைகளிலேயே எல்லோருக்கும் பூஸ்டர் டோஸ் போடலாமே!

கொரோனா வராமல் தடுக்கும் ஒரு கவசமாக, கேடயமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன.

Update: 2022-04-10 19:41 GMT
கொரோனா வராமல் தடுக்கும் ஒரு கவசமாக, கேடயமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன. 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்பிறகு, படிப்படியாக ஒவ்வொரு வயதினருக்கும் தடுப்பூசியை அறிமுகம் செய்து, தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் அவர்கள் 2-வது டோஸ்போட்டு 39 வாரங்கள் அல்லது 273 நாட்கள் கழித்து ‘பூஸ்டர் டோஸ்’ எனப்படும் 3-வது தவணை தடுப்பூசி போடப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தினால் தடுப்பூசி போடலாம் என்று இருக்கிறது.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட ஏராளமானோருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு, பூஸ்டர் டோஸ் போடவேண்டிய காலம் வந்துவிட்ட சூழ்நிலையில், அவர்கள் நமக்கும் பூஸ்டர் டோஸ் போட்டால் நன்றாக இருக்குமே என்று ஏங்கும் நிலையில் இருந்தனர். கொரோனாவின் தாக்கம் இப்போது குறைந்துவிட்டது என்றாலும், உருமாறிய கொரோனா ‘எக்ஸ்.இ.’ வைரஸ் இந்தியாவில் கால்பதித்துவிட்டது. பூஸ்டர்டோஸ் போட்டுக்கொண்டால் கொரோனா வராமல் தடுக்கலாம். கொரோனா வந்தவர்களுக்கும் மீண்டும் அதை வராமல் தடுக்கலாம். அப்படியே வந்தாலும், அதன் பாதிப்பு மிகமிக குறைவாக இருக்கிறது. பல வெளிநாடுகளில் பூஸ்டர்டோஸ் போட்டவர்கள் மட்டுமே தங்கள் நாட்டுக்குள் வரலாம் என்ற அறிவிப்பிருக்கிறது.

இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2-வதுடோஸ் போட்டு 9 மாதங்கள் ஆகிவிட்டால், ‘பூஸ்டர்டோஸ்’ என்று கூறப்படும் ‘முன்னெச்சரிக்கை டோஸ்’ தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், நாடு முழுவதும் இதை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போட்டுக்கொள்ள முடியாது. தனியார்மருத்துவமனைகளில் மட்டும் கட்டணம் செலுத்திதான் போடமுடியும். 2 டோஸ்களில் எந்த தடுப்பூசியை செலுத்தினார்களோ? அதையேத்தான் பூஸ்டர்டோசாக போடவேண்டும் என்றும், அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.600, கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ.1,200, கோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் விலை ரூ.990 என்றும் முதலில் விலை அறிவிக்கப்பட்டு, மத்திய அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைக்குபின், கோவிஷீல்டு, கோவேக்சின் இரண்டுமே ஒரு டோஸ் விலை ரூ.225 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஊசியை செலுத்தும் தனியார்மருத்துவமனைகள் ரூ.150 சர்வீஸ் கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு நல்ல அறிவிப்பு என்றாலும், கட்டணம் செலுத்தித்தான் போடவேண்டும் என்ற அறிவிப்பு எல்லோராலும் முடியுமா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

கிராமப்புறங்களிலுள்ள ஏழை-எளியவர்கள், மாணவர்கள் எல்லாம் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி போடுவதற்கு அவர்களின் பொருளாதாரநிலை இடம்கொடுக்குமா? அந்த பகுதிகளில் தடுப்பூசி போடும் வசதியுள்ள தனியார் மருத்துவமனைகள் இருக்கிறதா? என்ற சூழ்நிலையில், பணம் செலவழித்து எல்லோரும் போய் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வார்களா? என்பது நிச்சயமாக சந்தேகத்துக்குரிய ஒன்றாகும். எனவே மத்திய அரசாங்கம் எப்படி முதல் 2 டோஸ்களையும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போட்டுக்கொள்ள நிதி ஒதுக்கியதோ?, அதுபோல அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளவும் நிதிஒதுக்கி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போட்டுக்கொள்வதற்கு முன்வரவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்த 8-ந்தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 49 லட்சத்து 3 ஆயிரத்து 125 பேர் முதல் டோஸ் போட்டுக்கொள்ளவில்லை. ஒரு கோடியே 37 லட்சத்து 61 ஆயிரத்து 938 பேர் 2-வது டோஸ் போட்டுக்கொள்ளவில்லை. அதேபோல், பூஸ்டர்டோஸ் போட்டவர்களின் எண்ணிக்கையும் மிக குறைவாகவே இருக்கிறது. இலவசமாக போடும்போதே இவ்வளவு பேர் இன்னும் போடாத நிலையில், கட்டணம் என்றால், எத்தனைபேர் வருவார்கள்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்