கட்டுமான பணிகளுக்கு உகந்த மாற்று மணல்

ஆற்று மணலுக்கு மாற்றாக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் எம்–சேண்ட் என்பது கருங்கல் ஜல்லியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

Update: 2017-09-01 22:45 GMT
ற்று மணலுக்கு மாற்றாக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் எம்–சேண்ட் என்பது கருங்கல் ஜல்லியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் தரச்சான்றளிக்கப்பட்ட நவீன இயந்திரங்கள் மூலம் கருங்கல் ஜல்லியை தூள் செய்து, சலிக்கப்பட்டு, பாலீஷ் மற்றும் வாஷிங் ஆகிய பல்வேறு நிலைகளுக்கு பிறகுதான் எம்–சேண்ட் உருவாகிறது. மேலும், ஆற்று மணலுக்கு இணையான உறுதி கொண்டதாகவும் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தகுந்த சோதனைகள்

மேலும், சிமெண்டு மற்றும் செங்கல் ஆகியவற்றுடன் கலந்து டியூப் டெஸ்ட் என்ற சோதனையும் செய்யப்பட்டு, அவற்றின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் கட்டுமான பணிகளுக்கு எம்–சேண்ட் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு நிறத்தில் உள்ள இவ்வகை மணலை அனைத்து கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்த இயலும். ஆனால், சுவர்களின் மேற்பூச்சு பணிகளை செய்யும்போது ஆற்று மணலை தக்க அளவில் கலந்து பயன்படுத்த வேண்டியதாக இருப்பதை பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  

இந்திய அளவில் பயன்பாடு

இந்திய அளவில் அனேக மாநிலங்களிலும், தமிழக அளவில் பல்வேறு மாவட்டங்களிலும் ஆற்று மணலுக்கு மாற்றாக எம்–சேண்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்பே அதன் பயன்பாடு தொடங்கி விட்டது. தமிழக அளவில் 12 ஆண்டுகளாக இவ்வகை மண் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனாலும், எம்–சேண்ட் பயன்படுத்துவதில் பொதுமக்களிடம் இன்னும் தயக்கம் உள்ளதாக கட்டுமான வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள். 2012–ம் ஆண்டிலேயே பொதுப்பணி துறையில் எம்–சேண்ட் பயன்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது எம்–சேண்ட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 25 முதல் 35 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

மேலை நாடுகளில் பயன்பாடு

துபாய் உள்ளிட்ட மேலை நாடுகளில் எம்–சேண்ட் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக, வெளிநாடுகளில் ஆற்றுமணல் பயன்பாடு குறைவாகவே உள்ளது. அமெரிக்காவின் பெரும்பாலான கட்டுமானப்பணிகளுக்கு அரசாங்கத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட தரமான எம்–சேண்ட் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் எம்–சேண்ட் பயன்படுத்தி கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. நமது பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் எம்.சேண்ட் தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மாற்று மணலின் தனித்தன்மைகள்

* எம்–சேண்ட்(M-Sand) என்பது தயார் செய்யப்பட்ட அல்லது செயற்கை மணல்.  

* மேட்டு நிலங்கள் அல்லது தரிசு நிலங்களில் உள்ள பாறைகளை உடைத்து, அதிலிருந்து ஆற்று மணலின் அளவு கொண்டதாக தயாரிக்கப்படுகிறது.

* ஆற்று மணல் போன்று இல்லாமல், கருப்பு சாம்பல் நிறத்தில் தோற்றமளிக்கும் எம்–சேண்ட் 5 வித கிரேடுகளில் தயார் செய்யப்படுகிறது.

* தகுந்த அளவுகளில் தரக்கட்டுப்பாட்டு விதிகளுக்கேற்ப தயாரிக்கப்படுவதால் சிமெண்டு கலவை மற்றும் கான்கிரீட் உறுதிக்கு துணையாக இருக்கிறது.

* ஆற்று மணலை விடவும் குறைவான பட்ஜெட் கொண்டதாக உள்ள எம்–சேண்ட் மூலம் அமைக்கப்படும் கட்டிடங்கள் உறுதியாக இருக்கும் என்று ஐ.ஐ.டி. மற்றும் இந்திய அறிவியல் கழகம் ஆகிய அமைப்புகள் ஆதாரத்துடன் நிரூபித்திருக்கின்றன.

மேலும் செய்திகள்