கான்கிரீட் தயாரிப்பில் மாற்று முறை

கட்டுமான தொழிலில் எப்போதும் தவிர்க்க இயலாத கூட்டுப்பொருளாக கான்கிரீட் உள்ளது.

Update: 2018-01-20 05:06 GMT
வழக்கமான மூலப்பொருட்கள் கொண்டு கான்கிரீட் தயாரிப்பதற்கான பட்ஜெட் மற்றும் அதன் மூலப்பொருட்கள் ஆகிய நிலைகளில் வெவ்வேறு சிக்கல்கள் இருப்பதாக கடந்த காலங்களில் அறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வெவ்வேறு மாற்று பொருட்கள் மூலம் கான்கிரீட் தயாரிக்க பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

மாற்று வழி

அதன் அடிப்படையில், போக்குவரத்து மூலம் பொருட்களை அனுப்பும்போது அவற்றின் பாதுகாப்பில் பயன்படுத்தப்படும் ‘தெர்மோகோல்’ படிகங்களை பயன்படுத்தி கான்கிரீட் தயாரிக்க இயலுமா..? என்ற சோதனைகள் நியூசிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த ஓரிரு ஆண்டுகளாக உலகின் பல இடங்களில் மேற்கண்ட சோதனைகள் நடந்து வந்த நிலையில், நியூசிலாந்து நாட்டில் ‘தெர்மாகோல் கான்கிரீட்’ தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெர்மாகோல் பயன்பாடு

இயற்கை மணல் அல்லது செயற்கை மணல் ஆகிய எதுவும் இவ்வகை கற்கள் தயாரிப்பில் தேவைப்படுவதில்லை. நியூசிலாந்து நாட்டில் இறக்குமதி மூலம் லட்சக்கணக்கான டன்கள் ‘தெர்மோகோல்’ பலகைகள் ஒவ்வொரு ஆண்டும் வந்து குவிகின்றன. அவ்வாறு வரும் தெர்மாகோல் அட்டைகளை வேறு வழிகளில் பயன்படுத்த இயலுமா..? என்று கடந்த ஆண்டுகளில் ஆராய்ந்து வந்தார்கள். அந்த நாட்டு சட்டப்படி ஒருமுறை உபயோகித்த ‘தெர்மாகோல்’ பலகைகளை மறுமுறை பயன்படுத்த கூடாது என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில் தெர்மாகோலை பயன்படுத்தி கான்கிரீட் தயாரிக்கலாம் என்று அறியப்பட்டது. நியூசிலாந்து அரசாங்கம் தற்போது ‘தெர்மாகோல் கான்கிரீட்’ தயாரிக்க அனுமதி அளித்துள்ளது.

பொறியாளரின் யுக்தி

மணலுக்கு பதிலாக தெர்மாகோல் துகள்களை சிமெண்டில் கலந்து கான்கிரீட் தயாரித்து, அதை பலகைகளாகவோ அல்லது பில்டிங் பிளாக்குகளாகவோ தயாரிக்க முறையை நியூசிலாந்து பொறியாளர் ஒருவர் செயல்படுத்தி காட்டியிருக்கிறார். அந்த தொழில்நுட்ப அடிப்படையில் ஒரு தொழிற்சாலையும் நியூசிலாந்தில் தொடங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் தயாரிப்பு

இந்த புதிய தொழில்நுட்ப முயற்சியை கனடா, பிரான்ஸ், போர்ச்சுகல் போன்ற நாடுகளும் பின்பற்றி ‘தெர்மாகோல் பிளாக்’ தயாரிப்பை தொடங்க முடிவு செய்துள்ளன. இந்த தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து நமது நாட்டுக்கு வருவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்.

மேலும் செய்திகள்