குளியலறையை அழகாக்கும் நவீன மின்விளக்குகள்

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளில் உள்ள பல்வேறு அறைகளின் அழகில் கவனம் செலுத்தும் பலரும் குளியலறை பற்றி போதிய கவனம் கொள்வதில்லை என்று உள் அலங்கார வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Update: 2018-03-16 22:45 GMT
அனைத்து குடும்ப அங்கத்தினர்களும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை அங்கே செலவழிக்க வேண்டிய சூழலில், இயன்ற வரை குளியலறையை சுத்தமாகவும், நல்ல வெளிச்சமாகவும் பராமரிக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

போதிய வெளிச்சம்

நெருக்கடியான நகர்ப்புறங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் பலவற்றிலும் பகலில்கூட போதிய வெளிச்சம் இருப்பதில்லை. மின்சார விளக்கின் ஒளியில்தான் அவற்றினுள் நுழைய இயலும். மேலும், சில வீடுகளின் குளியலறைகளில் குறைவான வெளிச்சம் இருப்பதன் காரணமாக முதியோர்கள் தடுமாற்றம் அடைவதாகவும் அறியப்பட்டுள்ளது. போதுனான வெளிச்சம் தரும் வகையில் மின்சார பல்புகளை குளியலறையில் பொருத்துவது அவசியம் என்ற நிலையில் அதற்கு தேவையான குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

மின் விளக்குகள்

பிரதான குளியலறை மற்றும் விருந்தினர் அறைகளுக்கான குளியலறைகளில் 75 முதல் 100 வாட்ஸ் திறன் கொண்ட ‘பிக்ஸர்’ வகை மின்சார விளக்குகளை பொருத்தலாம். புளோரஸண்ட் மற்றும் எல்.இ.டி. பல்பு வகைகள் என்றால் 20 முதல் 30 வாட்ஸ் திறம் கொண்ட விளக்குகளை பொருத்தலாம். இதர குளியலறைகளில் 50 வாட்ஸ் திறனுள்ள விளக்குகளை அமைக்கலாம்.

வழக்கத்தை விட உயரம்

குளியலறை அதன் வழக்கமான 10 அடி உயரத்திற்கும் மேற்பட்டு இருந்தால், போதிய வெளிச்சம் கிடைக்க ‘பெண்டண்ட் பிக்ஸர்’ மின்சார விளக்குகளை பயன்படுத்தி ‘ஆம்பியண்ட் லைட் செட்டிங்’ செய்யலாம். இவ்வாறான மின் விளக்குகள் போதிய வெளிச்சத்தை தருவதாக அறியப்பட்டுள்ளன.

‘டாஸ்க் லைட்டிங்’

குறிப்பிட்ட சுற்றளவு பகுதியில் வெளிச்சம் கிடைக்கச்செய்யும் ‘டாஸ்க் லைட்டிங்’ அமைப்பை குளியலறையில் பொருத்திக்கொள்வது ஒரு முறையாக உள்ளது. பெரிய குளியலறைகளுக்கு இரண்டு விளக்குகள் மற்றும் சிறிய அறைகளுக்கு ஒரே விளக்கும் பொருத்திக் கொள்ளலாம். எப்படி அமைத்தாலும் குளியலறை முழுவதும் வெளிச்சமாக இருக்குமாறு பல்புகளை தேர்வு செய்து அமைப்பது முக்கியம்.

முகம் பார்க்கும் கண்ணாடி

குளியலறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடிக்கு சற்று முன் தள்ளி மேற்புறத்தில் மின்விளக்கை பொருத்தினால், நமக்கு அருகில் மேலிருந்து வரக்கூடிய வெளிச்சம் காரணமாக முகம் தெளிவாக தெரியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், கண்ணாடியின் மேல் பாக சட்டத்தில் அல்லது அதன் அருகில் உள்ள சுவரில் பொருத்தினால் முகம் தெளிவாக தெரியும்.

‘அக்செண்ட் லைட்டிங்’

இன்றைய நவீன முறையிலான குளியலறைகளில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ‘‌ஷவர்’ அமைப்பு உள்ள சுவர்களில் இவ்வகை விளக்குகளை சற்றே திருப்பும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். அதன் காரணமாக வெளிச்சம் சுவரில் பதிக்கப்பட்டுள்ள ‘டைல்ஸ்’ மீது பிரதிபலித்து வித்தியாசமான அழகை தரும்.

அலங்கார விளக்கு

குளியலறை வெளிச்சத்தை கூடுதலாக காட்டும் தன்மை பெற்ற இவ்வகை விளக்குகள் அதிகமாக நடைமுறையில் இல்லை. மேலும், அதன் வடிவமைப்புகள் குளியலறையை மேலும் அழகாக்கும். சிறிய அளவு கொண்ட சர விளக்குகளும் அழகாக இருக்கும்.

ஒளிக் கட்டுப்பாடு

ஒளிக்கட்டுப்பாடு என்ற ‘டிம்மர்கள்’ மூலம் குளியலறையில் ‘லைட்டிங்கை’ கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யும் வசதியை அமைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை கூசும் வெளிச்சமில்லாமல் மிதமான வெளிச்சத்தை பெற இயலும்.

மேலும் செய்திகள்