எளிதாக அமைக்கலாம் வீட்டுத்தோட்டம்

தனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பது அனைவருக்கும் சாத்திமான ஒன்றுதான் என்று தோட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Update: 2018-05-13 05:14 GMT
 சிறு அளவிலான காலி இடம் இருந்தாலும் போதும். அதை வைத்து நமக்கு தேவையான காய்கறிகளை விளைவிக்கலாம். அதுவும் குறைந்த பட்ஜெட் அல்லது பெரிய அளவிலான செலவுகள் இல்லாமல் செய்யலாம்.

இயற்கையான காய்கறிகளை, மீதியாக உள்ள இடத்தை பயன்படுத்தி, நமது பார்வையில் வளர்த்து அவற்றை பயன்படுத்தும்போது ஏற்படும் மனத்திருப்தியை தோட்டம் அமைத்த பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். தோட்டம் அமைக்க முதலில் தேவை நல்ல மண். எனவே, இடம் மண்ணை கொட்டுவதற்கு ஏற்றவாறு உள்ளதா..? என்று கவனிக்கவேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

வீட்டுக்கு வெளிப்புறமாக என்றால் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது இல்லை. அல்லது காலி இடம் சிமெண்டு தரை என்றால் கொஞ்சம் முன்னேற்பாடு செய்ய வேண்டியதாக இருக்கும். ஏனெனில், நேரிடையாக மண்ணை சிமெண்டு தரையில் கொட்டுவது கூடாது. மேல்மாடி என்றால் பயிரிடும் போது ஊற்றப்படும் நீர் மேல்மாடியில் இறங்கி பல சிக்கல்களை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவது பாதுகாப்பு.

பிளாஸ்டிக் பைகள்

சென்னை போன்ற நகரங்களில் மண் தொட்டிகள் கிடைத்தாலும், அவற்றை கச்சிதமாக பராமரிப்பது கடினம். அதற்கு மாற்றாக Hdpe Grow Bags எனப்படும் ‘பிளாஸ்டிக்’ பை வகைகளை சந்தையில் வெவ்வேறு அளவுகளில் தேவைக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்தலாம். மேலும், நல்ல தரமான மண் கிடைப்பது சிரமமாக இருந்தால், அதற்கு மாற்றாக தென்னை நார் கழிவு மண்புழு உரம் கலந்து பயன்படுத்தலாம். எடை குறைவாக உள்ள தென்னை நார் கழிவு நன்றாக அழுத்தி, அடைக்கப்பட Hdpe Grow Bags வகைகள் சந்தையில் கிடைக்கிறது. சுலபமாக வாங்கி அவற்றை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

போதுமான நிலம் மற்றும் மண், தொட்டி அல்லது பிளாஸ்டிக் பை, கொஞ்சம் தண்ணீர் அல்லது வீணாகும் நீரை பயன்படுத்தலாம். வீட்டு குப்பைகளையும் உரமாக போடலாம். கொஞ்சம் விதைகளை கடைகளில் வாங்கலாம் அல்லது சமையலறையில் கிடைக்கும் விதைகளை பயன்படுத்தலாம். பராமரிப்புக்காக தினமும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, கவனிக்க வேண்டும். வீட்டுத்தோட்டம் என்பது சிறிய அளவிலான விவசாயம் என்பதால், அனைத்து வகை பயிர்களையும், காய்கறிகளையும் எளிதாக விளைவித்து அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம். 

மேலும் செய்திகள்