ஆரம்பமே சரியில்லையே!

பாகிஸ்தானில் இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர்கூட தங்கள் பதவிகாலத்தை முழுமையாக பூர்த்திசெய்ததில்லை.

Update: 2022-04-13 20:13 GMT
பாகிஸ்தானில் இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர்கூட தங்கள் பதவிகாலத்தை முழுமையாக பூர்த்திசெய்ததில்லை. பெரும்பான்மையில்லாமல் பதவிஇழப்பு, ஊழல் வழக்கால் பதவிநீக்கம், ராணுவஆட்சியால் பதவி பறிபோனது என்று அரைகுறையாகத்தான் தங்களது பதவிகாலத்தை கழித்து இருக்கின்றனர். அதேவரிசையில் இதுவரை பிரதமராக இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனாகவும், வேகப்பந்து வீச்சாளராகவும் கொடிகட்டி பறந்த இம்ரான்கான் தன் பதவிகாலத்துக்கு முன்பே பதவியிழந்ததோடு மட்டுமல்லாமல், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியிழந்த முதல் பிரதமர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார். ஒருவாரகாலமாகவே கடும்நெருக்கடி அரசியல் சூறாவளியால் சிக்கித்தவித்த இம்ரான்கான் கோர்ட்டு உத்தரவுப்படி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பில் நூலிழையில் தோல்வியடைந்து, பதவியை பறி கொடுத்தார்.

நாடாளுமன்றத்தில் 342 எம்.பி.க்களில் 174 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர் பதவிவிலகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியினர் அனைவரும் பதவியிலிருந்து ராஜினாமா செய்தனர். இப்போது புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் ஷபாஸ் ஷெரீப், 11 சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இந்த 11 கட்சிகளும் கொள்கையில் வேறுபட்ட கட்சிகள். 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒன்றுசேர்ந்து, பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்று ஒரு கூட்டணியை அமைத்தனர். பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவையான நிலையில், 174 இடங்களை மட்டும் பெற்றுள்ள இந்த ஆட்சியின் பதவிகாலம் அடுத்தஆண்டு ஆகஸ்டு வரைதான் இருக்கிறது. அதுவரை கூட்டணியில் 11 கட்சிகளும் ஒன்றாக இருக்குமா? ஆட்சி நிலைக்குமா? என்பதெல்லாம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

ஷபாஸ் ஷெரீப்பின் மூத்தசகோதரர் நவாஸ் ஷெரீப் 3 முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்துள்ளார். அவர் காலத்தில் இந்தியாவுடன் பரஸ்பர பொருளாதார உறவுகளை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்தார். பிரதமர் நரேந்திரமோடி 2014-ல் பதவியேற்றபோது, பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்தார். நரேந்திரமோடியும், 2015-ல் நவாஸ் ஷெரீப் பிறந்தநாளன்று லாகூர் சென்று, அவரை வாழ்த்தினார். அதன்பிறகு எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தினால் இந்த உறவு மேம்படவில்லை. இப்போது ஷபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நல்லுறவை வளர்ப்பாரா? என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், 23-வது பிரதமராக அவர் பதவியேற்றவுடன் நாடாளுமன்றத்தில் பேசிய முதல்பேச்சில், தேவையில்லாமல் காஷ்மீர் பிரச்சினையை இழுத்திருக்கிறார். அப்போது அவர், ‘2019-ம் ஆண்டு தேவையில்லாமல் காஷ்மீரில் கட்டாயப்படுத்திய ஆக்கிரமிப்பு நடந்தது. அரசியலமைப்பின் 370-வது சட்டம் ரத்துசெய்யப்பட்டது. அப்போது நாம் என்ன முயற்சிகளை மேற்கொண்டோம்?. காஷ்மீர் சாலைகளில் காஷ்மீர் மக்களின் ரத்தம் பெருக்கெடுத்தோடியது. நாம் இப்போது காஷ்மீர் சகோதர, சகோதரிகளுக்காக ஒவ்வொருதளத்திலும் நமது குரலை ஒலிப்போம். அவர்களுக்கு ராஜ்ஜிய ரீதியிலும், தூதரக ரீதியிலும், தார்மீக ரீதியிலும் உதவிகளை செய்வோம். நாம் இந்தியாவோடு, நல்லுறவை விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணாதவரை அது சாத்தியமில்லை’ என்று பேசியிருக்கிறார்.

முதல்நாள், முதல் உரையிலேயே இவ்வாறு பேசியிருப்பது தேவையில்லாத ஒன்றாகும். இப்போது ஷபாஸ் ஷெரீப் கவலைப்படவேண்டியது, பாகிஸ்தானில் கடுமையாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை பற்றித்தான். அங்கு இரட்டை இலக்கத்தில் உணவுப்பொருள் பணவீக்கம் இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக நிலவுகிறது. கட்டவேண்டிய கடன் தலைக்குமேல் இருப்பதால், சர்வதேச நிதியத்தின் கதவுகளை தட்டவேண்டிய நிலையில் உள்ளது. அங்கு வெளிநாட்டுக்கடன் மட்டும் 11 ஆயிரத்து 500 கோடி அமெரிக்கா டாலர் அளவு இருக்கிறது. இதுவே புதிய அரசாங்கத்துக்கு பெரியசவாலாக இருக்கும் நிலையில், தேவையில்லாமல், காஷ்மீர் பிரச்சினையை வம்புக்கு இழுத்திருப்பதை மத்திய அரசாங்கம் கருத்தில்கொள்ளவேண்டும். ஆரம்பமே சரியில்லாத நிலையில் இன்னும் போக, போக எவ்வாறு இருக்கும்? என்பதை மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்கவேண்டும் என்பதே இப்போதைய நிலையில் மக்கள் மத்திய அரசாங்கத்துக்கு விடுக்கும் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் செய்திகள்