கான்கிரீட் அமைப்புகளில் தேங்காய் நார் பயன்பாடு

உலகெங்கும் உள்ள பல நாடுகளை சேர்ந்த கட்டுமான பொறியியல் ஆராய்ச்சியாளர்கள் சூழலை பாதிக்கும் பல்வேறு கட்டிட பொருட்களுக்கு மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறார்கள்.

Update: 2018-07-13 22:00 GMT
லகெங்கும் உள்ள பல நாடுகளை சேர்ந்த கட்டுமான பொறியியல் ஆராய்ச்சியாளர்கள் சூழலை பாதிக்கும் பல்வேறு கட்டிட பொருட்களுக்கு மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறார்கள். அவர்களில் பலரும் இயற்கையில் உள்ள பல பொருட்களை உற்றுக்கவனித்து அவற்றிலிருந்து பல்வேறு வழிமுறைகளை பெறுவதாக குறிப்பிட்டுள்ளனர். 

தேங்காய் மட்டை

அந்த வகையில், தென்னை மரத்திலிருந்து விழும் தேங்காய், அதன் மட்டையின் உடற்கூறு அமைப்பு காரணமாக உடையாமல் பாதுகாக்கப்படுவதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அதில் அமைந்துள்ள அதிர்வுகள் தாங்கும் ஏணிகள் போன்ற உள்ளுறை அமைப்புகளை தங்கள் ஆய்வுகளில் அடையாளம் கண்டனர். அதன் காரணமாக, தேங்காய் கீழே விழும்பொழுது அதிர்ச்சி அலைகள், தேங்காய் முழுவதும் பரவலாக மாற்றப்பட்டு எந்த பகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் பாதுகாப்பதாக அறியப்பட்டது.

இணைப்பு கட்டுமான பொருள்

மேற்கண்ட உள்ளுறை அமைப்பை கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தி உறுதியான கட்டிடங்களை உருவாக்க ஜெர்மனி பிரீபர்க் பல்கலைக்கழக கட்டிடக்கலை அறிஞர்கள் முயற்சி செய்தனர். கட்டுமானப் பொறியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பல்கலை ஆய்வுக்குழுவினர் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒருவகை இணைப்புக் கட்டுமான தொழில்நுட்பத்தை
(Biological Designand Integrative Structures)
உருவாக்கினார்கள். 

பாதுகாப்பு

அதாவது, பல்வேறு பாதிப்புகள் காரணமாக கட்டிடங்களில் ஏற்படும் அதிர்ச்சி அலைகளை பரவலாக சிதறடிக்கும் வகையில், மேற்கண்ட தொழில்நுட்ப முறைப்படி கான்கிரீட் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டால் பூமி அதிர்ச்சி, நிலச்சரிவு போன்ற இயற்கை பாதிப்புகளை பெருமளவு தடுக்க முடியும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. இவ்வாறு, இயற்கையில் அமைந்துள்ள பல்வேறு கட்டுமானக்கூறுகளை அறிந்து அவற்றை நுணுக்கமாக ஆய்வு செய்து கட்டுமான பொருட்களை தயாரிப்பது மற்றும் கட்டமைப்புகளை வடிவமைப்பது போன்ற நிலைகளில் உலகமெங்கும் உள்ள கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் பொறியியல் வல்லுனர்கள் முயற்சி செய்து வருகின்றனர். 

நமது பகுதி ஆராய்ச்சி

மேற்கண்ட கட்டுமான தொழில் நுட்ப ஆராய்ச்சிகளின் ஒரு அம்சமாக நமது நாட்டின் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியின் கட்டுமான பொறியியல் மாணவர்கள் புதிய ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள். அதாவது, கான்கிரீட் அமைப்புகளில் இரும்பு கம்பிகளுக்கு மாற்றாக தேங்காய் நாரை பயன்படுத்தி, எளிய பட்ஜெட்டில் பாதுகாப்பான கட்டிடங்களை அமைக்கும் முறையை தொழில்நுட்ப ரீதியாக அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கெனவே, தெற்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கான்கிரீட்டில், இரும்பு கம்பிகளுக்கு பதிலாக மூங்கில் மரங்களை பயன்படுத்தும் (Bamboo Reinforced Concrete Construction) முறை பயன்பாட்டில் இருந்து வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

மேலும் செய்திகள்