வீட்டு கடன் பெற்றவர்களுக்கு வரிச் சலுகைகள்

சொந்தமாக வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி வீடு வாங்கிய நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.

Update: 2018-07-13 23:00 GMT
சொந்தமாக வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி வீடு வாங்கிய நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம்.

வீட்டு வாடகைப்படி

வீட்டு வாடகை அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ) பெற விரும்புபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கவேண்டும். வங்கி கடன் பெற்று கட்டிய வீட்டிலேயே குடியிருப்பவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால், அவர்கள் கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திரும்ப செலுத்துவதன் மூலம் வரிச்சலுகைகள் பெறலாம்.

வேறு ஊரில் குடியிருப்பவர்கள்

வங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வரிச்சலுகையும் கிடைக்கும்.

குடியிருக்கும் ஊரில் வாடகை வீடு

குடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்று வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில், எச்.ஆர்.ஏ மற்றும் வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றில் வரிச்சலுகை பெறலாம்.

ஐந்து ஆண்டுகள் வரையறை

வங்கி கடன் பெற்று கட்டப்படும் வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடையாத நிலையில் பணிகள் முடியும் வரையில் கடனுக்கான அசலுக்கு வரிச்சலுகை பெற இயலும்.

வீட்டின் கட்டுமானம் முடிவடைந்து, பல்வேறு காரணங்களால் அதில் குடியேற முடியாத சூழ்நிலையில் குடியிருக்கும் வாடகை வீட்டுக்கு மேற்கண்ட இரண்டு வகை வரிச்சலுகைகளும் கிடைக்கும். குறிப்பாக, கடன் பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீட்டுக்கே வட்டிக்கான வரிச் சலுகை கிடைக்கும்.

முதல் வீட்டுக்கு சலுகை

2016–17 ஆண்டில் வீட்டு கடன் வழங்கப்பட்ட சமயத்தில் கடன் பெற்றவருக்கு சொந்தமாக வேறு வீடு இல்லாத நிலையில், கடன் தொகையாக ரூ.35 லட்சம் என்ற அளவுக்குள் பெற்று, கட்டிய வீட்டின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டு இருக்கும் நிலையில் அந்த கடனுக்கு பிரிவு 80
EE
–யின்படி ரூ.50,000 வரிச்சலுகை அளிக்கப்படுகிறது.

இரண்டாவது வீட்டுக்கான கடன் பெற்றவர்களுக்கு வரிச்சலுகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டும் சலுகை பெற முடியும்.

மேலும் செய்திகள்