கட்டுமான பணிகளுக்கு மணல் இறக்குமதி

2018–19–ம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு, பொதுப்பணித்துறை சார்பில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2018-07-13 21:30 GMT
2018–19–ம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு, பொதுப்பணித்துறை சார்பில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெருகி வரும் மணல் தேவையை சமாளிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மாதம் 5 லட்சம் டன்கள் வீதம், 30 லட்சம் டன் ஆற்று மணலை தேசிய அளவிலான ஒப்பந்த புள்ளிகள் மூலம் இறக்குமதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இறக்குமதி மணல்

கட்டுமான தொழிலானது, மணல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டது. அவற்றை சீரமைக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மணல் தேவை மற்றும் அதன் சப்ளை ஆகியவற்றில் உள்ள இடைவெளியை கருத்தில்கொண்டு, 548 கோடி ரூபாய் மதிப்பில் 30 லட்சம் டன் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்யவும் அரசு முடிவு செய்துள்ளதாக, பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய குவாரிகள்

குறிப்பாக, கட்டுமானப்பணிகளுக்கு தேவைப்படும் மணலை, பொதுமக்களுக்கு வழங்குவதற்கு வசதியாக, புதிய மணல் குவாரிகளை தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி தெரிவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து, 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும்,  அதற்காக, கிட்டத்தட்ட 540 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

நேரடி விற்பனை

மேற்கண்ட ஒப்பந்தப்படி இரண்டு ஆண்டுகளுக்கு, எப்போது வேண்டுமானாலும் மணலை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும், அந்த வெளிநாட்டு மணல், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியவற்றின் வழியாக இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பொது மக்கள்  மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு தேவையான மணல், துறைமுகத்தில் இருந்தே நேரடியாக விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்