தரை– சுவர் பரப்புகளுக்கான ரசாயன ‘கோட்டிங்’

தரைத்தளங்கள் மற்றும் சுவர் பரப்புகளில் பயன்படுத்தும் ‘கோட்டிங்’ வகைகளில் ‘எபாக்சி’ மற்றும் ‘பாலி அஸ்பார்டிக்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.

Update: 2018-02-16 22:45 GMT
 ‘பாலி அஸ்பார்ட்டிக்’ வகை ‘கோட்டிங்கை’ கட்டுமான வல்லுனர்கள் பலரும் பரிந்துரை செய்வது குறிப்பிடத்தக்கது.

‘பாலி அஸ்பார்ட்டிக்‘


கட்டுமான துறையில் பி.பி என்று வழங்கப்படும் இதன் முழுப்பெயர் ‘பாலி அஸ்பார்ட்டிக் அலிபாட்டிக் பாலியூரியா’ ((Poly  aspartic  aliphatic Polyurea)
 என்பதாகும். பொதுவாக, பாலியூரியா வகை ‘கோட்டிங்குகள்’ ஒரு சில நிமிடங்களில் இறுக்கமாக படிந்து விடக்கூடிய தன்மை பெற்றவை. அந்த வேகம் காரணமாக அவற்றை பயன்படுத்தும் சமயங்களில் அதற்கு தகுந்த வெவ்வேறு சாதனங்களை உபயோகப்படுத்த வேண்டியதாக இருக்கும்.

வல்லுனர்கள் பரிந்துரை

மேற்கண்ட சிக்கலை தவிர்ப்பதற்காக பி.பி கோட்டிங் முறை வல்லுனர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த முறையில் 20 முதல் 30 நிமிடங்கள் கழிந்த பிறகே ‘கோட்டிங்’ படியத் தொடங்குகிறது. அதனால், அவசரம் ஏதுமில்லாமலும், தனிப்பட்ட விஷேச கருவிகள் ஏதுமில்லாமலும் பயன்படுத்தி பணிகளை செய்து முடிக்கலாம்.

சாதாரண ‘பிரஷ்கள்’

பொதுவான உபயோகத்தில் இருந்து வரும் சாதாரண ‘பிரஷ்கள்’ அல்லது ‘ரோலர்கள்’ கொண்டும் இதை

பரவலாக பூச முடியும். பிசுபிசுப்பு தன்மை இல்லாத காரணத்தால் சாதாரண சுவர் பூச்சுக்கள் போலவும் பயன்படுத்தலாம். மேலும், குறைந்த அளவை பயன்படுத்தி அதிகப்படியான பரப்பில் பூச்சு வேலைகளை சிக்கனமாக செய்ய முடியும்.

கதிர் வீச்சு தடுப்பு

மேற்கண்ட தொழில்நுட்ப அடிப்படையில் தரைப்பரப்புகள் மற்றும் சுவர்களில் பி.பி வகை பூச்சுக்களை ஒரு கோட்டிங் கொடுத்தால் போதுமானதாக இருக்கும். மேலும், புற ஊதா கதிர் வீச்சை தடுக்கக்கூடிய படலத்தை உருவாக்குவதுடன், மேற்பரப்பில் கீறல்கள் மற்றும் சிராய்ப்புகள் ஆகியவை ஏற்படாமலும் பாதுகாப்பதாக அறியப்பட்டுள்ளது. பி.பி வகை கோட்டிங்கை வெயில், மழை, பனி என்று அனைத்து விதமான பருவ காலங்களிலும் பயன்படுத்தலாம்.

கான்கிரீட் பரப்புக்கு ஏற்றது

சுவர் அல்லது தரைப்பரப்புகளில் கோட்டிங் கொடுக்கப்பட்டு முடிந்த அரை மணி நேரத்தில் காய்ந்து பயன்பாட்டுக்கு தயாராகிவிடும். எனவே, அனைத்து வகையான கான்கிரீட் பரப்புகளுக்கும் பொருத்தமாக கருதப்படுகிறது. மேலும், கண்ணாடி போன்ற பளபளப்பாக இருப்பதோடு, கான்கிரீட் பரப்புகளில் ஏற்படக்கூடிய சிறுசிறு வெடிப்புகளையும் அடைத்து விடக்கூடியதாகும். நமது பகுதிகளில் இந்த முறையானது இன்னும் பெரிய அளவில் நடைமுறைக்கு வரவில்லை. அதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்.

மேலும் செய்திகள்