குடியிருப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் தரும் உபகரணம்

இன்றைய காலகட்ட நகர்ப்புற வளர்ச்சிகளுக்கேற்ப வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளிலும் உபயோகிக்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகமாகியுள்ளது.

Update: 2018-03-16 22:30 GMT
கோடை காலத்தில் வீடுகள் உள்ளிட்ட மற்ற கட்டமைப்புகளில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க ‘இன்வர்ட்டர்கள்’ பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் பெரும்பாலான குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் ‘இன்வர்ட்டர்கள்’ பற்றி மின் பொறியியல் வல்லுனர்கள் தரக்கூடிய குறிப்புகளை இங்கே காணலாம்.

மூன்று வகைகள்

பொதுவாக, அவை ‘சைன் வேவ்’ (Sine Wave)  ‘மாடிபைடு சைன் வேவ்’ (Modified SineWave)  மற்றும் ‘ஸ்கொயர் வேவ்’ (Square Wave) என்று மூன்று வகையாக உள்ளன. ஆரம்ப கால ‘இன்வர்ட்டர்கள்’ 250 வாட்ஸ் மற்றும் 400 வாட்ஸ் என இருவிதமான மின் பயன்பாட்டு அளவில் ஒரு விளக்கு மற்றும் ஒரு மின்விசிறி ஆகியவற்றை இயங்க செய்வதற்கான சக்தி கொண்டவையாக இருந்தன. ஆனால், வீடுகளில் மின்சார சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்ட காரணத்தால் அவை இப்போது பயன்பாட்டில் அவ்வளவாக இல்லை.

கூடுதல் திறம்

இன்றைய சூழலுக்கு ஏற்ப ஒரு மின்விளக்கு, ஒரு மின்விசிறி, ஒரு தொலைக்காட்சி பெட்டி ஆகியவை இயங்கும் வகையில் 650 வாட்ஸ் திறம் கொண்ட ‘இன்வர்ட்டர்கள்’ பயன்படுத்தப்படுகின்றன. மேலும், 800 வாட்ஸ் திறம் கொண்ட ‘இன்வர்ட்டர்’ வகைகளும் வீடுகள் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உபயோகத்தில் உள்ளன. அவற்றின் மூலம் வீடு அல்லது கட்டமைப்புகளில் ஐந்து மின்விளக்குகள், நான்கு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டி அல்லது கம்ப்யூட்டர் ஆகியவற்றை பயன்படுத்த முடியும்.

மின்சார பயன்பாடு

‘இன்வர்ட்டர்கள்’ தானியங்கி அமைப்பாக உள்ளதால் மின்சாரம் தடைப்படும் சமயங்களில் தாமாக செயல்பட துவங்கும். அதனால், அவற்றை மின் இணைப்பிலேயே எப்போதும் வைக்கப்பட்டிருக்கும். அதனால், வீடுகளில் மற்ற மின் சாதனங்கள் போல ‘இன்வர்ட்டர்கள்’ மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

தேவையான பயன்பாடு

பேட்டரியில் ‘சார்ஜ்’ ஆகியுள்ள ஒரு திசை மின்னோட்டம், இன்வர்ட்டரில் கொடுக்கப்பட்டு மாறு திசை மின்னோட்டமாக மாற்றப்பட்டு வீடுகளில் உள்ள மின்சார சாதனங்களுக்கு மின்சாரத்தை அளிக்கிறது. பேட்டரி சார்ஜ் ஆக வேண்டும் என்பதால் இன்வர்ட்டர், பேட்டரி ஆகியவற்றை மின் இணைப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம். கோடைக்காலங்களில், தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் சமயங்களில் இடையிடையே குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது அதன் பயன்பாட்டை நிறுத்தி வைப்பது நல்லது.

‘டியூப்ளர் பேட்டரி’

பொதுவாக, ‘சைன்வேவ் இன்வெர்ட்டர்’ வகைகள் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை கச்சிதமாக தரக்கூடியவை என்றும் பேட்டரியில் உள்ள ‘டிஸ்டில்டு’ வாட்டர் குறையும் பட்சத்தில், அதை சரியாக கவனித்து நிரப்ப வேண்டும் என்றும் எலக்ட்ரீஷியன்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ‘டியூப்ளர் பேட்டரி’ வகைகள் பயன்படுத்துவதற்கு சுலபமாகவும், நீண்ட காலம் பராமரிப்பு செலவுகள் அதிகம் வைக்காமல் இருக்கின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உபயோகம்

பொதுவாக, மின் தட்டுப்பாடு இல்லாத காலங்களிலும் வீடுகளில் மின் பயன்பாட்டை நிறுத்தி விட்டு ‘இன்வெர்ட்டரை’ பயன்படுத்தும் பட்சத்தில், இன்வர்ட்டர் மற்றும் பேட்டரி ஆகியவை பழுதடையாமல் தவிர்க்கப்படுவதாக மின் பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மாதம் ஒரு முறையாவது மேற்கண்ட முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் அவர்களது ஆலோசனையாகும். மேலும், அவர்கள் தரும் முக்கியமான குறிப்புகளாவன :

1. வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகளில் மின் விளக்குகள், மின், டி.வி, கம்ப்யூட்டர் ஆகியவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதற்கு ஏற்ற திறன் கொண்ட ‘இன்வர்ட்டர்’ தேர்வு அவசியம்.

2. அவற்றை வாங்கும்போது அதற்கான தரக்கட்டுப்பாட்டு விபரங்களை சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும்.

3. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர் பேட்டரிகள் தக்க பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டும்.

4. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்ற பகுதிகளில் அதற்கேற்ப மின்சாரம் சேமிக்கும் பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.

5. பேட்டரி வகைகளை வாங்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்