வீடு வாங்க வங்கிகள் வழங்கும் சிறப்பு கடன்கள்

தேசிய அளவில் சென்ற பத்து வருடங்களாக, வீட்டு கடன் வாங்கியவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

Update: 2017-03-03 20:45 GMT
தேசிய அளவில் சென்ற பத்து வருடங்களாக, வீட்டு கடன் வாங்கியவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு திட்டத்துக்கு பிறகு வங்கிகளில் சேமிப்பு உயர்ந்துள்ள நிலையில், வங்கிகள் கடன் தொகைக்கான வட்டி விகிதங்களை குறைத்து அறிவிப்பு செய்திருக்கின்றன. தற்போதைய காலகட்டத்தில் வீட்டு கடன் அல்லது வீட்டு மனை கடன் பெறுவதற்கு எளிய சூழ்நிலை அமைந்திருக்கிறது.

விண்ணப்பங்கள் அதிகரிப்பு

வட்டி குறைப்பு காரணமாக, தற்போது வீட்டு கடன் வேண்டி விண்ணப்பம் செய்பவர்களது எண்ணிக்கை வழக்கத்தை விடவும் பல மடங்கு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒருவரது விருப்பம் மற்றும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் கிடைக் கக்கூடிய வீட்டு கடன்களில் குறிப்பிடத்தக்க சிலவற்றை இங்கே காணலாம்.

‘பிரிட்ஜ் லோன்’

இவ்வகை வீட்டு கடனை முன்னெச்சரிக்கை கடன் (ஒரு வகையில் கைமாற்று கடன் என்றும் சொல்லலாம்) என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் இது ‘பிரிட்ஜ் லோன்’ எனப்படும். அதாவது, தமக்கு சொந்தமான, தற்போது குடியிருக்கும் வீட்டை விற்பனை செய்து விட்டு, அதை விடவும் பெரிய வீட்டை வாங்க விரும்பும் வாடிக்கையாளருக்கு வங்கிகள் உதவுகின்றன.

பழைய வீட்டை குறுகிய காலத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில், விலை குறைவாக மதிப்பிடப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பழைய வீட்டை வாங்குபவர் குறைந்த விலைக்கு, வீட்டை கேட்கும் தருணங்களில், புதிய வீட்டை வாங்குவதற்கான பணம் போதுமானதாக இருக்காது. அந்த சூழ்நிலையில் புதிய வீட்டை வாங்குவதற்காக வங்கிகளால் தரப்படும் குறுகிய கால வங்கி கடன்தான் ‘பிரிட்ஜ் லோன்’ (ஹோம் ஷார்ட் டேர்ம் பிரிட்ஜ் லோன்) எனப்படுகிறது. புது வீட்டிற்கான மொத்த மதிப்பில் 80 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரையில் கடன் தொகையாக கிடைக்கும்.

மேலும், பழைய வீட்டை 2 வருடங்களுக்குள் விற்பனை செய்துவிட்டு, புது வீட்டுக்கான கடன் தொகையை திருப்பி செலுத்தும் வகையில் இக்கடன் வழங்கப்படுகிறது. அதாவது கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம் அதிக பட்சம் 2 வருடங்களாக இருக்கும். ‘பிரிட்ஜ் லோன்’ வட்டி விகிதமானது, வழக்கமான வீட்டு கடன் வட்டியை விடவும் கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம். ஏற்கனவே இருக்கும் பழைய வீட்டை விற்பனை செய்துவிட்டு, வேறு பகுதியில் புதிய வீடு வாங்க விரும்புபவர்களுக்கு இந்த கடன் திட்டம் பயன் தரக்கூடியது.  

‘ஹோம் எக்ஸ்டென்‌ஷன் லோன்’

தற்போதுள்ள சொந்த வீட்டை விரிவுபடுத்த அல்லது கூடுதலான கட்டமைப்புகளை அமைப்பதற்காக இவ்வகை கடன் தரப்படுகிறது. மேல்மாடிகள், புதிய அறைகள், பால்கனிகள் என்று அனைத்து விதமான கூடுதல் கட்டமைப்புகளுக்கும் இந்த கடனை பெற இயலும். நமக்கு சொந்தமான வீட்டில் அறைகளை கூடுதலாக கட்டுவதற்கு அல்லது மேல் மாடி கட்டுவதற்கு வங்கிகள் தரும் கடன்தான் இது. கட்டிய வீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளை அமைத்துக்கொள்ளவும் இந்த வகை கடன் வழங்கப்படுகிறது.  

‘ஹோம் ரீ–மாடலிங் லோன்’

தனது வீட்டை மேம்படுத்துவதற்கு போதுமான நிதி வசதிகள் இல்லாத சூழலில் வங்கிகள் இவ்வகை கடன்களை தருகின்றன. வீட்டுக்கு வர்ணம் அல்லது வெள்ளை அடிப்பது, கதவு மற்றும் ஜன்னல்களை மாற்றி அமைப்பது, ‘மாடுலர் கிச்சன்’ அமைப்பது புதிய மின்சார வசதி அல்லது ‘எலக்ட்ரானிக்’ பொருட்கள் வாங்குவது, தண்ணீர் தொட்டி கட்டுவது ஆகிய பல்வேறு கட்டமைப்பு வேலைகளுக்காக இவ்வகை கடனை பெற்றுக்கொள்ளலாம்.

‘ஸ்டாம்ப் டியூட்டி லோன்’

புதியதாக வீடு மற்றும் வீட்டுமனை ஆகியவற்றை வாங்குபவர்களுக்கு, பல சமயங்களில் மொத்த பட்ஜெட்டுக்கும் மேல் செலவு எகிறி விடுவதுண்டு. கையில் உள்ள பணம் இதர செலவுகளுக்கே போதாது என்ற சூழலில், பத்திர பதிவுக்கான செலவு என்ற அடிப்படையில் வங்கி கடன் பெற்று சொத்தை தமக்கு சொந்தமாக்கி கொள்ளலாம். பிறகு வங்கியால் அறிவிக்கப்பட்ட தவணை காலத்துக்குள், வட்டியுடன் கடன் தொகையை திருப்பி செலுத்தி விடலாம். 

மேலும் செய்திகள்