உலக நாடுகளில் அமைந்துள்ள அதிசய குடியிருப்புகள்

பொதுவாக, சம தளங்களில் அமைக்கப்பட்ட குடியிருப்புகள்தான் உலகமெங்கும் பரவலாக அமைந்திருக்கின்றன.

Update: 2018-07-13 22:30 GMT
பொதுவாக, சம தளங்களில் அமைக்கப்பட்ட குடியிருப்புகள்தான் உலகமெங்கும் பரவலாக அமைந்திருக்கின்றன. விடுமுறைக்கால மகிழ்ச்சியை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவழிக்கவே சற்று உயரமான மலைகளில் அமைக்கப்பட்ட வசிப்பிடங்களை பலரும் நாடுகின்றனர். அந்த நிலையில் உலக அளவில் பல அழகான நகரங்கள் மலைகளின்மீது அமைக்கப்பட்டன. காலப்போக்கில் அவை நிரந்தரமான குடியிருப்புகளைக்கொண்ட நகரமாக மாற்றம் பெற்று விட்டன. கடலுக்கு நடுவில் உள்ள மலைகள் அல்லது நிலப்பரப்பில் இயற்கையாக உருவான மலைகள் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட வித்தியாசமான குடியிருப்புகள் உலக நாடுகளில் நிறைய இருக்கின்றன. அந்த வகையில் வாழிடத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், கட்டிட தொழில்நுட்பங்களுக்கு உதாரணமாகவும் உள்ள குடியிருப்புகள் பற்றிய செய்திகளை இங்கே காணலாம். 

1. எரிமலையின் மேற்புறம் அமைந்த ஊர்

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில், ஜப்பானின் டோக்கியோ நகருக்கு தெற்கே சுமார் 300 கி.மீ தொலைவில் ஆகஷிமா (Aogashima) என்ற எரிமலைக்கு மேலே இந்த தீவு நகரம் அமைந்துள்ளது. ஜப்பானிய பூகோளவியல் வல்லுனர்கள் அந்த எரிமலை மீண்டும் வெடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஆனால், அந்த நகரத்தில் வசிப்பவர்கள் அதை கவனத்தில் கொண்டாலும், எரிமலையைச் சமாளித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் இருக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல கட்டிட அமைப்புகள் உள்ளிட்ட பல வி‌ஷயங்களில் எளிதாக மாற்றம் செய்யத்தக்க தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். சுமார் 4 கி.மீ சுற்றளவில் 200 பேர்களுக்கும் குறைவான நபர்களே இங்கே குடியிருந்து வருகின்றனர். சமையல் வேலைகளுக்காக அந்த எரிமலையில் ஆங்காங்கே இயற்கையாக கீழிருந்து வரக்கூடிய நீராவியை பயன்படுத்தி அடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உணவு வகைகளை எளிதாக சமைத்துக்கொள்ள முடியும். தீவுக்கு செல்ல கப்பல் மற்றும் விமான வசதிகள் உள்ளன.

2. மலையால் மறைக்கப்பட்ட நகரம்

மலைப்பாறைக்குப் பின்னால் மறைந்திருக்கும் இந்தக் குட்டி நகரத்தின் பெயர்    மோனம்வாசியா    (Monemvasia) ஆகும். கிரீஸ் நாட்டின் கடலோரத்தில் அமைந்துள்ள லக்கோனியா முனிசிபாலிட்டிக்கு உட்பட்ட இந்த தீவு நகரத்தில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர்கள் வசிப்பதாக தகவல். பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் முக்கிய நிலப்பரப்பிலிருந்து தனியாக அமைந்த இந்த பகுதிக்கு கடல் வழியாகவும், தரைவழி சாலை மூலமும் செல்லும் வழிகள் உள்ளன. நகரின் முக்கிய வருமானம் சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது. பழங்காலத்தில் அமைக்கப்பட்ட கட்டமைப்புகளான சர்ச் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளும் பழமையை பறைசாற்றுகின்றன. கடல் வழியாக வரக்கூடிய படையெடுப்புகளை சமாளிக்கும் விதத்தில் பழங்கால கோட்டைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3. சாதுக்களுக்கான குடியிருப்பு பகுதி

வட இந்தியாவில் அமைந்துள்ள புக்தல் கோம்பா (Phugtal Gompa) என்ற லடாக் பள்ளத்தாக்கில், புகழ்பெற்ற கார்கில் மாவட்டம் சன்ஸ்கார் பகுதியில் அமைந்துள்ளது. இராட்சத தேன்கூடு போன்ற வடிவில் தோன்றும் இந்த குகை அமைப்பின் வாய் பகுதிகளில் சாதுக்கள் வாழ்கின்றனர். இங்கு வாகனங்கள் மூலம் செல்ல முடியாத அளவுக்கு பாதை அமைந்துள்ளதால் கால்நடையாகத்தான் இப்பகுதிக்கு செல்ல முடியும். அன்றாட வாழ்க்கைக்கான பொருட்களை கீழிருந்து மேலே கொண்டு செல்ல குதிரைகள்  பயன்படுகின்றன. புத்த மத சாதுக்கள் மற்றும் பல்வேறு கல்வியாளர்கள் வாழும் பகுதியான இதில் இலவச பள்ளி மற்றும் மருத்துவ வசதிகள் இருப்பதால் அக்கம்பக்கம் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறுவதாகவும் அறியப்பட்டுள்ளது. குளிர் காலங்களில் சன்ஸ்கர் நதி உறைந்து விடும்போது அதையே பாதையாக பயன்படுத்தி பக்கத்து கிராம மக்கள் இங்கு வருவதும் வழக்கத்தில் உள்ளது.   

4. அமைதி கொண்ட சிறிய குடியிருப்பு

டென்மார்க்கில் உள்ள பரோ தீவில் காசடலுர் (Gásadalur  Village) கிராமப்புறமான இப்பகுதி வித்தியாசமானது. உயரமான மலைக்கு மத்தியில் ஒரு குடியிருப்பு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள இந்த கிராமத்தின் மொத்த ஜனத்தொகை வெறும் இரட்டை இலக்கத்தில் மட்டுமே உள்ளது. அதாவது அதிகபட்சமாக இன்றைய தேதியில் அழகான இப்பகுதியில் 25 பேருக்கும் குறைவாகவே மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள் உணவுக்காக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவேண்டுமென்றால், கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான அடி உயரத்திலிருந்து படிகள் வழியாக கீழே வரவேண்டும். இல்லாவிட்டால் மலைகளின் வழியாக இறங்கவேண்டும். அதன் காரணமாக குடியிருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அங்குள்ள பல வீடுகள் யாரும் வசிக்காமல் தனித்து விடப்பட்டிருப்பதாக செய்திகள் உள்ளன. ஆனால், அமைதியும், நிம்மதியும் கொண்டதாக இப்பகுதி உள்ளதால் அங்கே வசிப்பதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

5. பாலைவனச்சோலையில் அமைந்த கிராமம்

பாலைவனச்சோலை என்ற இடப்பரப்பு பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது, வறண்ட பாலைவன பகுதிக்கு மத்தியில் நீர் வளத்துடன், சோலைவனமாக அமைந்த பகுதியாகும். அதுபோன்ற பாலைவனச்சோலையில் அமைந்துள்ள கிராமப்பகுதியும் ஒன்று பெரு நாட்டின் தென்மேற்கில் ஹுவாகசினா 
(Huacachina)
என்ற பெயரில் உள்ளது. உலகின் வறட்சியான பாலைவனத்தின் மத்தியில் பசுமையான மரங்கள் சூழ ஹோட்டல்கள் மற்றும் கடைகள் சூழ அமைந்திருக்கிறது. அதன் காரணமாக ஒரு வருடத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கே வருகை புரிகின்றனர். ஆச்சரியமான வி‌ஷயம் என்னவென்றால் இந்த கிராமத்தின் மக்கள் தொகை அதிகபட்சமாக 120 மட்டுமே. இங்குள்ள மண் மற்றும் தண்ணீரில் மருத்துவ குணம் உள்ளதாகவும் நம்பிக்கை இருக்கிறது. உறுதி இல்லாத மணலில் தக்க விதத்தில் அமைக்கப்பட்ட அஸ்திவாரத்தின் மீது அமைந்துள்ள வீடுகள் கவனிக்கத்தக்கவை.

மேலும் செய்திகள்