நெருங்கிய உறவுகளுக்குள் சொத்து பரிமாற்ற ஆவணம்

சொத்தின் உரிமையை தகுந்த ஆவணங்கள் மூலம் பதிவு செய்து பெறக்கூடிய பரிவர்த்தனை முறையானது சொத்து விற்பனை என்று குறிப்பிடப்படும்.

Update: 2018-03-23 21:00 GMT
ருவர் இன்னொருவருக்கு விற்க விரும்பும் தமது வீடு அல்லது மனையின் சந்தை மதிப்பை கணக்கிட்டு அதற்கு சமமான பணத்தை செலுத்திவிட்டு, சொத்தின் உரிமையை தகுந்த ஆவணங்கள் மூலம் பதிவு செய்து பெறக்கூடிய பரிவர்த்தனை முறையானது சொத்து விற்பனை என்று குறிப்பிடப்படும்.

மேற்கண்ட முறையானது குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்யும் சமயங்களில், கடைப்பிடிக்கப்பட வேண்டியதில்லை. அவ்வாறு ரத்த சம்பந்தமாகவும், மிக நெருங்கியதாகவும் உள்ள உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றப்படும் முறை தானமாக வழங்குவதாகும். அதற்காக பதிவு செய்யப்படும் ஆவணம் தானப்பத்திரம் என்று சொல்லப்படும்.

இத்தகைய பத்திரம் மூலம் குறிப்பிட்ட சொத்திற்கான உரிமை மாற்றம் செய்யப்படுவது விற்பனை என்று அழைக்கப்படுவதில்லை. அதாவது, சகோதரர், தனது சகோதரிக்கு வீடு அல்லது நிலத்தை தானமாக வழங்கலாம். அவ்வாறு பெற்றவர் அவரது கணவர் அல்லது மனைவிக்கு அந்த சொத்தை தானமாக கொடுக்கவும் இயலும்.

மேற்கண்ட முறையில் தானமாக கொடுக்கப்படும் சொத்துக்களை பதிவு செய்யும்போது முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், தானப்பத்திரம் பதிவு செய்வதற்கான கட்டணத்தை சொத்து வழிகாட்டி மதிப்பில் குறிப்பிட்ட சதவிகிதம் பண மதிப்பாக செலுத்த வேண்டும்.

மேலும், தானம் கொடுப்பதை, வாங்குபவர் ஏற்றுக்கொண்டு அந்த இடத்தின் உரிமையை பெறுவதற்கான வழிவகைகளை உடனடியாக செய்து கொள்ளவேண்டும். சம்பந்தப்பட்ட இடம் அல்லது வீட்டிற்கான வருவாய் ஆவணங்கள் உள்ளிட்ட இதர ஆவணங்களை உடனடியாக தானம் வாங்கியவர் அவரது பெயருக்கு மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். ஒரு முறை தானமாக சொத்து வழங்கப்பட்டுவிட்டால் அதை ரத்து செய்வதுகடினமானது.

மேலும் செய்திகள்