அலுவலக வாடகைக்கு கூடுதல் வாய்ப்புகள்

சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் குடியிருப்பு தேவைகளைப் போலவே தொழில் நிறுவனங்களின் அலுவலக தேவைகளும் அதிகரித்து வருகின்றன.

Update: 2017-01-21 00:45 GMT
சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் குடியிருப்பு தேவைகளைப் போலவே தொழில் நிறுவனங்களின் அலுவலக தேவைகளும் அதிகரித்து வருகின்றன. எனவே பெருநகரங்களில் அலுவலக இடங்களை வாடகைக்கு விடுவது தனிப்பெரும் துறையாக வளர்ந்து வருகிறது.

தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் வங்கித்துறைகளில் மிகப்பெரிய அளவில் அலுவலகங்களுக்கான இடத்தேவைகள் உள்ளன. அதேநேரத்தில் அந்நிறுவனங்கள் நிலம் மற்றும் கட்டிடங்களில் முதலீடு செய்வதைக் காட்டிலும் அலுவலகங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்வதையே பெரிதும் விரும்புகின்றன. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அலுவலகங்களாக மாறிவருகின்றன. வீட்டு வாடகையைக் காட்டிலும் அலுவலகங்களில் இருந்து கிடைக்கும் வாடகையின் அளவு அதிகமானதாக இருக்கிறது என்பதால் கட்டிட உரிமையாளர்கள் அலுவலகங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர்.

கட்டிடங்களை அலுவலக தேவைக்காக வாடகைக்கு விடும்போது சில வி‌ஷயங்களில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.  பெரும்பாலும் நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களுக்கு தேவையான இடத்தை குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பெறுகின்றன. ஒரு ஆண்டில் அந்த இடத்திற்கு கிடைக்கும் வாடகையைக் காட்டிலும் குத்தகையிலிருந்து பெறுகின்ற தொகை கூடுதலாகவே இருக்கும். அதேநேரத்தில் குத்தகை காலம் முடிந்தபிறகு  கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்ட நிறுவனம் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் இடத்தை காலி செய்யவும் நேரலாம். அதுபோன்ற சூழல்களில், வீடுகளைப் போல அலுவலகங்களுக்கு உடனடியாக புதிய வாடகைதாரர்கள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. எனவே குத்தகை காலம் முடியும் காலங்களில் முன்கூட்டியே வாடகைதாரர் ஒப்பந்தத்தை தொடர விரும்புகிறாரா இல்லையா என்பதை தெரிந்துகொண்டு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய தயார்நிலையில் இருக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் காலங்களில் அலுவலகத் தேவைகள் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. அதையும் மனதில் கொள்வது அவசியம். 

மேலும் செய்திகள்