48 மணி நேரத்தில் கட்டமைக்கப்பட்ட சாதனை வீடு

வெறும் இரண்டு நாட்களில் வீட்டை கட்டி முடிப்பது சாத்தியம் என்று பெங்களூருவை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் செய்து காட்டியுள்ளார்.;

Update:2018-06-02 05:15 IST
வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க குறிப்பிட்ட கால அளவு அவசியம் என்பது கட்டுமான பொறியியல் நுட்பமாகும். அதாவது, சிமெண்டு மற்றும் மணல் கலவையானது இயல்பான முறையில் உலர்வதற்கும், சுற்றுப்புற வெப்பம் காரணமாக விரைவாக உலர்ந்து விடாமல் ஈரப்பதத்தை தக்க வைக்க நீராற்றல் முறை செய்வதற்கும் காலதாமதமாகும். மேலும் தரைத்தளம், மேல்தளம் உள்ளிட்ட இதர கதவு–ஜன்னல், தண்ணீர் குழாய்கள் மற்றும் மின்சாதனங்கள் அமைப்பு ஆகிய பல்வேறு பணிகளின் காரணமாக 1200 சதுர அடிகள் கொண்ட ஒரு தனி வீட்டின் கட்டமைப்பை செய்து முடிக்க சுமாராக ஆறு முதல் பத்து மாத கால அவகாசம் (பணிகளின் வேகத்துக்கு ஏற்ப) தேவைப்படலாம்.  

ஒரு வருட காலம்

மேற்கண்ட கட்டுமான தொழில்நுட்ப அடிப்படையில் சுமார் 2400 சதுர அடி கொண்ட ஒரு வீட்டைக் கட்டி முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகலாம்..? கட்டுமான ஒப்பந்ததாரரின் வேலைத்திறன் மற்றும் வீட்டு உரிமையாளரின் பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்து 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலும் கால அவகாசம் தேவைப்படலாம்.

இரண்டு நாட்களில் வீடு

ஆனால், வெறும் இரண்டு நாட்களில் மேற்கண்ட அளவுள்ள வீட்டை கட்டி முடிப்பது சாத்தியம் என்று பெங்களூருவை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் செய்து காட்டியுள்ளார். 48 மணி நேரத்தில், அதாவது இரண்டு நாட்களில் 3 படுக்கையறைகள் கொண்ட 2400 சதுர அடி வீட்டை அவர் கட்டி முடித்துள்ளார். கட்டிடத்தின் மொத்த பட்ஜெட் ரூ.48 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

தயார் நிலை

முன்னதாக அவர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக 24 மணி நேரத்தில் இந்த வீட்டை கட்டி முடிக்க திட்டமிட்டிருந்தார். அதற்காக, வீட்டின் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக தேவையான அனைத்து மூலப்பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அதற்காக, சுமார் 20 பக்கங்கள் கொண்ட ‘செக் லிஸ்ட்’ மூலம் அவை சரி பார்க்கப்பட்டதோடு, பணியாளர்கள் உள்பட அனைவரும் தயாராக இருந்தனர். 

இரண்டு ‘ஷிப்டுகள்’

பணிகளை விரைந்து முடிக்க, கிட்டத்தட்ட 20 கட்டுமானத் தொழிலாளர்கள் தலா 12 மணி நேர அவகாசத்தில், இரண்டு ‘ஷிப்டுகள்’ கட்டிட பணிகளை மேற்கொள்ள தயாராக இருந்தனர். ஆனால், இந்த சாதனை முயற்சியானது இயற்கையின் ஒத்துழைப்பின்மையால் 48 மணி நேரம் கொண்டதாக அமைந்து விட்டது.

ஒளிபரப்பு

சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த கட்டுமான வேலை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு நேரம் என்பதை கச்சிதமாக கணக்கிட்டு, அதற்கேற்ப வேலைகள் பிரிக்கப்பட்டு, திட்டமிட்டபடி நடந்தன. கட்டுமான பணிகள் நடைபெற்றதை உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்பு செய்தன. 

‘பிரிகாஸ்ட்’ முறை

தொடக்கத்தில் அஸ்திவார பணிகளை செய்து முடிக்க 59 நிமிடங்களும், அதன் பின் கிரேடு ஸ்லாப் என்ற தரைத்தளம் அமைக்க 31 நிமிடங்கள் ஆனது. அதன் பின்னர், பக்கவாட்டு சுவர்கள் மற்றும் மேற்கூரை ஆகியவை பிரி–காஸ்ட் முறைப்படி அமைக்கப்பட்டு, கதவு ஜன்னல்கள் பொருத்தப்பட்டன. ஆனால், எதிர்பாராமல் ஏற்பட்ட சீதோஷ்ண நிலை மாற்றம், கட்டுமான இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்களில் ஏற்பட்ட திடீர் கோளாறுகள் காரணமாக 24 மணி நேரத்தில் 2400 சதுர அடி என்ற சாதனை நிறைவேறாமல் போய்விட்டது. எனவே, 48 மணி நேரத்தில் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.

இயக்குனர் தகவல்

மேற்கட்ட சாதனை பற்றி கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் கூறும்போது, ‘ஒரு கட்டுமான பணியை மிகவும் குறுகிய காலகட்டத்தில் செய்து முடிப்பதால், கட்டுமானச் செலவுகள் பெருமளவுக்கு குறைவது தெரிய வந்துள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்பம் மற்றும் தெளிவான திட்ட நடவடிக்கைகள் ஆகிய வழிமுறைகள் மூலம் மேற்கண்ட சாதனைகள் சாத்தியம்தான். உடனே கட்டி முடிக்கப்பட்டு, அந்த வீடு பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் வீட்டுக்கான முதலீட்டுக்கு அர்த்தம் இருக்கும். அதன் அடிப்படையில், இந்த வீடு வெறும் சாதனையாக மட்டும் பார்க்கப்படாமல், தொழில்நுட்பம் சார்ந்த வழிகாட்டுதலாகவும் பார்க்கப்பட வேண்டும். எனது, அடுத்த முயற்சியில் கட்டுமான பணியை 48 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரமாக குறைத்து, பின்னர் 24 மணி நேரத்தில் இதே அளவுடைய வீட்டைக் கட்டி முடிக்க முடிவெடுத்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்