படிக்கட்டுகளால் வடிவமைக்கப்பட்ட புதுமை கட்டுமானம்

நியூயார்க் நகரத்தின் அழகை அனைவரும் முப்பரிமாணத்தில் ரசிக்கவும், நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அது உற்சாக அனுபவமாக மாறவும் ஹித்தர்விக் ஸ்டுடியோ என்னும் நிறுவனம் இந்த படிக்கட்டுகளால் ஆன புதுமையான கட்டுமானத்தை அமைத்து வருகிறது.

Update: 2018-05-13 05:36 GMT
ஹித்தர்விக் ஸ்டுடியோ உரிமையாளர் தாமஸ் ஹித்தர்விக் அவரது குழந்தை பருவ நினைவுகளை வெளிக்காட்ட அமைந்த ஒரு சந்தர்ப்பமாக இந்த படிக்கட்டு வடிவமைப்பு முறை தேர்வு செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இளமைக்கால நினைவு


அதாவது, அவரது இளமைக்காலத்தில் வீட்டுக்கு வெளிப்புறத்தில் உபயோகம் இல்லாத மரப்படிக்கட்டுகள் ஓரமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றின் மீது குஷியாக ஏறி விளையாடி இருக்கிறார். அந்த கிளர்ச்சியான அனுபவத்தை இந்த கட்டிடம் மூலம் மீண்டும் பெறுவதாகவும், அதை நியூயார்க் நகரத்துக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் பெற்று மகிழ வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கட்டமைப்பை உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உச்சியில் அகலம்

நியூயார்க் நகரத்தின் புது அடையாளமாய் விளங்கக்கூடிய விதமாக இந்த படிக்கட்டு வடிவ கூம்பு கட்டிட அமைப்பு முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்தப்படிக்கட்டுக்களில் 2500 பேர் தாராளமாக நடந்து செல்ல இயலும். கீழ் தளத்தில் 50 அடி அகலத்தில் துவங்கும் கட்டுமானம், மேலே செல்லச்செல்ல அகலமாக விரிந்து அதன் உச்சியில் 150 அடி அகலம் கொண்டதாக அமைய உள்ளது.

கூம்பு வடிவ அமைப்பு

மொத்தமாக 150 படிக்கட்டுகள் மற்றும் 2500 படிகள் கொண்டதாகவும், படிகள் குறிப்பிட்ட உயரத்துக்கு சென்ற பின்பு திரும்புவதற்காக 80 ‘லேண்டிங்’ பகுதிகள் அமைக்கப்பட இருக்கின்றன. 150 அடிகளுக்கும் மேலான உயரம் கொண்ட இந்தப் படிக்கட்டுக்கள் பளபளப்பான செம்பு வண்ண எஃகு இரும்பினால் உருவாக்கப்பட்டு வருகிறது. மொத்த கட்டமைப்பின் விஸ்தீரணம் 28 ஏக்கர் கொண்ட பெரிய அளவிலான கூம்பு வடிவ கட்டுமானம் அமைய உள்ளது. 

மேலும் செய்திகள்