கான்கிரீட் கூரையில் பதிக்கும் ஓடுகள் தயாரிக்கும் இயந்திரம்

கிராமப்புற வீடுகளின் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டிருப்பதை பலரும் பார்த்திருக்கலாம்.;

Update:2017-05-13 04:30 IST
 பனை மரம் அல்லது இதர மரங்கள் கொண்டு சுவர்களின் மேற்பகுதியில் முக்கோண வடிவ மரச்சட்டங்கள், 2 அங்குல அகலம் கொண்ட ரீப்பர்களால் இணைக்கப்பட்டு, ஓடுகள் அதன்மீது வரிசையாக அடுக்கி வேயப்பட்டிருக்கும். பொதுவாக, கூரைகள் இருபக்கமும் சரிவுகள் கொண்டதாகவோ அல்லது ஒரு பக்க சரிவு மட்டும் கொண்டதாகவோ அமைக்கப்படுவதன் மூலம் மழை நீர் சுலபமாக வழிந்து கீழே சென்றுவிடும். மேலும், சரிவான மேற்பரப்பு காரணமாக, சூரிய வெப்பம் நேரடியாக வீட்டுக்குள் பரவாமலும் தடுக்கப்படுகிறது.

பண்பாடு

பல காலமாக நமது பண்பாட்டில் கலந்து விட்ட ஓட்டு வீடுகள் கால மாற்றத்தால் கான்கிரீட் கூரை கொண்ட கட்டமைப்புகளாகவும், அடுக்குமாடி வீடுகளாகவும் மாறிவிட்டன. வளர்ந்து விட்ட தொழில் நுட்பங்கள் காரணமாக கட்டிட வடிவங்கள் மாறி விட்டாலும் ஓடு என்ற பண்பாட்டின் அடையாளம் நமது மனதிலிருந்து அகலவில்லை. நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் ஆகியவற்றில் கட்டப்படும் பலவகை வீடுகளின் முன் பக்க தோற்ற அமைப்புகளில் சிறு அளவிலான ஓடுகளை அழகுக்காக பதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அத்தகைய ஓடுகள் சிவப்பு மற்றும் பச்சை உள்ளிட்ட வெவ்வேறு வண்ணங்களுடன் அழகாக தோற்றமளிக்கின்றன.

ஓடுகள் தயாரிக்கும் இயந்திரம்

கட்டுமான பணிகளில் செங்கல் உபயோகத்துக்கு மாற்றாக கான்கிரீட் கற்கள் பயன்படுத்தப்படுவது இப்போது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. அத்தகைய கான்கிரீட் கற்களை தயாரிக்கும் 'பிளாக் தயாரிப்பு மெஷின்கள்' இருப்பது போல, அழகுக்காக வீடுகளின் முகப்பில் பதிக்கப்படும் சிறிய அளவிலான ஓடுகளை தயாரிக்க எளிமையான இயந்திரம் புழக்கத்தில் இருக்கிறது. சிறு தொழில் முனைவோர்கள் இந்த இயந்திரத்தின் மூலம் சிறிய வகை ஓடுகளை தயாரித்து சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள இயலும் என்பது கவனிக்கத்தக்கது.

சுலபமான இயக்கம்

இந்த இயந்திரம் சுலபமாக இயங்கக்கூடிய தொழில்நுட்பத்தை கொண்டது. தேவையான சமயங்களில் விசையை இயக்கி ஓடுகள் தயாரிப்பை தொடங்குவது போன்ற வடிவமைப்பை உடையது. மேலும், ஒரு முறை விசையை இயக்கிவிட்டால், பல்வேறு தொடர்ந்த செயல்பாடுகள் கான்கிரீட் கலவையை ஓடாக மாற்றி கன்வேயர்கள் மூலம், தானியங்கி முறையில் வெளியே தள்ளுகின்றன. அதற்கு முன்னதாக மணல், சிமெண்டு மற்றும் தகுந்த வண்ணம் ஆகியவற்றை கச்சிதமாக கலந்து இயந்திரத்தின் மேற்புறம், அதற்கென உள்ள பகுதியில் இட வேண்டும்.

தானியங்கி கட்டுப்பாடு

பி.எல்.சி அதாவது 'புரோகிராமபிள் லாஜிக் கன்ட்ரோலர்' என்ற 'எலக்ட்ரானிக் சர்க்கியூட்' மூலம் இயந்திரத்தின் செயல்பாடுகள் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நிமிடம் இயந்திரம் இயங்குவதன் மூலம், தகுந்த வார்ப்புகளில் கான்கிரீட் கலவை வார்க்கப்பட்டு, சரியான அளவுகளில் வெட்டப்பட்ட 10 ஓடுகள் வெளியில் வருகின்றன. சராசரியாக ஒரு ஷிப்டுக்கு 4000 ஓடுகள் தயாரிக்கும் தன்மை கொண்டது.

தேவைப்படும்போது தக்க மாற்றங்களை மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கும்படியான தொழில் நுட்பத்தையும் இந்த இயந்திரம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஷிப்டுக்கு 8000 ஓடுகள் தயாரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட இயந்திரம் இதற்கு அடுத்த நிலையில் இருக்கிறது.

மேலும் செய்திகள்