முன்னோர்கள் கடைப்பிடித்த கட்டிடக்கலை நுட்பங்கள்

இந்திய கட்டிட கலை உலக அளவில் புகழ் பெற்றதாக இருப்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக நமது தமிழ் மண்ணின் கட்டிட கலை நுட்பங்கள் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் மூலம் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

Update: 2017-02-10 21:15 GMT
ந்திய கட்டிட கலை உலக அளவில் புகழ் பெற்றதாக இருப்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக நமது தமிழ் மண்ணின் கட்டிட கலை நுட்பங்கள் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் மூலம் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. கட்டுமான அறிவில் முழுமை பெற்ற சமூக அமைப்பாக இருந்த நமது முன்னோர்கள் கடைபிடித்த வழிகள், பல்வேறு நூல்கள் வாயிலாக தெரிய வருகிறது. அவர்கள் கையாண்ட வழிமுறைகளில் சிலவற்றை இங்கே காண்போம்.

தக்க இடம் தேர்வு

கட்டிட அமைப்பின் தன்மைக்கு ஏற்றவாறு இடம் தேர்வு செய்வதற்கு பல்வேறு வழிகளை கையாண்டனர். சகுனம், சம்பந்தப்பட்ட இடத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும், மரங்கள், அருகில் உள்ள நீர்நிலைகள் போன்றவை கணக்கில் கொள்ளப்பட்டன. முக்கியமாக கட்டமைப்புக்கு தக்கவாறு நகரம் அல்லது ஊரின் ஒரு குறிப்பிட்ட இடத்தை கச்சிதமாக ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்டது.

திசை அறிதல்

கட்டிட அமைப்புக்கான பாதைகள் மற்றும் நகரத்தின் எப்பகுதியில் அமைக்கப்பட உள்ளது மற்றும் எவ்வகையான கட்டிட அமைப்பு என்பதற்கேற்ப திசைகள் தேர்வு செய்யப்பட்டது. முக்கியமாக வடக்கு மற்றும் தெற்கு திசைகளின் துல்லியம், கிழக்கு மேற்கான சூரிய பாதையின் கணக்கு ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டன.   

தகுந்த கால நிர்ணயம்

அனைத்து விதமான கட்டமைப்புகளும் விதிவிலக்குகள் இல்லாமல் காலம், நேரம் ஆகியவற்றை அனுசரித்து வடிவமைக்கப்பட்டன. முக்கியமாக மனையில் கட்டிட பணிகள் தொடங்கும்போது வாஸ்து சம்பந்தமான சகல விதிகளும் கடைபிடிக்கப்பட்டன.

ஆயாதி கணிதம்

தற்போது மனையடி அளவுகளாக கடைப்பிடிக்கப்படும் முறை பழங்காலத்தில் ஆயாதி கணிதமாகவும், சம்பந்தப்பட்ட நகரங்களில் கடைபிடிக்கப்படும் அளவுகோல்களை மையமாக வைத்தும் கட்டமைப்பின் அளவுகள் முடிவு செய்யப்பட்டன. அந்த முறைகளுக்கு ஏற்ப கதவுகள் எண்ணிக்கை, ஜன்னல்கள் உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டன.

கட்டுமான பொருட்கள் தேர்வு

கட்டமைப்புகளின் தன்மைக்கு ஏற்ப மண், பூச்சு வேலைகளுக்கான சாந்து கலவை செயல்முறை, கற்கள் பயன்பாடு, மரங்கள் மற்றும் கூரைகளுக்கான ஓடுகள் போன்ற பொருட்கள் தக்க விதத்தில் தேர்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன. அதற்கேற்ப கோவில்கள், வீடுகள் உள்ளிட நகரங்களுக்கான வடிவமைப்புகளும் செய்யப்பட்டன.  

பயன்படுத்தப்பட்ட அளவுகள்

6 விரல்கள் கொண்ட அளவானது 1 தளம் என்றும், 12 விரல் அளவு 1 விதஸ்தி என்றும்,  24 விரல் என்பது 1 முழம் ஆகவும், 25 விரல் அளவை பிரஜாபத்தியம் என்றும், 27 விரல்கள் கொண்டது தனுர் கிரஹம் ஆகவும், 29 விரல் அளவு வைதேகம், 31 விரல் அளவு  பிரகீர்ணம் என்றும் அழைக்கப்பட்டன. மேற்கண்ட அளவுகளை பயன்படுத்தி தக்க இடத்தையும் தேர்வு செய்து வீடுகள், கோவில்கள், ஊர், நகரம் போன்றவை அமைக்கப்பட்டன.

கட்டமைப்பின் வகைகள்

பழங்கால நகர அமைப்பு திட்டங்கள் இன்றைய முறைகளுக்கு இணையாக இருந்தது என்று கூறலாம். கட்டமைப்புகளின் வகைகள் பற்றிய குறிப்புகள் நமக்கு பல செய்திகளை தெரிவிக்கின்றன. அவை, பொதுமக்கள் குடியிருப்பு, அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்கள் என்று மூன்று பிரிவுகளாக இருந்தன.

பொதுமக்கள் குடியிருப்பு

தனி வீடுகள், சிறிய அளவிலான குடியிருப்புகள், கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்கள் ஆகியவை மக்களது பயன்பாட்டுக்கு என்று வடிவமைக்கப்பட்டன.

அரசு கட்டிடங்கள்

அரச மாளிகை, சிம்மாசனம், அரண்மனை முகப்பு மற்றும் அலங்கார வளைவுகள், இளவரசர் மற்றும் அமைச்சர்களுக்கான மாளிகைகள், கோட்டை, யானை மற்றும் குதிரைகளுக்கான மண்டபங்கள் மற்றும் கலை மண்டபங்கள் ஆகியவை மன்னர்களுக்காக அமைக்கப்பட்டது.

பொது இடங்கள்

கோவில்கள், கோபுரங்கள், மண்டபங்கள், தானிய களஞ்சியம், சாலைகள், நீர்நிலைகள், பூங்காக்கள், கிராம நிர்வாக மன்றங்கள், பல்கலைக்கழகம், ஏடகம் என்ற நூல் நிலையம், விளக்கு தூண்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவை பொது உபயோகங்களுக்காக அமைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்