பட்டா விவரங்களை கவனிக்க உதவும் அரசின் இ-சேவை

கடந்த பத்து ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிராமப் புற சொத்துக்களுக்கும் கணினி மூலம் பட்டா வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது.

Update: 2018-06-09 07:19 GMT
தாசில்தார், துணை தாசில்தார் அல்லது மண்டல துணைத் தாசில்தார் ஆகியோர் கையெழுத்து அதில் இடம் பெற்றிருக்கும். சொத்தின் வரைபடம் அதில் இடம்பெறாது. கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக நிலப் பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தகவல் அட்டவணை

கணினி பட்டா என்பது மாநகராட்சி, நகராட்சி, நத்தம் நிலம் அல்லாத இடங்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அதில் கிராமம், தாலுகா கணக்கெடுப்பு எண்கள், உட்பிரிவு எண்கள் நன்செய் நிலம், புன்செய் நிலம் அளவு மற்றும் இதர நிலங்களின் அளவுகளும் அட்டவணையாக குறிப்பிடப்பட்டிருக்கும். நில உரிமை மற்றும் நில அளவுகள் ஆகிய தகவல்களும் அடங்கியிருக்கும். நிலங்களின் அளவுகள் ஹெக்டேர், ஏர்ஸ் என்ற முறையில் இருக்கும்.

கணினி பட்டா

பொதுவாக, பட்டா வேண்டி விண்ணப்பம் செய்பவர் நேரடியாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். ஒருவேளை பட்டாவானது சம்பந்தப்பட்ட உட்பிரிவுகளுக்குள் இல்லை என்று அறியப்பட்டால், அசல் ஆவணங்களுடன் தாலுகா அலுவலகம் சென்று விண்ணப்பம் செய்து கொள்ளவேண்டும்.

பொதுவாக, பட்டாவுக்காக விண்ணப்பித்த இடத்தை சர்வேயர் பார்வையிட்ட பிறகு, விண்ணப்பம் செய்த நாளிலிருந்து நான்காவது வெள்ளிக்கிழமை தரப்படும் என்பது நடைமுறை. மேலும், பட்டாவில் உட்பிரிவுகள் இருப்பின், அதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் தாசில்தாரிடமிருந்த ஒப்புதல் பெற்ற நாளே பெறப்பட்டு, அதன் நடைமுறைகள் 30 நாட்களுக்குள் முடித்து பட்டா அளிக்கப்படும்.

ஆன்-லைனில் சரிபார்க்கலாம்

பட்டாவை ஆன்-லைனில் சரி பார்க்க www.tn.gov.in என்ற இணைய தளத்தின் இ-சேவைகள் பிரிவில், மாவட்ட அலுவலகங்கள் என்ற இணைப்பை திறக்கவேண்டும். பட்டா விவரங்களான மாவட்டம், தாலுகா, கிராமம் மற்றும் அதன் எண் ஆகிய விவரங்களை பதிவு செய்து தகவலை பெறலாம். பட்டா எண் தெரியாத பட்சத்தில் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். சொத்தின் முகவரி, சர்வே எண், உட்பிரிவு எண், சொத்தின் அளவு, உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களையும் ஆன்லைன் மூலம் சரிபார்க்க இயலும். 

மேலும் செய்திகள்