மின்சாதனங்கள் பயன்பாட்டில் பாதுகாப்பான முறைகள்

தற்போதைய நாகரிக வாழ்க்கை முறைகளில் அன்றாட பயன்பாட்டில் மின்சாரம் பெரும் பங்கு வகிக்கிறது.

Update: 2018-03-23 21:15 GMT
ற்போதைய நாகரிக வாழ்க்கை முறைகளில் அன்றாட பயன்பாட்டில் மின்சாரம் பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, தொழில் மற்றும் வர்த்தக பயன்பாட்டை விடவும் வீடுகள் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.  

மின் காந்தப்புலம்

பொதுவாக, மின்சாரத்தில் இயங்கும் சாதனங்களை பயன்படுத்தும் இடங்களில் மின் காந்தப்புலம் (Electro Magnetic field) ஏற்படுவதாகவும், அவை குறிப்பிட்ட அளவைவிட அதிகமாகும் பட்சத்தில் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, தனி வீடுகள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

* வீடுகளுக்கு மிக அருகில் உயர் அழுத்த மின் கம்பிப்பாதை, துணை மின்நிலையங்கள் ஆகியவவை இருக்கக் கூடாது.

* ஒரு நாளின் பெரும் பகுதியை செலவிடும் படுக்கை, அலுவலக இருக்கை ஆகியவை மின்காந்தப்புல பகுதிகளிலிருந்து போதுமான தொலைவு தள்ளி இருப்பது அவசியம்.

* ‘மெயின் ஸ்விட்ச் போர்டு’ படுக்கையறைக்கு மிகவும் அருகில் இருக்கக்கூடாது. அவ்வாறு இயலாவிட்டால் கட்டிலை போதுமான தூரத்துக்கு நகர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

* குளிர்சாதனப் பெட்டி போன்ற மின்சாதனங்களுக்கு மிக அருகில் போடாமல், படுக்கையை தள்ளியே வைக்கவேண்டும். மேலும், சமையலறையை ஒட்டியவாறு படுக்கையறை அமைக்கப்படும்போது இரண்டுக்கும் இடையில் உள்ள பொதுச்சுவரை ஒட்டியவாறு கட்டிலை போடுவது கூடாது.

* தொலைக்காட்சி பெட்டியிலிருந்து பரவும் மின்காந்த புலம் பாதிப்புகளை ஏற்படுத்தாதவாறு குறைந்தபட்சம் 4 அடி தூரமாவது தொலைக்காட்சி பார்ப்பவருக்கும், அதற்கும் இடையில் இருக்க வேண்டும்.

* குவார்ட்ஸ் கடிகாரம் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்கள் படுக்கையிலிருந்து 4 அடி தூரத்துக்குள் இருக்கக்கூடாது.

* மின் சாதனங்களோடு இணைக்கப்பட்டுள்ள சிறு அளவிலான மின்னழுத்த மாற்றிகள் (Small transformer) பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டும். படுக்கை, அலுவலக மேசை ஆகியவைகளிலிருந்து அந்த சாதனங்கள் சற்று தொலைவில் வைக்கப்பட வேண்டும்.

* பேட்டரி சார்ஜர்களும் படுக்கை, மேசை ஆகியவற்றிற்கு மிக அருகில் இருக்கக்கூடாது. மின்சார கம்பளம் போன்றவைகளும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அறியப்படும் நிலையில், உடனே அவற்றை தவிர்த்து விடலாம் அல்லது முன்னரே படுக்கையை சூடாக்கிவிட்டு, மின் இணைப்பைத் துண்டித்த பின்னர் அவற்றை உபயோகப்படுத்தலாம்.

* கம்ப்யூட்டர் திரையிலிருந்து வீசும் மின்காந்த புலத்தின் அளவு அதிலிருந்து 40 செமீ தூரத்தில் 3 மி.கி–க்கு (EMF> 3mg) மிகாமல் இருக்க வேண்டும் என்று சர்வதேச தர நிர்ணயம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே குறைவான கதிர் வீச்சுத் திரைகள் (Low radiation Screens) கொண்ட மானிட்டர்களை பயன்படுத்தலாம்.

மேலும் செய்திகள்