கட்டுமான நில அமைப்பை வகைப்படுத்தும் சி.எம்.டி.ஏ இணையதளம்

சென்னை பெருநகர் பகுதியில் இருக்கும் மொத்த நிலப்பரப்பை அதன் பயன்பாட்டு வகைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தும் இரண்டாவது முழுமை திட்டம் 2008–ல் அரசால் அறிவிக்கப்பட்டது.;

Update:2017-02-25 04:15 IST
சென்னை பெருநகர் பகுதியில் இருக்கும் மொத்த நிலப்பரப்பை அதன் பயன்பாட்டு வகைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தும் இரண்டாவது முழுமை திட்டம் 2008–ல் அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒட்டு மொத்த நிலப்பகுதி, ஆதார குடியிருப்புகள், வணிகம், தொழில், நீர் பிடிப்பு பகுதிகள் என்று பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்தான் வீடுகள், அடுக்குமாடிகள் மற்றும் வணிகம் சார்ந்த கட்டமைப்புகள் போன்ற புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட நில வகைப்பாடுகள் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தன. சி.எம்.டி.ஏ–வின் இணையதளம் மூலமாக, சென்னையின் நில அமைப்பு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதியாக புதிய தகவல் தொகுப்பு உருவாக்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது.  

தற்போது, தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு நிலங்களின் தன்மை வகைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சி.எம்.டி.ஏ–வின் இணையதளம் வாயிலாக அந்த தகவல்களை அறிந்துகொள்வதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

சி.எம்.டி.ஏ இணைய தளத்தில் மேற்கண்ட தகவல்களை பெறுவதற்கான இணைப்பு சோதனை அடிப்படையில் முன்னர் தரப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப ரீதியாக அந்த இணைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதி நிலம் அல்லது வாங்க விரும்பும் இடம் குறித்த நில வகைப்பாட்டினை எளிதாக இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ளும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தமது பயன்களுக்கு ஏற்ப அவற்றை படங்களாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்