அரசு அலுவலகங்களில் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு?

தகவல் தொழில்நுட்பம் என்பது காலம் கொடுத்த பெரிய அருட்கொடை ஆகும். உலகில் எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படையாக தகவல் தொழில்நுட்பம் இருக்கிறது.

Update: 2022-04-14 20:19 GMT
தகவல் தொழில்நுட்பம் என்பது காலம் கொடுத்த பெரிய அருட்கொடை ஆகும். உலகில் எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படையாக தகவல் தொழில்நுட்பம் இருக்கிறது. இதன் முக்கிய கண்டுபிடிப்பு செல்போன் ஆகும். உலகத்தையே இப்போது ஒவ்வொருவரின் உள்ளங்கையிலும் வைத்துவிட்டது செல்போன். சிறுவர்கள் முதல் முதியோர் வரை எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். இப்போது, ஆளுக்கு ஒரு செல்போன் என்ற நிலைமையை தாண்டி, ஆளுக்கு 2 செல்போன் வைத்துக்கொள்ள தொடங்கிவிட்டார்கள். மற்றவர்களோடு பேச பயன்படுவது மட்டுமல்லாமல், செய்திகளை அனுப்ப, பெற, படமெடுக்க, மணி பார்க்க, அலாரம் வைக்க, மெயில் அனுப்ப, கூகுளில் உலகிலுள்ள எல்லா தகவல்களையும் பெற, பணம் அனுப்ப, ரெயில்-பஸ்-விமான டிக்கெட்டுகள் எடுக்க என்று பட்டியலிட்டுக் கொண்டுபோனால், எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன.

கொரோனா காலத்தில் மாணவர்களை ‘ஆன்-லைன்’ மூலம் படிக்க கைகொடுத்தது செல்போன் எனலாம். இவ்வளவு பயன்களை அள்ளி அள்ளித்தரும் செல்போனின் மறுபக்கத்தை பார்த்தால் பல தீமைகளும் உள்ளன. அளவுக்கு மீறி பயன்படுத்தினால் அமிர்தமும் நஞ்சு என்பது, செல்போன் விஷயத்தில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. மனிதர்களை தனக்கு அடிமையாக்கிவிட்டது. உற்பத்தி திறனுக்கு பெரிய எதிரியாகிவிட்டது. வேறு எதிலும் நாட்டம் போகாமல், செல்போனிலேயே மூழ்கடிக்க வைத்துவிடுகிறது.

சமூக வலைதளங்களை பொறுத்தமட்டில், பல நன்மைகள் இருந்தாலும், உறுதிப்படுத்தப்படாத செய்திகளும், பழிச்சொல்லும், கோள் சொல்லும் அதிகமாகிவிட்டது. இதில் உண்மை இல்லை என்றாலும், மனிதமனம் அதில் லயிக்கிறது. நாளடைவில் மனம் அதற்கு அடிமையாகிவிடுகிறது. அதிலிருந்து விடுதலையாக பலர் விரும்புவதில்லை. இதனால், வேலை பாதிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் சேவை பாதிக்கப்படுகிறது. ஏழை, எளிய மக்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார்கள். சில அலுவலகங்களில் கோரிக்கை மனுவோடு யார் வந்தாலும், அவர்களிடம் 2 வார்த்தைகூட பேசமுடியாமல் பலர் செல்போனே கதி என்று இருக்கிறார்கள்.

அரசு அலுவலகங்களில் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தவேண்டும் என்று எல்லோரும் மனதில் நினைத்தாலும், “பூனைக்கு யார் மணி கட்டுவது?” என்றநிலை இருந்த நேரத்தில், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஒரு வழக்கில் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளார். வேலை நேரங்களில் செல்போனை பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. பணியிடங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு, கேமரா மூலம் படம் எடுப்பதற்கு, அலுவலக நேரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதும், அலுவலகத்துக்குள் செல்போன் மூலம் படம் எடுப்பதும், நடத்தை மீறலாகும். தங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்காக செல்போன் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அவசர அழைப்புகள் வந்தால், மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுவிட்டு வெளியே சென்று செல்போனில் பேசலாம். மொத்தத்தில் அலுவலக நேரங்களில் செல்போனை ‘ஆப்’ செய்துவிட்டும் அல்லது அதிர்வு மற்றும் சத்தமில்லாத நிலையில் வைத்துவிடவேண்டும். வேலை நேரங்களில் அலுவலகங்களில் பொதுமக்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது.

எனவே, அரசு இதுகுறித்து தேவையான அறிவுரைகள் கொண்ட ஒரு சுற்றறிக்கை அனுப்பவேண்டும். அலுவலகத்துக்குள் நுழையும்போது பொருட்கள் வைக்கும் அறையில் செல்போனை வைத்துவிட்டு வெளியே போகும்போது எடுத்துக்கொள்ளலாம். ஏதாவது, அவசர அழைப்புகள் என்றால், அலுவலக போன்களை பயன்படுத்திக்கொள்ளலாம். களப்பணியில் உள்ளவர்களுக்கும், அங்கீகாரம் அளிக்கப்பட்ட மற்ற அலுவலர்களும் செல்போன் பயன்படுத்தும் வகையில் விதிவிலக்கு அளிக்கலாம்.

இது ஒரு நல்ல தீர்ப்பு. நேரத்தையும், தூரத்தையும் சுருக்க பிறந்ததுதான் செல்போன். செல்போனின் முதல் பயன், காலத்தை மிச்சப்படுத்தி கொடுப்பதுதான். அதே செல்போன் காலத்தை விழுங்கினால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?. வேலியே பயிரை மேயலாமா?. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது, மதிக்கத்தக்கது. அரசு உடனடியாக பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு அலுவலர்களும், தாங்களாகவே சுயக்கட்டுப்பாடுடன் இதை பின்பற்றவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் செய்திகள்